முள்ளிவாய்க்கால் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்: மருத்துவமனை செயலிழந்தது; நுற்றுக்கணக்கானவர்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா சிறிலங்கா படையினர் இன்று நடத்திய அகோரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருமளவு நோயாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், கடுமையான சேதத்துக்குள்ளான தற்காலிக மருத்துவமனையும் செயல் இழக்கும் நிலைக்குச் சென்றிருக்கின்றது.

இன்றைய தாக்குதலில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 65 பேரில் 39 பேர் மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற இரத்தத்தை உறையவைக்கும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இவர்கள் மருத்துவ ஆலோசனைகளுக்காக மருத்துவமனைக்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தங்கியிருந்த பகுதியை இலக்கு வைத்து படையினர் நடத்திய தாக்குதலில் அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினரால் இன்று புதன்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பலருடைய உடலங்கள் வீதிகளில் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும் படுகாயமடைந்த பலருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீதும் எறிகணைகள் பல வீழ்ந்து வெடித்ததில் மருத்துவமனையில் இருந்த 65 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 117 பேர் காயமடைந்ததாகவும் வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள மகப்பேற்று சிகிச்சைப் பகுதியில் மருத்துவ ஆலோசனைகளுக்காக காத்திருந்த 39 மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களும் எறிகணைத் தாக்குதலால் கொடூரமான முறையில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

இங்கு கோபாலகிருஷ்ணன் என்ற மருத்துவப் பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கின்றார். இதனைவிட கொல்லப்பட்ட தொண்டர் மருத்துவர் குமார் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். இதனைவிட அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். இவர் மயூரன் சிவகுருநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது தாயாரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் மக்கள் வசித்துவந்த தற்காலிக கூடாரங்கள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் பெரும் தொகையான மக்கள் தமக்கு இருப்பதற்கு கிடைத்த சிறிய கூடாரங்களைக் கூட இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையை இலக்கு வைத்தே இன்றைய தாக்குதல்கள் பெருமளவுக்கு இடம்பெற்றிருப்பதால் மருத்துவமனை பாரிய அளவில் சேதடைந்திருப்பதுடன், முற்றாகச் செயல் இழந்து செயற்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை மீள செயற்படுத்த முடியாத நிலையில் மருத்துவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாலும், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை அங்கு உருவாகியிருப்பதாலும் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைவிட இந்த தற்காலிக மருத்துவமனையில் 75-க்கும் அதிகமான உடலங்கள் அதனைப் பொறுப்பெடுத்து அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லாததால் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு வைக்கப்பட்டுள்ள உடலங்களை மருத்துவமனைப் பகுதியிலேயே ஒரு பாரிய குழியை வெட்டி அடக்கம் செய்வதற்குத் திட்டமிடப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று படையினர் மேற்கொண்ட இந்தக் கடுமையான எறிகணைத் தாக்குதல்களையடுத்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும், காயமடைந்த நோயாளர்களை ஏற்றிச்செல்வதற்காகவும் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் இன்றும் பொருட்களை அங்கு விநியோகிக்க முடியாமல் நீண்ட நேரமாக கடலில் காத்திருந்த பின்னர் திருகோணமலைக்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இப்பகுதியில் காணப்படும் பாரிய உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலைதான் காணப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்:

Ø முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை

Ø முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்

Comments