"ஈழத் தமிழர்களுக்கு நீங்களே இன்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை": ஜெயலலிதாவுக்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து
ஈழத் தமிழர்கள் படும் இன்னல் கண்டு அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்து வருவதற்கு கனடா வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடியத் தமிழர் பேரவை நன்றி கூறுகின்றது. அன்னை இந்திராவின் பின் நீங்கள் ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு அவர்கள் துயர் துடைக்க நீங்கள் விழைவது - இக்கட்டான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது" என்று கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடிய தமிழர் பேரவையின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழத் தமிழர்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக்காக 1948 இல் இருந்து 1983 வரை நீண்டகால வன்முறையற்ற போராட்டங்களை நடத்திய போதிலும் பதிலாகப் பெற்றுக்கொண்டது இனத்துவேச சிங்கள அரசின் வன்முறையினையே.
இதன்பின்னர் பலவிதமான சமாதான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எவையுமே கைகூடாத நிலையில் இழந்துபோன இறைமையினை நிலைநாட்டுவதற்காக வேறு வழியின்றி ஈழத்தமிழ் மக்கள் சிங்கள அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மேலும் பல மேற்குலக நாடுகளின் போர்நிறுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தாங்கள் தற்காப்புக்கான போரை விடுதலைப் புலிகள் நிறுத்திய போதிலும் இலங்கை அரசு அதனை நிராகரித்து தொடர்ச்சியாக தமிழ் மண்ணில் இரத்தக் களரியினை ஏற்படுத்தியவண்ணம் இருக்கின்றது.
கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 6,500 தமிழ் மக்கள் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான வன்முறையினால் கொல்லப்பட்டும் 14,000 மக்கள் காயப்பட்டும் உள்ளனர்.
இன்னும் நாளாந்தம் மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர். குடும்பம் குடும்பமாக பூக்களும் பிஞ்சுகளுமாக அழிக்கப்படுகின்றனர். ஒன்றுமறியாப் பாலகர்கள் உடல் சிதறி இறந்து போகின்றனர். வானமே கூரையான திறந்தவெளிச் சிறைகளில் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி உயிருக்கு உத்தரவாதம் இன்றி ஈழத்தமிழினம் தவிக்கின்றது.
மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து நல்வழி காட்டிய தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்கள் அறிஞர் அண்ணாத்துரை, காமராசர், மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் வரிசையில் தங்களையும் உலகத் தமிழர்கள் காண்கின்றனர்.
ஏப்ரல் 25 ஆம் நாள் சேலத்தில் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் வரலாற்றிலேயே ஒரு மிக முக்கியமான உரையாகக் கருதப்படுகின்றது. பூமிப்பந்தில் தமிழர் வாழும் இடங்கள் அனைத்திலுமே இந்த உரை ஒரு தாரக மந்திரமாக அனைத்து வீடுகளிலும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள், இணையத் தளங்கள் ஆகியவற்றில் இந்த உரைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மத்தியில் ஆய்வாளர்கள் அவைகளிலும் மிகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஓர் உரையாகக் காணப்படுகின்றது.
உங்களது நல்லாட்சி தமிழக மக்களுக்கு நீண்ட நெடும் காலம் கிடைக்க வேண்டும். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் உங்கள் ஆட்சி ஒரு தென்பையும் தைரியத்தையும் வழங்கும்.
நடைபெறுகின்ற தேர்தலில் ஊங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற எங்கள் நல்லாசிகள் உங்களுக்கு உரித்தாகுக.
வாழ்க தமிழகம்! வாழ்க தமிழீழம்!!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்திகள்:
Ø "உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும்": ஜெயலலிதாவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து
Ø இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து அமைதிகாண் அமைப்பு வாழ்த்து
Ø எம்.ஜி.ஆரின் கொள்கை உறுதிப்பாட்டை உங்களில் காண்கின்றோம்: ஜெலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு
Ø உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு
Ø இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி
Ø தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை
Ø உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்
Ø நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து
Ø "ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!
Ø ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு
Ø ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!
Comments