"வன்னி மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனிதாபிமான உதவி கிடைக்க ஆதரவளியுங்கள்": அனைத்துலக சமூகத்திடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"தமிழர்களுக்கான உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளைத் திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதால், பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கும் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள தமிழர்களுக்காக நேரடியாகவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த மனிதாபிமான உதவிகள் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்துலக சமூகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இந்த முயற்சியைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தார்மீக, அரசியல், மற்றும் தள வசதி ஆதரவை அனைத்துலக சமூகம் வழங்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த சில நாட்களில் மட்டும் பட்டினியால் ஒன்பது பேர் மரணமடைந்திருப்பதுடன், இவ்வாறு மரணமடைபவர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் பெருமளவுக்கு அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதையும் உங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.
இங்குள்ள 1,65,000 மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலையில் புலம்பெயர்ந்த மக்களுடைய இந்த முயற்சி மிகவும் அவசரமானதாகவே இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா.வும் ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதுடன், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் அனைத்தையும் மீறும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்கின்றது.
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு 2,474 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் தேவை என உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டிருந்த போதிலும், 2008 ஏப்ரல் 2 ஆம் நாள் 60 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் மட்டுமே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.
ஆனால், அதன்பின்னர் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்குத் உலக உணவுத் திட்டம் தயாராகவிருந்த போதிலும், உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளில் இருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்கா அரசினால் தடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களிடமும் விடுதலைப் புலிகள் அமைப்பு வலியுறுத்திய போதிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய இந்த போர்க் குற்றத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.
அனைத்துலக சமூகத்தின் அக்கறைகளைக் கவனத்திற்கொள்ளாமல் புறந்தள்ளி, தன்னுடைய இனப்படுகொலை நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்துகொண்டிருப்பதற்கு எதிராக அனைத்துலக சமூகத்தினால் இதுவரையில் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
பல்வேறு தடுப்புக்காவல் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களும் வெளிநாட்டு அரசாங்கங்களும், விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் உள்ள 1,65,000 மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.
எமது மக்கள் உடனடியாக ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்த நிலைமை காரணமாகத்தான் நேரடியாக மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தூண்டப்பட்டனர்.
எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களினாலும் அவதிப்படும் எமது மக்களின் நிலை திட்டமிட்ட முறையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் தடுத்துவைத்திருப்பதால் மேலும் மோசமாகியிருக்கின்றது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடங்கியுள்ள இந்தப் பணிக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டிய பொறுப்பு ஐ.நா.வுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இருக்கின்றது." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments