48 மணிநேர சூளுரைப்பின் பின்னணியில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் பாரிய தாக்குதல்கள்
சிறிலங்கா படையணிகளின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி மீண்டும் பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளதோடு தாக்குதல்கள் இடம்பெற்று வரும் பகுதி கரும்புகை மண்டலமாகக் காட்சியளிப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அடுத்துவரும் 48 மணிநேரத்தில் படை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஜோர்தானில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் அடுத்த 48 மணிநேரத்தில் படையினர் 'பாதுகாப்பு வலய;ப் பகுதிக்குள் நுழைந்து விடுவர் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவரினதும் இந்த சூளுரைப்புகளின் பின்னணியிலேயே சிறிலங்கா படையினர் தமது மூன்று படையணிகளை ஏவி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதல்களை தொடங்கியிருக்கின்றனர்.
சிறிலங்காவின் 53, 58, 59 ஆகிய படையணிகளே இந்த தாக்குதல்களை தொடங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளன.
இந்த படையணிகள் கனரக ஆயுதங்களையும் போர் டாங்கிகளையும் பீரங்கிகளையும் இரசாயன ஆயுதங்களையும் கொண்டு மக்கள் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்தை நோக்கி அகோரமாகத் தாக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கரையோரமாக தாக்குதல்களை நடத்தியவாறு நகர்ந்த 53, 58 ஆவது படையணிகள் கரைய முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலைகொண்டவாறும்-
59 ஆவது படையணி வெள்ளமுள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை அண்மித்து நிலைகொண்டவாறும்- மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலால் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' கரும்புகை மண்டலமாகக் காட்சியளிப்பதுடன் அங்கு இருந்த பெருமளவிலான மக்கள் இதில் சிக்குண்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அப்பகுதியிலேயே காணப்படுவதாக தெரிவித்த வன்னித் தகவல்கள், எரிகாயங்களுக்கும் உடல் அவயவங்கள் இழந்தும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகள் இன்றி பெரும் மனிதப் பேரவலத்தை அங்கு எதிர்கொள்வதாகவும் தெரிவித்தன.
அத்துடன், இந்த தொடர் தாக்குதல்களால் பதுங்கு குழிகளுக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு நீண்ட நாட்களாக குடிதண்ணீர், உணவு எதுவுமே கிடைக்காத நிலையில் பசிக்கொடுமையாலும் அவர்கள் உயிர் மடிந்து வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments