வடபகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களின்போது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஏழு சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று பாதுகாப்பான முறையில் விடுவிக்கப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறிய ஒரு தொகுதி மக்களுடன் மக்களாக வெளியேறிய இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த நான்கு கடற்படையினரும் மூன்று இராணுவத்தினரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தம்மைப் படையினர் என முன்னணிக் காவலரண் பகுதியில் இருந்த இராணுவத்தினரிடம் அறிமுகம் செய்துகொண்டனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரண்டு டோரா படகுகள் அழிக்கப்பட்டன.
அத்தாக்குதலின் போது கடற்புலிகளால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மூவர் இதுவரையில் விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல முகமாலைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதல்களில் பிடிக்கப்பட்ட மூன்று படையினரும் விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே முள்ளியவளை மீதான படையினரின் முற்றுகை இறுகியுள்ள நிலையில் நேற்று காலை இவர்களை விடுவித்த விடுதலைப் புலிகள், இவர்கள் ஏழு பேரையும் பொதுமக்களுடன் பொதுமக்களாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
Comments