நோர்வேயில் நாளை மறுநாள் வரலாற்று சிறப்புமிக்க 'வட்டுக்கோட்டை தீர்மானம்' மீதான மீள் வாக்குப்பதிவு

நோர்வே தமிழர்கள் மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க 'வட்டுக்கோட்டை தீர்மானம்' மீதான மீள் வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (10.05.09) நடத்தப்படவிருக்கின்றது.

ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையையும், வடக்கு - கிழக்கு இணைந்த பாரம்பரிய தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வலியுறுத்தி, அவற்றின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உருவாக்கப்படுவதே தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவேற்றும் நிரந்தரத் தீர்வு என 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு இதுவாகும்.

நோர்வே வாழ் தமிழ் மக்களின் தீர்ப்பைக் கணிக்கும் இம்முயற்சிக்கான ஒழுங்கமைப்பினை ஊத்துறூப் (www.utrop.no) எனப்படும் பக்கச்சார்பற்ற பல்லின பண்பாட்டு நோர்வேஜிய ஊடகம் முன்னெடுக்கின்றது.

இந்த வாக்குக் கணிப்பானது, பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நோர்வேஜிய நடுவர்களால் நடத்துப்படும் என ஊத்துறூப் இணைய நாளிதழ் மற்றும் அதன் வார இதழ் ஆசிரியர் மயூரன் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலச் சூழலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகமானது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிராகரிக்க முடியாத வகிபாகத்தைக் கொண்ட சக்தியாக பரிணமித்துள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், உண்மையான, முழுமையான ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் சுதந்திர வேணவாவினைப் பதிவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையாகும்.

எனவே, அதனை அனைத்துலக சமூகத்தின் முன் மீளவும் எடுத்துரைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் புலம்பெயர் சமூகம் இன்று நிற்கின்றது என இந்த வாக்குக்கணிப்பு செயல் முன்னெடுப்பின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் தெரிவித்தார்.

தலைநகர் ஒஸ்லோ உட்பட பேர்கன், துறொண்ஹைம், ஸ்ரவாங்கர், ஓலசுண்ட் ஆகிய பெருநகரங்களிலும் மற்றும் துறொம்சோ, புளூறோ, போர்ட, நார்வீக், மோல்ட ஆகிய தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் வாக்கெடுப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஓஸ்லோவில் மூன்று வாக்குச் சாவடிகளும் ஏனைய நகரங்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் உறுதிப்படுத்தலை முதற்தடவையாக அண்மையில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும

நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படவுள்ள இந்த வாக்குக் கணிப்பு தொடர்பாக பிரான்சில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவின் இனப்பிணக்கு விவகாரத்தில், தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வுக்கு ஏற்றதான அடிப்படைகள், இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து பிரகடனம் செய்த வட்டுக் கோட்டைத் தீர்மானத்தில் வலுவாக உள்ளன என்றார்.

கி.பி.அரவிந்தன் மேலும் தெரிவிக்கையில்,

1976 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் வெளிக்கொணரப்பட்டதும், 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் தமிழர் தரப்பை வெற்றியீட்டச் செய்ததுமான இத்தீர்மானத்தை மீள் உறுதிப்படுத்துதல் இன்றைய காலச்சூழலில் அவசியமானதாகும்.

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு சார்ந்த, அனைத்துலக சமூகத்துடனான புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் உரையாடலுக்கு, இத் தீர்மானம் மீதான மீள் உறுதிப்படுத்தல் பொருத்தமான வழிமுறையாக அமையும்.

இது தமிழ் மக்களின் அரசியல் அவாக்களுக்கான மிகப் பொருத்தமான, பலமான வலியுறுத்தலாக அமையும் என்ற வகையில் நோர்வேயில் நடத்தப்படவுள்ள இந்த வாக்குக் கணிப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது என்றார்.

இலங்கைத் தீவில் பிறந்து, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், நோர்வேயில் பிறந்த இளைய தலைமுறையினராயின் இலங்கைத் தீவில் பிறந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பரம்பரையாக (தாய் அல்லது தந்தை இலங்கைத் தமிழ் பரம்பரையாக இருந்தாலும் பொருந்தும்) கொண்டவர்களும் வாக்களிக்கும் உரிமை உடையவர்கள் ஆவர்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்கும் உரிமை உடையவர்களாக கொள்ளப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது நிறையும் அனைவரும் வாக்களிக்க முடியும்.

அதாவது, 1991 ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும் பிறந்த அனைவரும் வாக்குரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வாக்களிக்கச் செல்லும்போது, கடவுச்சீட்டு (passport) அல்லது நோர்வே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அகதி அடையாள அட்டை வாக்குப்பதிவுக்கான அத்தாட்சிப்பத்திரமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

வாக்குக் கணிப்பு தொடர்பான (வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ள இடங்கள், நேர விபரம் உட்பட்ட) அனைத்து நடைமுறைத் தகவல்களையும் www.tamilvalg.com என்ற இணையப் பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும்

வாக்குப்பதிவு சம்பந்தமான விபரம்:

இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு
வாக்களிப்பில் முழுமையான இரகசியம் பேணப்படும்
வாக்களிக்க வருபவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் எதுவும் எங்கும் பதியப்படவோ பேணப்படவோ மாட்டாது. (வயது, பால் தவிர)
பதிவாகும் விபரம்
ஆண் - பெண் விபரம்
18 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தொகை
27 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் தொகையும்

வாக்களிக்கும் தகுதி பெற்றோர்:

இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களில்

1991 ஆம் ஆண்டும், அதற்கு முன்னரும் பிறந்து நோர்வேயில் வசிப்பவர்கள் இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் சட்டபூர்வ வாழ்க்கைத் துணைவர்கள் இலங்கைத்தீவில் பிறந்து தமிழைத்தாய் மொழியாகக் கொண்டவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் (தாய் அல்லது தகப்பன் இலங்கைத் தமிழ்ப் பரம்பரையாக இருந்தாலும் பொருந்தும்) அத்தாட்சிப் பத்திரம் (பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்று)

கடவுச்சீட்டு [Passport (எந்த நாட்டில் வழங்கப்பட்டிருந்தாலும்)]

நோர்வேஜிய அரசால் வழங்கப்பட்ட அகதி அடையாளப் பத்திரம்

குறிப்பு:

இலங்கைத் தமிழ்ப் பரம்பரையில் பிறந்து வெளிநாட்டில் பிறந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் (ஊத்றுப் முகவரிடம் தமது வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்)

மேற்கூறிய அடையாளங்கள் எதுவும் இல்லாமல் நோர்வேயில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மாத்திரம் கொண்டுவந்து, ஊத்றுப் முகவரிடம் தமது வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Comments