மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் போராட்டம் தொடரும் BBC க்கு பா.நடேசன் செவ்வி

மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சீ சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள், அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புக்களினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை தாம் மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் தங்களுடன் இணைந்து வாழவே பெரிதும் விரும்புவதாக பா.நடேசன் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது கனரக ஆயுத தாக்குதல் நடத்தப்படாது என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்த போதிலும் அடிக்கடி கனரக ஆயுதங்களினால் படையினர் மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்படும் கனரக ஆயுதத் தாக்குதல்களினால் அதிகளவான பொதுமக்கள் நாள்தோறும் இழப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் இலங்கையிலேயே இருப்பதாகவும், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் நேரடித் தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக பா.நடேசன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மட்டும் சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். 

Comments