மறை‌க்க‌ப்ப‌ட்ட அ‌திகாலை‌ப் படுகொலை ...50,000 பேர் எங்கே ??

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது.

இன்னும் 48 மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கடந்த வெள்ளிக் கிழமை கூறினார். பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால், கரியமு‌ள்‌ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முழுமையாக வெளியேறிவிட்டனர் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டது சிறிலங்க இராணுவம்.

ஆனால் அங்கு தங்களோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உள்ளதாகவும், அப்பகுதியின் மீது மூன்று முனைகளில் இருந்து சிறிலங்க இராணுவம் கனரக பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்திவருவதாகவும், அதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து புதினம் செய்தியாளர் தகவல் அளித்தார்.

அப்பகுதியில் தங்கியிருந்து சிகிச்சை அளித்துவந்த சர்வதேச செஞ்சிலுவை சங்க மருத்துவர்கள், சிறிலங்க இராணுவம் நடத்திய தொடர்ந்த தாக்குதல் காரணமாக தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளியேறிவிட்டதால், படுகாயமுற்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மிகக் குறுகிய பகுதியில் நேருக்கு நேர் என்ற நிலையில் புலிகளுக்கும் சிறிலங்க இராணுவத்திற்கு‌ம் யுத்தம் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க உடனடியாக போரை நிறுத்துமாறு இங்கிலாந்தும் கேட்டுக் கொண்டது.

சனிக்கிழமையன்று சிறிலங்க இராணுவத்தின் தாக்குதல் கண்மூடித்தனமாக நடந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்க இரவு பகலாக உணவின்றி, குடி நீரின்றி பதுங்குக் குழிகளிலேயே மக்கள் இருந்தனர். அப்படியிருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மேலும் பல ஆயிரக்கணக்கில் காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவோ அல்லது உணவு, குடி நீர் பெறவோ வழியில்லாமல் மேலும் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்தது.

இந்த நிலையில்தான், தங்களோடு போர் பகுதியில் உள்ள 25 ஆயிரம் மக்கள் உணவின்றியும், மருத்துவ பராமரிப்பு இன்றியும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று களத்திலிருந்த விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி கர்ணல் சூசை தொலைபேசியின் வாயிலாக அபாயக் குரல் எழுப்பியது மட்டுமின்றி, காயமுற்ற மக்களை இரட்டைவாய்க்கால், வட்டுவாகல் பகுதியின் வழியாக வெளியே கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மூலமாக ஜெனிவாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும் மக்களையும் சிறிலங்க இராணுவம் சுட்டுக் கொல்வதாக கூறிய சூசை, படுகாயமடைந்துள்ள 25,000 அப்பாவி மக்கள் மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அவரது வேண்டுகோள் இணையத் தளங்களில் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சர்வதேச சமூகம் அக்கரை செலுத்தவில்லை.

“சிறிலங்கப் படையினருடன் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர், அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறிய சூசை, “படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பொது மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுள்தான் இருக்கின்றனர். போர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. 2 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் பரவலாக எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் திங்கட்கிழமை காலை, பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து தொடர்ந்து செய்திகளை அளித்துக்கொண்டிருந்த புதினம் செய்தியாளர், அங்கு கடந்த 4 நாட்களில் மட்டும் 4,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், காணும் இடமெங்கும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன என்றும், 25,000 பேருக்கு மேல் காயமுற்று மரணத்தின் விளிம்பில் உள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

இச்செய்திகளைத் தெரிவித்துவிட்டு, இதுவே தான் அளிக்கும் கடைசி செய்தியாகவும் இருக்கலாம் என்று கூறியிருந்தார். அதன் பிறகு எந்தச் செய்தியும் வரவில்லை.

எல்லாம் முடிந்தது என்ற செய்தியே நண்பகல் உலகின் காதுகளுக்கு எட்டியது. அப்படியென்றால் ஞாயிற்றுக் கிழமை முதல் திங்கள் அதிகாலை வரை அங்கு என்ன நடந்தது?

அப்பாவிப் பொதுமக்கள் ஒவ்வொரு மணி நேரமும் பெருமளவிற்கு கொல்லப்படுவதை கண்ட விடுதலைப் புலிகள், இதற்குமேலும் போரைத் தொடர்வது தங்களோடு இருக்கும் மக்கள் அனைவரையும் சிறிலங்க இராணுவம் கொன்றொழித்துவிடவே வழிவகுக்கும் என்பதை உணர்ந்த நிலையில்தான், “துப்பாக்கிச் சத்தத்தை நிறுத்திக் கொள்ளத் தயார்’ என்று அறிவித்தனர்.

இதனையடுத்தே, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போரை நிறுத்திக்கொள்ளவும், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவும் தயார் என்று விடுதலைப் புலிகள் சார்பாக உலக நாடுகளுக்கு செல்வராசா பத்மநாதன் அறிவித்தார்.

ஆயுதங்களை மூன்றாம் உலக நாடு ஒன்றிடம் ஒப்படைக்கவும் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அத்தகவலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இவையாவும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் நடைபெற்றவையாகும். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையவும் தயார் என்று அடுத்த கட்டமாக விடுதலைப் புலிகள் அறிவித்ததோடு மட்டுமின்றி, அதுவரை சிறிலங்க படைகளுக்கு எதிராக நடத்திவந்த தாக்குதலையும் நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கான முன்னெடுப்புகள் சர்வதேச நாடுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போரை நிறுத்துவது தொடர்பாக சிறிலங்க இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் தளபதியோடு பேசுமாறு விடுதலைப் புலிகள் பணிக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியதற்குப் பின்னர், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனும் (அப்போது நடேசன் காயமுற்றிருந்தார் என்று கூறப்படுகிறது), அமைதி செயலகத் தலைவர் புலித்தேவனும் வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு 58வது படையணி முகாமை நெருங்கிய போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆயுதங்களை ஒப்படைப்பது, போரை நிறுத்துவது தொடர்பாக பேச அழைத்துவிட்டு, பிறகு அவர்களை சுட்டுக் கொன்றது ஏன்? என்ற கேள்விக்கு கிடைத்த பதில்தான் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. போரை நிறுத்துவது தொடர்பாக சிறிலங்க அரசு தரப்பு ஒப்புக் கொண்ட பின்னரும், அதற்கு ஆதரவாக இருந்த அன்னிய சக்தியின் தலையீட்டின் காரணமாகவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது மட்டுமின்றி,

அதனைத் தொடர்ந்து ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போர் நிறுத்தத்தை எதிர்பார்த்திருந்த பல நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளையும், பதுங்கு குழிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களையும் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கோரமாக படுகொலை செய்துள்ளது சிறிலங்க இராணுவம்.

2 சதுர கி.மீ. பரப்பளவில் எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடந்த பிணங்களின் மீது ரசாயண திரவத்தை ஊற்றி பற்ற வைத்து, அங்கு கொல்லப்பட்டவர்களின் கணக்கு உலகத்திற்கு தெரியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சிறிலங்க இராணுவம். அதுதான், முன்னணியில் சிறிலங்க இராணுவ வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, பின்னணியில் கரும்புகை மண்டல‌ம் தெரிந்த புகைப்படக் காட்சியாகும்.

எந்த மக்களின் சுதந்திர உரிமையை மீட்கவும், பாதுகாக்கவும் போராடினார்களோ அந்த மக்கள் பெருமளவிற்கு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதை உணர்ந்த புலிகள் சரண்டைய முடிவெடுத்து, வெள்ளைக் கொடி பிடித்து வந்த நிலையில், அவர்களும், யாருக்காக அவர்கள் சரண்டைய முற்பட்டார்களோ அந்த மக்களையும் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது சிறிலங்க இராணுவம்.

திங்கட்கிழமை அதிகாலை முதல் நடந்த இந்தக் கோர வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் 25,000 பேருக்கு மேல் 50,000 பேர் வரை என்கின்றன செய்திகள்.

இதற்கு அடிப்படை என்னவென்றால், வன்னி பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 50,000த்திலிருந்து 70,000 பேர் வரைதான் என்று சிறிலங்க அரசு கூறியது. இதனை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறினார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இதனை மறுத்த முல்லைத் தீவு மாவட்டத்தின் அரசு முகவர், அங்கு 83,000க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 3,30,000 பேர் உள்ளனர் என்றும் அவர்களுக்கு ஒரு வார உணவுத் தேவை 3,600 டன்கள் என்றும் கூறினார்.

தற்பொழுது பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்களின் கணக்கு 2,75,000 என்று சிறிலங்க அரசே கூறியுள்ளது. அப்படியானால், மீதமிருந்த 55,000 மக்கள் எங்கே?

சூசை அளித்த தகவலும், இந்த கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 50,000 பேருக்கு மேல் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது புலனாகிறது. ஆனால், அங்கிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்றுதான் சிறிலங்க அரசும், இராணுவமும் கூறின. அப்படியானால் அந்த இடத்திற்கு இன்றுவரை ஊடகங்களையோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ அனுமதிக்க மறுப்பது ஏன்?

ஏனென்றால், பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை, அழிக்கப்பட்ட மக்களின் தடங்களை, ஆதாரத்தை அழிக்கும் முயற்சி அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதனை மறைக்கத்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு செய்தியை, பிறகு வீடியோ காட்சிகளை உலகத்திற்குக் காட்டி திசை திருப்பிவிட்டது சிறிலங்க அரசு.

“ஒரு மாபெரும் மனிதப் படுகொலை நடத்தி போரை முடித்தது கொழும்பு” என்று திங்கள் காலை தமிழ்நெட்.காம் வெளியிட்ட செய்தியின் பொருள் இதுதான்.

அ‌ங்கு நட‌ந்த மானுட‌ப் படுகொலையை மறை‌க்க, தடய‌ங்களை அ‌ழி‌க்க ‌சி‌றில‌ங்க அரசு முய‌ற்‌சி‌த்து வருவதா‌ல்தா‌ன் ஐ.நா.வையு‌ம், ச‌ர்வதேச செ‌ஞ்‌சிலுவை‌ச் ச‌ங்க‌த்தையு‌ம் அ‌ப்பகு‌தி‌க்கு‌ச் செ‌ல்ல அனும‌தி மறு‌க்‌கிறது எ‌ன்று ம‌னித உ‌ரிமைக‌ள் தொட‌ர்பான ச‌ட்ட அ‌றிஞ‌ர் பேரா‌சி‌ரிய‌ர் ‌பிரா‌ன்‌சி‌ஸ் பா‌ய்‌ல் கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சிறிலங்காவில் அண்மையில் நடந்த சண்டையில் என்ன நடந்தது என்று சர்வதேச சமுதாயத்திற்கு தெரிய வேண்டியது முக்கியம் என்று சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments