தொடரும் அகோர எறிகணைத் தாக்குதல்: முள்ளிவாய்க்கால் பகுதியில் சிதறிக்கிடக்கும் 3,000 பொதுமக்களின் உடலங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட 2,000 தொடக்கம் 3,000 வரையிலான பொதுமக்களின் உடலங்கள் அந்தப் பகுதிகளில் பரவலாக சிதறிக் கிடப்பதாக மருத்துவத் தொண்டர் ஒருவரை ஆதாரம் காட்டி 'தமிழ்நெட்' இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பெருமளவுக்குக் குவிந்து கிடக்கும் உடலங்களின் மத்தியிலேயே பொதுமக்கள் தற்போது இருப்பதாகவும் படையினரின் தாக்குதல்கள் தொடர்வதால் உடலங்களை அடக்கம் செய்வதற்கோ படுகாயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கோ முடியாத நிலையில் அவர்கள் அவலப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த மருத்துமனை மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் சிறிலங்கா படையினர் இலக்கு வைத்துத் தாக்கி அழித்துள்ளதால் எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தைத் தழுவும் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சனிக்கிழமை காலையில் மட்டும் 100-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக குறிப்பிட்ட மருத்துவத் தொண்டர் தெரிவித்தார். அரச மருத்துவர்களும் ஏனைய அதிகாரிகளும் தொடர்ச்சியான அகோர எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக தொடர்ந்தும் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படையினர் முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு முனையிலும் சுற்றிவளைத்து நெருங்கிச் சென்றிருப்பதால் பெரும் தொகையான மக்கள் படுகொலை செய்யப்படும் நிலை காணப்படுகின்றது. படையினருடைய இடைவிடாத அகோர எறிகணைத் தாக்குதல்களால் உணவோ குடிநீரோ இல்லாமல் பதுங்குகுழிகளுக்குள் உள்ள மக்கள் கடுமையாக அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

"படுகாயமடைந்தவர்களுக்கு உடனடிச் சிகிச்சையளித்து அவர்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்கு இடைவிடாது நடத்தப்படுகின்ற இந்த ஆட்டிலறித் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது அவசியம்" என வலியுறுத்தியிருக்கும் குறுப்பிட்ட மருத்துவத் தொண்டர், "மருத்துவ வசதிகளோ பராமரிப்போ இல்லாததால் படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு வெளியே இருந்து மருத்துவக் குழுக்கள் வந்து பணிபுரிவது அவசியம்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இவை அனைத்துக்கும் மேலாக படுகாயமடைந்திருக்கும் மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கும் அவர், உணவுப் பொருட்கள் இல்லாமையால் இந்த மக்கள் பதுங்குகுழிகளுக்குள்ளேயே மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பணிபுரிந்த மருத்துவர்களான மருத்துவர் ரி.சத்தியமூர்த்தி, எஸ்.வரதராஜா ஆகியோரும், மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபனும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Comments