பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பது போல தமிழரைக்காட்டி உலக நாடுகளிடம் பிச்சை கேட்கும் சிறிலங்கா

யுத்தக்களத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றார்கள் என்பது பொய்யா? இன்னும் பல நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள் என்பது பொய்யா?

யுத்த பிரதேசத்தில் உள்ள ஒன்றரை இலட்சம் மக்களுக்கு மாதக் கணக்கில் உணவுப் பொருட்களோ, மருந்துப் பொருட்களோ அனுப்பவில்லை என்பதும், அங்கு பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? எனக் கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எங்களுக்காக நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிகள் என நம்பினால் அவர்களைப் பட்டினி போடாதீர்கள். அவர்களைக் கொல்லாதீர்கள், அவர்களை அகதிகளாக்காதீர்கள். அவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அவர்களது கடமைகளை அவர்களே செய்ய வழிவிடுங்கள். ஊடக அமைச்சர் என்பதற்காக தொடர்ந்து பொய் பேசாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும், சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை அனுப்புவதாகவும் அவர்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா கடந்த 7ஆம் திகதியன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் முகமாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது அரசாங்கத்திற்கும், அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறது. சர்வதேசத்திற்கு நாம் பொய்யான தகவல்களைக் கொடுப்பதாக அமைச்சர் ஆதங்கப்படுகின்றார். என்ன பொய்யான தகவல்களை நாம் கொடுத்தோம் என்பதை அரசாங்கமோ, அமைச்சரோ கூறட்டும் பார்க்கலாம்.

யுத்தக்களத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் நாளாந்தம் கொல்லப்படுகின்றார்கள் என்பது பொய்யா? இன்னும் பல நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்படுகின்றார்கள் என்பது பொய்யா? யுத்த பிரதேசத்தில் உள்ள 150,000 மக்களுக்கு மாதக் கணக்கில் உணவுப் பொருட்களோ, மருந்துப் பொருட்களோ அனுப்பவில்லை என்பதும், அங்கு பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? இலங்கையின் குடிசனத்தில் ஒரு பகுதியாகிய வன்னித் தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் விமானக்குண்டு வீச்சாலும், பல்குழல் பீரங்கி வீச்சாலும் கொலை செய்கிறது என்பது பொய்யா?

கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை ஏறத்தாழ 8000 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 16,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதும் பொய்யா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல் அகதிகளாக்கி வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், இன்னும் அவை பூரணப்படுத்தப்படவில்லை என்பதும் பொய்யா?

அகதி முகாம்கள் அனைத்தும் இராணுவ நிர்வாகத்திற்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றதென்பதும் அந்த மக்களுக்கான சகல விதமான ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் கவனிப்பு இல்லாமல், நாளாந்தம் வயோதிபர்களும், குழந்தைகளும் உங்கள் நலன்புரி நிலையங்களில் இருக்கின்றார்கள் என்பதும் பொய்யா? இவற்றில் எதையாவது பொய்யென இலங்கை அரசு மறுக்கட்டும் பார்க்கலாம்.

மாறாக ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் இருந்த வன்னிப் பிரதேசத்தில் 70,000 பேர் இருப்பதாக உலகம் முழுக்க பொய்யைக் கூறி 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை கடந்த 6 மாதத்துக்கு மேலாக பட்டினி போட்டவர்கள் யார்? 70,000 மக்கள் இருந்திருந்தால் 190,000 மக்கள் இன்று எப்படி உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தார்கள். இன்னும் ஏறத்தாழ 150,000 மக்கள் புதுமாத்தளனில் இருப்பதாக நாங்கள் கூறுகின்றோம். 20,000 பேர் தான் இருப்பதாக நீங்கள் கூறுவதுடன் அவர்களுக்கு உணவோ, மருந்தோ அனுப்புவதுமில்லை.

நீங்கள் உருவாக்கிய பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய பீரங்கிகளையோ, விமானக்குண்டு வீச்சையோ நடத்துவதில்லையென நீங்கள் கடந்த 27.04.2009 இல் அறிவித்தீர்கள். ஆனால், எப்போதாவது அதனை நிறுத்தியதுண்டா? ஒவ்வொரு நாளும் அப்பாவி மக்கள் மீது பாரிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது உண்மை இல்லையா? புலிகளை அழிக்கின்றோம். பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் உங்கள் யுத்தத்தில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களா இல்லையா?

நாங்கள் கூறுவது பொய்யாயின் சர்வதேஊடகவியலாளர்களை ஏன் அனுப்ப மறுக்கின்றீர்கள்? நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையாயின் த.தே.கூட்டமைப்பை, ஏனைய எதிர்க்கட்சிகளை ஏன் முகாம்களுக்கு அனுப்ப மறுக்கின்றீர்கள். நீங்கள் செய்வதெல்லாம் சரியாயின் ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவை முழுமையாக இங்கு இயங்க வைக்க ஏன் மறுக்கின்றீர்கள்? யுத்தப் பிரதேசத்திற்குள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான குழுக்களை அனுப்ப ஒப்புக் கொண்ட நீங்கள் அவர்களை அனுமதிக்க ஏன் தயங்குகின்றீர்கள்? நீங்கள் உண்மை பேசுபவர்களாக இருந்தால் ஏன் இராணுவ இழப்புக்கள் தொடர்பான உண்மைகளை வெளியிட மறுக்கின்றீர்கள்? யார் பொய் பேசுகின்றார்கள் யார் உண்மை பேசுகின்றார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் உலகம் தீர்மானிக்கும்.

அமைச்சரின் அடுத்த குற்றச்சாட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளுக்கு சாதகமாக பேசுகின்றார்கள் என்பது... தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களின் விடுதலைக்காக யார் பேசினாலும் உங்களுக்கு அவர்கள் புலியாகத்தான் தோற்றுவார்கள். நாடாளுமன்றத்திலும்,வெளியிலும் நீங்களும் உங்கள் ஆங்கில, சிங்கள ஊடகங்களும் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றீர்கள். புலிகளும் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிறார்கள். நாங்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கிறோம். எனவே எங்கள் எல்லோரையும் நீங்கள் புலிகளாகத்தான் பார்ப்பீர்கள்.

புலிகளுக்கு முன்னர் இருந்த தமிழர் தலைவர் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் அவர்கள் இருந்த காலத்தில் உங்கள் கண்களுக்கு புலிகளாகத்தான் தோற்றினார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நீங்கள் புலியாக பார்ப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. யுத்தத்தை நிறுத்துங்கள், மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்று கூறும் நாம் உங்களுக்கு புலிகளாகத் தெரிகின்றோம். யார் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை. யுத்தத்தை தொடர்ந்து நடத்துங்கள் என்போர் உங்களுக்கு நண்பர்களாக தென்படுகின்றார்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு புலியாகத் தான் தெரியும்.

யுத்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மயான பூமியாக்கப்பட்டது மாத்திரமல்ல. தென்பகுதி பொருளாதாரமும் சீரழிந்துள்ளது என்பதை நாம் மாத்திரமல்ல சிங்கள மக்களும் அறிவார்கள். உலக வங்கியிடம் பல மில்லியின் டொலர்களுக்காக வரிசையில் நிற்பதையும் நாம் அறிவோம். இன்று உங்கள் பொளாதாரத்தை மீட்க பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பது போல தமிழரைக்காட்டி பிச்சையெடுப்பதையும் நாம் பார்க்கின்றோம். ஆடு நனைகிறது என ஒநாய் அழுததாம் என தமிழில் ஒரு பழமொழி உண்டு. தமிழ் மக்களின் துன்பம் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பேசும் போதும் எங்களுக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

எனவே, எங்களுக்காக நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிகள் என நம்பினால் அவர்களைப் பட்டினி போடாதீர்கள். அவர்களைக் கொல்லாதீர்கள், அவர்களை அகதிகளாக்காதீர்கள். அவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கி அவர்களது கடமைகளை அவர்களே செய்ய வழிவிடுங்கள். ஊடக அமைச்சர் என்பதற்காக தொடர்ந்து பொய் பேசாதீர்கள். ஏனைய அமைச்சர்களுக்கும் இது பொருந்துமென்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Anonymous said…
salem areavuku cd varalainga. athukku maara congressla erunthu voteku 100 rupees amount nethiku fulla supply ayiduchu. Yenunga antha cd erunthu salem areavuku sikram anupunga. illana thangabalu winbaluva ayiuvaaru.