நளினி - பிரியங்கா சந்திப்பின் பின்னரே தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்தது - ஜெயலலிதா தெரிவிப்பு

வேலூர் சிறையில் இருக்கும் நளினியை பிரியங்கா காந்தி சந்தித்த பின்னரே இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. எனவே, இந்த சந்திப்பில் நடந்தது என்ன என்பது குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஸ்ரீபெரும்பூதூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தேர்தல் தோல்வி பயம் காரணமாக மருத்துவமனையில் முடங்கியுள்ள நிலையில், தனி ஈழம் பெற்றுத் தர முயற்சிப்போம் என கருணாநிதி சொல்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது இதனை செய்யத் தவறிய அவர் தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டவுடன் தனி ஈழம் பேசுவது மக்களை ஏமாற்றும் வேலை.

இலங்கை (சிறிலங்கா) இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்த போதும், இலங்கை (சிறிலங்கா) இராணுவ வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளித்த போதும் மத்திய அரசில் இருந்த தி.மு.க அதனைத் தடுக்கவில்லை. வேலூர் சிறையில் இருக்கும் நளினியை, ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா சந்தித்ததன் மர்மம் என்ன? இதற்கு யார் அனுமதி அளித்தது?

இருவரும் என்ன பேசினார்கள்? இது குறித்த விவரங்களை வெளியிடாமல் முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தது ஏன்? நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள பலத்த சந்தேகம் என்னவென்றால், இந்த சந்திப்புக்குப் பின்னரே, இலங்கையில் தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Comments