இனி என்ன செய்யப் போகிறது இந்த சர்வதேசம்?

நிரந்தர போர்நிறுத்தமொன்றினை ஏற்படுத்தப் போவதாகக் கூறியவாறு, அங்குமிங்கும் ஓடித் திரிகிறது சர்வதேசம்.சிறீலங்காவின் முதுகைத் தடவியபடி அறிக்கை விடுபவர்கள், நேரடி விஜயங்களையும் முன்னெடுக்கிறார்கள்.

எதற்கும் அசையாத சிங்களம், போரை நிறுத்த முடியாதென திட்டவட்டமாக அறிவித்து, கனரக ஆயுதங்களை பாவிக்காமல் யுத்தம் புரிவதாக தமிழ்மக்களை ஏமாற்ற முயல்கிறது.பிரான்ஸ் மற்றும்

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்கள் மேற்கொண்ட பயணங்கள், எந்தவிதமான தாக்கங்களை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது?

ஜனாதிபதியைச் சந்தித்து, வவுனியா முகாம்களை பார்வையிட்டு வழமைபோன்று அறிக்கைகளும் விடப்பட்டுள்ளது.டேவிட் மிலிபான்டின் மனிதாபிமான போர்நிறுத்தம் என்கிற விடயத்தை மகிந்தர் பரிசீலனை செய்யத் தயாரில்லை.

மேற்குலகப் பிரதிநிதிகளின் பயண ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டைகளை போட ஆரம்பித்தது சிங்களம்.குறிப்பாக சுவீடன் வெளிநாட்டு அமைச்சர் கார்ல் பில்ட் அவர்களை சிங்களம் நிராகரித்த விவகாரத்தில், பல சூட்சுமங்கள் புதைந்திருப்பதைக் காணலாம்.

60 வயது நிரம்பிய கார்ல் பில்ட் அவர்கள், சர்வதேச நெருக்கடி விவகாரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றதொரு இராஜதந்திரி ஆவர்.86 - 99 களில் கட்சித் தலைவராக பதவி வகித்து, 91 - 94 இல் சுவீடன் நாட்டு பிரதமர் பொறுப்பேற்று, 2006 இலிருந்து இற்றைவரை வெளிநாட்டு அமைச்சராகத் திகழ்கின்றார்.

டேரன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றிய விசேட பிரதிநிதியாக கலந்துகொண்ட இவர், 96 - 97 களில் சர்வதேச சமூகத்தின் உயர்நிலைப் பிரதியாக, பொஸ்னியாவின் மீள் கட்டமைப்பு மற்றும் சமாதானப் பணிகளில் முன்னின்று உழைத்தவர்.

அதேவேளை 1999 - 2001 இல், பால்கனிற்கான ஐ.நா பாதுகாப்புச் சபையின் விசேட தூதுவராகவும் பணியாற்றினார்.இத்தகைய சர்வதேச அங்கீகாரம் கொண்ட, பிரச்சனைகளை இலகுவாகக் கையாளக்கூடிய நபரை எதிர்கொள்ள, சிங்களம் அச்சமடைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சீன விஜயத்தின்போது நூற்றுக்கு மேற்பட்ட தனது பரிவாரங்களோடு சென்ற மகிந்தருக்கு, மூன்று நபர்களை வரவேற்க இயலாதிருப்பது சிறுபிள்ளைத் தனமான விடயமென்பதை மேற்குலகு புரிந்து கொள்ளும்.

அதேவேளை கார்ல் பில்ட் அவர்களின் வருகையை சிங்களம் வெறுத்ததிற்கு வேறு பல காரணிகளும் உண்டு.சுழற்சி முறையில் நிரப்பப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த தலைமைப் பதவியை, சுவீடன் ஏற்றுக்கொள்ளப் போகிறது.

அத்தோடு ஐ.நா. சபையின் செயலாளர் நாயக பதவிக்கான போட்டியில் கார்ல் பில்ட் அவர்கள் குதிக்கப் போகிறார் என்கிற செய்தியும் சிங்களத்தால் உணரப்படுகிறது. இதைவிட இன்னுமொரு பார்வையும் சிங்களத்திடம் உண்டு. அது புவிசார் அரசியல் நகர்வு சார்ந்தது.

இந்தியா, சீனாவோடு நேரடியான முறுகல் நிலையினை தவிர்த்துக்கொள்ள, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக, ஒரு நகர்வினை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சிப்பதாக சிங்களம் கருதுகிறது.

அமெரிக்கா முன்னெடுக்கும் பல வழி நகர்வுகளில், ஐரோப்பிய பிரதிநிதிகளின் சிறீலங்கா பயணம், முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதாக இந்தியாவும் நோக்குகிறது.இவ்விரு வெளிநாட்டு அமைச்சர்களின் பயண ஏற்பாட்டை ஒழுங்கு செய்தவர், ஐ.நா விற்கான பிரெஞ்சுத் தூதுவர் திரு. ஜீன் மொறிஸ் ரிபெட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இப் பயணத்தின் பெறுபேறுகள், சர்வதேச அளவில், பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை. போரை நிறுத்தக்கூடிய அழுத்தங்களை சிறீலங்கா மீது செலுத்துவதற்கு வெறும் அறிக்கை போர்மட்டும் போதாது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்திய ஒரு தலைப்பட்ச போரிநிறுத்த அறிவிப்பிலிருந்து, பல காத்திரமான நகர்வுகளை மேற்குலகம் செய்திருக்க வேண்டும்.

இன்னும் கூட பிரணாப் முகர்ஜியுடன் ஹிலாரி கிளின்டன் தொலைபேசியில் உரையாடுவதாகவும், சர்வதேச நாணயச் சபை வழங்கவிருக்கும் 1.9 பில்லியன் டொலரை இடைநிறுத்தப் போவதாகவும், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது.

பேசுவதை இடைநிறுத்தி, செயலில் இறங்க வேண்டிய நேரமிது. ஆனாலும் சர்வதேசம் அசைவது போல் தெரியவில்லை. எமது தேசியத் தலைமை பலமிழந்து போக வேண்டுமென்கிற எதிர்பார்ப்பினை, இவர்களின் மௌனம் வெளிப்படுத்துகிறது.

இனப்படுகொலையன்று நிகழ்த்தப்படுவதை, மனித உரிமை மீறல்கள் என்று கூற முற்படும் இச் சர்வதேசம், வன்னி மக்களின் வாழ்வோடு விளையாடும்போல் தெரிகிறது. இந்திய வல்லாதிக்கத்தின் பிராந்திய நலன், பாதுகாக்கப்படவேண்டுமென்கிற நோக்கம் மேற்குலகிற்கு இருப்பதால், நேரடித் தலையீடுகளை தவிர்த்துக்கொள்கிறது.

வல்லரசுப் பூனைகளின் கொண்டாட்டத்தில், வன்னி மக்கள் திணறுகிறார்கள். இந்தியா நிகழ்த்தும் பிராந்திய ஆதிக்கப் போரினால், முழுத் தமிழினமும் வேரடி மண்ணோடு அழிக்கப்படும் அபாயம் உருவாகிறது.

மே மாதம் முதலாம் திகதியிலிருந்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பினை ரக்ஷ்யா ஏற்றுக்கொள்கிறது. ‘ஏனைய விவகாரங்கள்' என்கிற நிகழ்ச்சி நிரலில் சிறீலங்கா பிரச்சினை எடுத்தாளப்படும் நிலைகூட இனித் தவிர்க்கப்படலாம்.

‘உள்நாட்டு' விடயம் என்று கூறும் சீனாவும், ரக்ஷ்யாவிற்குப் பக்கபலமாகச் செயற்படும்.இந்நிலையில், உலகத் தமிழினம் மேற்கொள்ளும் தீவிரமான போராட்டங்களே, சர்வதேச இறுக்க நிலையைத் தளர்த்த வேண்டும்.

அதாவது சர்வதேச மக்களை அணிதிரட்டாமல், அரசுகளை அசைக்க முடியாதென்கிற யதார்த்தம் இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது.வன்னி மக்களின் அவலங்களும், வதைமுகாமில் நிகழும் கொடூரங்களும், சாட்சியங்களற்று அரங்கேறுகின்றன.

ஊடகங்களை உள்நுழைய விடாமல் சிங்களம் தடுப்பதும், அதற்கான அழுத்தங்களைக் கொடுக்காமல் சர்வதேசம் நழுவுவதும் நீண்டு செல்கிறது.

புலிகள் மீது குற்றஞ்சுமத்தியவாறு, இந்த மனிதாபிமானக் காவலர்கள் அறிக்கை போர்களை நிகழ்த்திக்கொண்டு இருப்பார்கள்.போரை நடாத்துபவர்கள் பாதுகாப்பாக இருக்கும்வரை, முள்ளி வாய்க்காலில் இரத்த ஆறு ஓடியபடியே இருக்கும்.

சர்வதேசம் தலையிடுமென்று இனியும் கற்பிதம்கொண்டால், எமது தேசியம் களவாடப்படும்.இறுதி வேண்டுகோளை சர்வதேசத்திடம் விடுக்கும் வேளை நெருங்குகிறது.

இதயச்சந்திரன்

நன்றி: ஈழமுரசு (02.05.2009),தமிழ்கதிர்

Comments