இலங்கையில் நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் ஒத்துழைக்கத் தயார் என்றும் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரம் பற்றி இரக்கத்துடன் பேசியதற்காகவும் இலங்கையில் நடைபெற்று வரும் மனிதநேயமான சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதற்காகவும் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் நன்றியையும் வரவேற்பையும் தெரிவிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மரபுவழி மனிதநேயத் தலைமைப் பொறுப்பில் இருந்து பின்வாங்கிவிட்டன.
எனவே, இப்பொறுப்பை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ஏற்று முன்நடத்திச் செல்ல வேண்டும் என்று எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரச தலைவர் பராக் ஒபாமா கூறியதைப்போல, இலங்கையின் பாதுகாப்பான, அதேநேரத்தில் நீடிக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் நிலையான போர் நிறுத்தத்திற்கும் அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு இறுதித் தீர்வு எட்டப்படும் வரை தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறோம்.
இலங்கையில் தன்னாட்சியுடைய சுயநிர்ணய உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் வேட்கைக்காக, இலங்கையின் எந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் தண்டித்து வருகிறது.
தமிழர்கள் தமது தாய் மண்ணில் இருந்து வெளியேற்றப்படுவதாலும் எதிர்காலத்திற்கான வாழ்வு நிலையும், கண்ணியமுமின்றி வதை முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதாலும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்த சிறிலங்கா அரசு, சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலம் புகுந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தல்களை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது; அவர்களை வதைமுகாம்களில் அடைத்து வைக்கிறது.
இலங்கைத்தீவு முழுவதும் அப்பாவித் தமிழ் மக்கள் திடீரென மாயமாவது போன்றவை சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.
அரச தலைவர் பராக் ஒபாமா கூறியதைப்போல தமிழ் மக்களைப் பாதுகாக்க உலக மனிதநேயமான சமுதாயத்தின் உடனடி நடவடிக்கை இப்போதைய தேவையாகும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரிலும் மனிதநேயமான மீட்பு நடவடிக்கை என்ற பேரிலும் மனித இழப்புக்களைப் பற்றி கவலைப்படாமல் தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா அரசு உலக சமுதாயத்தின் கண்களை மூடி மறைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.
இலங்கையில் மனிதாபிமான சிக்கலைப் போக்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச தலைவர் பராக் ஒபாமா உறுதியாக வலியுறுத்தியிருப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் நடுநிலையான மனிதநேயமான உதவிப் பணியாளர்களும், ஊடகத்துறையினரும் இருக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.
இலங்கை தமிழர்களின் துன்பம் பற்றி விளக்குவதற்காகத் தமது நேரத்தை ஒதுக்கிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments