மக்களின் உயிர்களுக்காக எதைச் செய்யவும் தயார்- ஒபாமாவின் யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன்


வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.

எனவே அமெரிக்க அரச தலைவரினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரவலமான நிலைகுறித்து விடுதலைப் புலிகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இந்த அவலங்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மனிதப் பேரவலத்தை நிறுத்துமாறு அமெரிக்க அரச தலைவர் விடுத்த வேண்டுகோளை விடுதலைப் புலிகள் செவிமடுத்துள்ளனர். அதற்கு அமைவாக செயற்படுவதற்கு இணங்கியுள்ளனர்.

அனைத்துலக சமூகம் நியாயமாகவும் திறந்த மனதுடனும் செயற்பட வேண்டும் என்பதுடன், இரக்கமற்ற முறையில் வன்முறைக்கு இலக்காகும் மக்கள் தொடர்பில் முழுமையான பொறுப்புக்களையும் எடுக்க வேண்டும்.

எமது மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர். எமது மக்களின் எதிர்காலம் தொடர்பான முழுப்பொறுப்பையும் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்க அரச தலைவரின் கோரிக்கையை சிறிலங்கா அரசும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன், இரத்தக்களரியை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகள் தமது மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடி வந்துள்ளனர். அவர்கள் தம்மால் முடிந்தளவுக்கு தமது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

அமெரிக்க அரச தலைவரின் அண்மைய கருத்து எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே எமது மக்களின் நெருக்கடியான இந்த நிலையில் அவர் காத்திரமான பங்களிப்பை ஆற்ற முடியும்.

தற்போதைய மோதல்களை படைத்துறை வழியிலான தீர்வின் மூலம் நிறுத்த முடியாது. எமது மக்களுக்கு தேவையான கௌரவமானதும், சமத்துவமானதுமான இறுதியான தீர்வு அரசியல் வழிமுறைகளின் மூலம் தான் எட்டப்பட முடியும்.

எல்லாத்தரப்பும் உண்மையுடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் அரசியல் வழிமுறைகளில் இணைந்து கொள்வதில் எமக்குள்ள ஈடுபாடுகளை நாம் ஏற்கனவே வெளிக்காட்டி வந்துள்ளோம்.

அமெரிக்க அரச தலைவரின் வார்த்தைகள் நம்பிக்கை தருவதாக அமைவதனால் நடுநிலையான அனைத்துலக கட்சிகளின் அனுசரணையுடன் அரசியல் நீரோட்டத்தில் விடுதலைப் புலிகள் இணைந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண மீண்டும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தீவில் வாழும் மக்கள் அனைவருக்கும் இரு ஒரு நல்ல சந்தர்ப்பம். நாமும் சிறிலங்கா அரசும் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும்.

அரசின் தற்போதைய நடவடிக்கை மேலும் பல ஆயிரம் மக்களின் படுகொலைகளுக்கே வழிவகுக்கும். அது கௌரவமான தீர்வுக்கு வழிவகுக்கப்போவதில்லை.

எனவே ஓபாமாவினால் கூறப்பட்ட வழிகளில் அமைதியை காண்பதற்கு நாம் எமது ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments