சென்னையில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அசோக் சிங்கல் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் தமிழ் பேசும் இந்துக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து வருகிறது.
இலங்கை நாட்டில் இருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசால் முடியவில்லை.
இலங்கையில் இன்று நடப்பது போன்றே கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்கள் அகதிகளாய் வந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் வங்காளதேசம் உருவானது.
இன்று இலங்கையிலும் அதே சூழ்நிலை தான் உள்ளது. அதே நேரத்தில் இந்திய அரசுக்கு உறுதியான செயல் திட்டமும், சாதுர்யமும் இல்லை.
இலங்கை பிரச்சினை என்பது வெறும் தமிழர்கள் பிரச்சினை மாத்திரமல்ல. இது உலகளாவியுள்ள இந்துக்களின் பிரச்சினை. இலங்கை இந்துக்களுக்கு, பாரதத்தில் உள்ள நூறு கோடி இந்துக்களும் பக்கபலமாக நின்று இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குழம்பி போய் உள்ளதோடு, சரியான தீர்வை கூற முடியாமல் மக்களை குழப்பி வருவதால் இந்த பிரச்சினை வெறும் தமிழர் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அரசு அங்கே தமிழ் பேசும் இளைஞர்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தில் சிங்களவர்களை குடியேற்றி வருகிறது. இவையெல்லாம் நடப்பதற்கு காரணம் மத்திய அரசு பலவீனமாக இருப்பது தான்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்துக்களுக்கு விரோதமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம் என்றார் அவர்.
Comments