மனிதப் பேரவலம் தீவிரமாகும் காலம் இது!

இப்பத்தி வாசிக்கப்படும் போது அல்லது அடுத்து வரும் நாள்களில் வன்னியில் பெரும் இனப்படுகொலை இரத்தக்களரிக் கொடூரம் அரங்கேறப் போகின்றது என எச்சரிக்கப்படுகின்றது. போர் மேகங்கள் கொடூரமாகச்சூழ்ந்து, அதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. நாளை மறுதினம் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்து மாலைக் குள் ஓரளவு முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிடும். அதன் பின்னர் புதிய அரசை அமைக்கும் பேரப் பேச்சுகள் முடுக்கி விடப்படும். அந்தப் பல தரப்பு முயற்சிகளின் பின்னர் புதுடில்லியில் புதிய அரசு தெரிவாகி, பதவி யேற்று அதிகாரத்துக்கு வர இன்னும் சில நாள்கள் பிடிக்கும்.

ஆக, தற்போதைய அரசு அதிகாரத்தில் நீடிக்குமா என்ற சந்தேகத்தில் அதிகாரமிழந்து தடுமாறிக் கொண்டிருக்க, புதிய அரசு தேர்வாகிப் பதவி ஏற்கும் வரை குறைந்த பட்சம் ஒருவார காலத்துக்காவது புதுடில்லியில் அதி காரம் செலுத்தும் அரசுத் தலைமை இல்லை என்ற நிலைமை நீடிக்கும்.

அதுவும், தற்போது பதவியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் வெளிப்படையாகவே விட்டேத்தியாக பொறுப்பற்று செயற்பட்டது என்பது பகிரங்கமான உண்மை. தேர்தலில் தமிழகத்தில் தனக்குப் பாதிப்பு ஏற் பட்டு விடக்கூடாது என்பதற்காக ஈழத் தமிழர்கள் யுத்தத் தில் கொன்றொழிக்கப்படுவதைத் தான் ஆட்சேபிப்பது போல அது காட்டிக் கொண்டது.

இப்போது தேர்தல் முடிந்து விட்டது. தேர்தல் சமயத்திலேயே ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுக்க நாதியற்று இருந்த காங்கிரஸ் அரசு ஆயுதங்கள், தளபாடங்கள், துருப்புகளுக்குப் பயிற்சி என இலங்கைப் படைகளுக்கு இராணுவ உதவிகளை வழங்கி இனப்படுகொலைக்குத் துணைபோன மன்மோகன் அரசு தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவியேற்கவுள்ள சமயத்தில் மட்டும் பொறுப்புடன் நடந்தும் கொள்ளும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது.

எனவே, இதுதான் சமயம் எனப் பார்த்து கொழும்பு தனது கைவரிசையைக் காட்டத் தயாராகி விடும் தயா ராகி விட்டது என்பதே நோக்கர்களின் அவதானிப்பு ஆகும்.
முல்லைத்தீவில் யுத்தப் பிரதேசத்தில் புலிகளின் சகல நடவடிக்கைகளும் அடுத்த 48 மணி நேரத்தில் முடிவுக் குக் கொண்டு வரப்படும் என்ற இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவிப்பை இந்தப் பின்புலத்தில் பொருத்திப் பார்த் தால், வன்னியில் ஓடப்போகும் இரத்த ஆறின் கொடூரம் கோரம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு ஊகித்து விடமுடியும்.

இத்தகைய கொடூரம் மனிதப் பேரவலம் அரங்கேறப் போவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நேற்று முன்தினமே செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி சர்வதேச சமூகத்துக்கு எச்சரித்து விட்டது.

"தாக்குதல் தவிர்ப்புப் பிரதேசம்" அல்லது "பாதுகாப்பு வலயம்" எனக் கொழும்பு அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது கனரகத் தாக்குதல்கள் மிகக் கொடூரமாக வும், கோரமாகவும் தொடர்கின்றன. ஐ.நா.தொண்டுப் பணியாளர்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர் கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் என எவரையுமே அப் பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்து வைத்துக்கொண்டு, "சாட்சியம் ஏதுமற்ற போர்க் கொடூரம்" ஒன்றைக் கொழும்பு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அங்கு இடம்பெறும் அராஜகங்கள் குறித்து ஐ.நாவிலிருந்து சாதாரண சுயாதீன அமைப்புகள் வரை யார் குரல் எழுப்பினாலும் அத்தரப்புகளைப் "புலிகளுக்கு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் குற்றவாளிகள்" என அடையாளப்படுத்த எத்தனிக்கின்றது கொழும்பு.

அது மட்டுமல்ல. அவ்வாறு உண்மைகளை தமிழர் களுக்கு நேர்ந்துள்ள படுபயங்கர அவல நிலைமையை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து, தமிழர்களைக் காப் பாற்ற மன்றாடி, இறைஞ்சும் தரப்புகளுக்கு எதிராகத் தனது சட்டத்தை ஏவி விடவும் கொழும்பு பின்நிற்பதில்லை.

சாட்சியம் ஏதுமற்ற யுத்தத்தை முன்னெடுப்பதை உறுதிப்படுத்தும் கொழும்பு, அந்த யுத்தத்தில் தமிழர் களுக்கு இழைக்கப்படும் பெருங் கொடூரங்கள் குறித்துக் குரல் எழுப்பும் தரப்புகளை, அக் கொடூரங்களுக்கான சாட்சியங்களைத் தரும்படி கோருகின்றது. அவற்றைச் சமர்ப்பிக்க இயலாத நிலையில் இருக்கும் தமிழ்த் தலை வர்களுக்கு எதிராகத் தனது சட்டத்தின் அரூபக் கரங் களை ஏவி விடுகின்றது.

பொதுமக்களுக்கு அப்பாவித் தமிழர்களுக்கு எதி ராக இழைக்கப்பட்ட யுத்தக் கொடூரங்கள் குறித்து நாடா ளுமன்றுக்கு வெளியே பிரஸ்தாபித்து, அறிக்கை வெளியிட்டு, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. போன்றோருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அரசு சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் கடந்த வார இறுதி யில் மூன்று நாள்களில் மூவாயிரம் தமிழ் மக்கள் படு கொலை செய்யப்பட்டு, சுமார் இருபதாயிரம் தமிழர்கள் படு காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், இத்தகைய இனவழிப்பு இரத்தக்களரி அங்கு கொடூரமாகக் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் ஒன்று கூடி இப் போது அறிவித்திருக்கின்றார்கள். கூட்டாகக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர்கள் அனைவருக்கும் எதிராகவும் அரச மேலிடத்தின் ஆவேசம் பாயுமா என்பது தெரியவில்லை.

மக்கள் பேரழிவு குறித்து அலட்டிக் கொள்ளாமல் யுத்த தீவிரத்தில் முனைப்பாக இருப்பவர்களுக்கு,மக்கள் பிரதிநிதிகள் அடக்கி ஒடுக்கப்படுவதும் ஒரு பெரிய விடயமாக இருக்கமாட்டாது என்பது கவனிக்கத்தக்கது.

[நன்றி - உதயன்]

Comments