இந்தியத்தமிழர்களைப் போல் ஆப்பிரிக்க நாட்டுத் தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர்த் தமிழர்கள் காட்டும் எதிர்வினையையும் புறக்கணிக்கக்கூடாது.
இந்த எதிர்வினைகள் - துக்கங்களாக, கையறு நிலையாக, புரியாத விஷயமாக, கோபமாக, தீக்குளிப்பாக, ஓட்டுவாங்கும் தந்திரமாக - இப்படிப் பல முறைகளில் அமைந்துள்ளன. கருணாநிதி, ராமதாஸ், பழ. நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி, ஜெயலலிதா, வைகோ இவர்களின் வரலாற்றைத் தமிழர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இவை ஏற்படுத்தின; ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
அண்ணாதுரை வாழ்ந்த காலத்தில் அவர் செய்த காரியங்கள் மூலம் அவர் வரலாறு - சத்தியமான வரலாறு - எதிர்காலத்தில் எழுதப்படும்; உடனடியாக ஒரு நல்ல வரலாறு எழுதுவதற்கு - நடுநிலையுடன் குறைகளையும் நிறைகளையும் தராசில் நிறுத்துக்கூறுவதற்கு - தமிழக சமூகம் சம்மதிக்காத முதிர்ச்சியற்ற சமூகம் என்பது என் கருத்து.
ஜீவானந்தம் பற்றி எழுதும் போது சுந்தர ராமசாமி, ஜீவாவுக்கு பெண் சபலம் உண்டு என்று எழுதியதை சமூகம் ஏற்கவில்லை. தன் புதல்வர்களை தர்ம/அதர்மத்துக்கு அப்பால் வைத்துப் பூஜிக்கும் புராதனத்தன்மையிலிருந்து நம் தமிழ்ச்சமூகம் இன்னும் மாறவில்லை; இது ஒரு வகை நடுகல் எழுப்பும் மனோபாவம்; நடுகல்லில் எழுதும் புகழ்மொழியே (Epitaph) வரலாறாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவரை, இரு ஏழைக்கீழ்குலத் தம்பதியர்களின் மகன் என்ற கூற்றைத் தமிழ்ச்சமூகம் ஏற்கவில்லை; பூணூல் போட்டு அவருக்கு உருவம் ஏற்படுத்தியது. தொல்காப்பியர் யார் என்று வரலாறு இல்லை. தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட (பிற்காலத்திய) பதிகத்தில் தொல்காப்பியரை வடநாட்டு மரபின் தொடர்ச்சி என்று பொய்யான நடுகல்மொழி எழுதப்படுகிறது.
மொத்தத்தில் வரலாறு பற்றிய சிந்தனை தமிழர்களுக்கு வேறானது என்பது உறுதி. மேற்கிலிருந்தோ, இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்தோ வந்த ‘வரலாறெழுதுதல்’ (Historiography) அல்ல நம்முடைய வரலாற்றுச் சிந்தனை. மேற்கத்தியர்களின் வரலாறு, காலத்தை ஒரு பிரவாகமாக, நீரோட்டமாகப் பார்க்கிறது. ஒரு புள்ளியிலோ, பல புள்ளிகளிலோ தோன்றி நிகழ்காலத்தை நோக்கி, காலம் பாய்கிறது என்ற கற்பனை இது. இதனை வரலாற்றுவாதத் (Historicism) தவறு என்பார்கள். ஹெகல் என்ற தத்துவவாதி மூலம் அகில உலக மார்க்சிய மரபில் இந்த வரலாற்றுச் சிந்தனை புகுந்தது.
தொல்காப்பியத்தின் அகத்திணையியல் என்ற பகுதி தமிழர்கள் அன்று கண்டுபிடித்த ‘காலம்’ பற்றிக் கூறுகிறது. ஒரு வருடத்தை ஆறு பெரும்பிரிவுகளாக அமைக்கிறது அச்சிந்தனை. அந்தக் காலம் இயற்கையோடு கலந்தது. மரம், செடி, விலங்கு, பூமி, மனிதர்கள் என்று பின்னிப் பிணைந்தது. தமிழகத்தில் மார்க்சிய வரலாற்று அறிஞர்கள் யாருமில்லை. கேரளத்தில், மகாராஷ்டிரத்தில், மேற்கு வங்காளத்தில் உண்டு. ஏன் வரலாற்றாசிரியர்கள் அனைத்துலக முறைகளுடன் தமிழில் தோன்றவில்லை? நான் கல்லூரியில் படித்த போது ‘வரலாறு’ ஒரு முக்கிய துறையாக இல்லை. இதற்கிடையில் ஒரு நீலகண்ட சாஸ்திரியைக் கூறுகிறார்கள். இவர் வடமொழி மரபில் வந்தவர் என்பதற்கு மேல் ஏதும் கூறமுடியுமா, தெரியவில்லை.
இன்று வரலாறு எழுதுதல் என்பது புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஈழப்பிரச்சினை வரலாற்றுத்துறைக்கு முக்கியமானது. வரலாற்றுத்துறையாளர்கள் இந்தப் பிரச்சினை பற்றி ஆய்வுகள் நிகழ்த்த வேண்டும்.
ஈழம் பற்றிய தமிழ்க்கலாச்சாரவாதிகளின் எதிர்வினை வெறும் அரசியல் எதிர்வினையாக மட்டும் அமையத் தேவையில்லை. அரசியல் நிகழ்ச்சிகள் கலாச்சாரத்தோடும் அதுபோலக் கலாச்சார நிகழ்வுகள் அரசியலோடும் தொடர்புடையனவாகும். அரசியல், ஈழத்தில் யுத்தத்தோடும், பெருவாரி மக்களின் தினசரி வாழ்நிலையோடும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்களின் மண்ணோடுள்ள தொடர்பு, பலவந்தமாக நீக்கப்பட்டுள்ளது. இரும்புக்கம்பிகளுக்கிடையில் கட்டாந்தரையில் வாழ்வு மலஜல உபாதைகள் தீர்க்க முடியாத முறையில் சிங்களப் படையினரின் மேற்பார்வையில் நடத்தப்பெறுகிறது. மன்மோகன் சிங்குக்கு இது உறுத்தாது. சோனியா காந்திக்கும் உறுத்தாது. எங்கோ இருக்கின்ற பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளருக்கும் ஃப்ரான்ஸின் வெளிவிவகார அதிகாரிகளுக்கும் உறுத்தும் அளவு கூட வெளிவிவகாரத்துறைச் செயலர் சிவசங்கர மேனனுக்கோ பிரதமரின் ராணுவ ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்கோ உறுத்தவில்லை.
இந்த மனிதர்களை ஆட்டிவைக்கும் சக்தி தமிழர்களுக்கு இல்லை என்றாகிவிட்டிருக்கிறது. தமிழர்களுக்கென மிக அதிகமான எண்ணிக்கையில் காபினெட் அமைச்சர்கள் இருந்து என்ன பயன்?
பிரிட்டனுக்கு இது உறுத்தியதால் முகாம்களைப் பார்வையிட வேண்டும் என்கிறார், அதன் வெளிவிவகாரச் செயலர். முடியாதென்கிறார் ராஜபட்க்ஷ என்று ஏப்ரல் 30-ஆம் தேதி செய்தி வந்துள்ளது. இதைப் போலவே ஃப்ரான்ஸின் வெளிவிவகாரத்துறைக்கும் முடியாது என பதில் அளித்துள்ளார் ராஜபட்க்ஷ. ஆனால் சிவசங்கர மேனனையும் எம்.கே. நாராயணனையும் அனுப்பியவர்கள் முகாம்களைப் பார்த்துவிட்டு வா, என்று கூறவில்லை. அவ்வளவு அக்கறை அங்கு ஆடுமாடுகள் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள்மீது.
இலங்கையில் இன்று முகாம் என்றும் நாடு என்றும் இரு பிரிவினைகள் ஏற்பட்டுள்ளன. தமிழர்களுக்கு முகாம் என்றும் சிங்களவர்களுக்கு நாடு என்றும் சங்கேதமாக பிரிவினை செய்யப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் ‘ஒழுங்காக’ வாழும் தமிழர்களுக்கு ‘நாடு’ கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ முகாம்கள் பற்றியோ, சென்னையைத் தலைமையிடமாக வைத்து பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிற ‘இந்து’ நாளிதழின் நிருபர் முரளிதர் ரெட்டிக்கு அக்கறையில்லை.
அந்த இதழின் நிர்வாகமும் தமிழெதிர்ப்பு நிர்வாகம்தான். ஓருதாரணத்திற்கு ஏப்ரல் 30 அன்று வந்துள்ள ஆசிரியர் கடிதங்களைப் பார்ப்போம். வெளியிடப்பட்டுள்ள ஆறு கடிதங்களும் ஒன்றில் ஈழப்பிரச்சினையை அரசியல் கட்சிகள் தங்கள் லாபத்துக்காகப் பயன்படுத்துகின்றன என்றோ, புலிகள் மோசமானவர்கள் என்றோ கூறுகின்றன.
இந்து’ நாளிதழின் தலையங்கங்கள், ஆசிரியர் பகுதி கட்டுரைகள் எல்லாம் ஈழப்பிரச்சினையை நடுநிலையாகப் பார்க்கவில்லை.
ராஜபட்க்ஷவின் கொள்கைகளை ஆதரிப்பதற்காகத் தமிழகத் தலைநகரிலிருந்து ஒரு நாளேடு வருகிறது. இந்த ஏடுதான் உண்ணாவிரதம் இருக்கும் கருணாநிதியின் கையிலும் இருக்கிறது.
இன்று 21-ஆம் நூற்றாண்டில் சிந்தனைகள், எந்தத் துறையிலும் நிறைந்து குவிந்துள்ளன. அரசியல் சிந்தனைகளும் கலாச்சாரச் சிந்தனைகளும் நிறையப் பெருகியுள்ளன. இவையிரண்டும் தனித்தனிச்சிந்தனைகளாகவும் இணைந்த சிந்தனைகளாகவும் உள்ளன. முகாம்கள் பற்றிய சிந்தனைகள் சார்ந்த சிந்தனைகள் என்கிறார் இத்தாலிய சிந்தனையாளர் ஜோர்ஜியோ அகம்பென்.
அரசு என்பது புறனடைகளாலும் உருவாக்கப்பட்டது. எப்படி பாராளுமன்றத்திலிருந்து பஞ்சாயத்து ஆட்சிமுறைவரை அரசின் கட்டுப்பாட்டில் வருகிறதோ அதுபோல் முகாம்கள் அரசின்கீழ் வருகின்றன என்கிறார், இன்று மிகச்சிறந்த அரசியல் சிந்தனையாளர் என்று கருதப்படும் அகம்பென். முகாம்களில் இருக்கும் மக்கள் இலங்கை மக்களில் ஒரு பகுதியினரான தமிழ் மக்கள். அவர்களின் சிந்தனைகளுக்கும் பிற பகுதிகளில் இருக்கும் மக்களின் சிந்தனைகளுக்கும் தொடர்புண்டு. இந்த வகையில் ஈழ அரசியலும் சிந்தனையும் கலாச்சாரமும் தொடர்புற்றிருக்கின்றன.
அனைத்துலக தமிழ்ச்சமூகம் என்ற ஓரடையாளம், உலகினர் விரும்பியோ விரும்பாமலோ உருவாகிவிட்டது. இந்தியத்தமிழர்களிடம் உள்ள சாதாரணத்துறைகள் (அல்லது பிரிவுகள்) என்று கணிக்கப்பட்ட திரைப்படத்துறையினர், பெண்கள், மாணவர்கள் ஈழப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய ‘தமிழ்-உண்மையின்’ குணங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டும். இன்று அப்படி ஒரு ’தமிழ்-உண்மை’ உண்டா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். அகில உலக மட்டத்தில், தேச வரம்புகளைத் தாண்டி ஓர் தமிழ்-உண்மை இன்றைய ஈழப்பிரச்சினையின் சந்தர்ப்பத்தில் உருவாகியுள்ளது என்றுதான் தோன்றுகிறது.
என் போன்றோர் சிற்றிதழ்கள் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்ச்சமூகத்தளம் ஒன்றைப்பற்றி அக்கறை கொண்டவர்கள். ஆனால் சிற்றிதழ் உலகம் என்பது அறிவுத்திறமை அதிகம் கொண்டதாக இருப்பதால் தமிழ்த்திரைப்படத்துறைபோல் வெளிப்படையாகத் தன் எதிர்வினையைத் தெரிவிக்கவில்லைபோலும்... தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு உறுப்புகள், அந்த உறுப்புகளின் வினைப்பாடுகள், பற்றி எல்லாம் இந்த மாதிரி நெருக்கடி ஏற்படும் காலங்களில் சிந்திக்க வேண்டும்.
அதுபோல் அகில உலகின் பல நாடுகளின் பெரிய நகர்களில் - லண்டன், நியூயார்க், டோரண்டோ, ஜெனிவா, ஓஸ்லோ என்றெல்லாம் தமிழர்கள் தங்கள் இன ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் இச்செயல்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும். வெளிநாடுகளில் பிறந்த இந்தத் தமிழ் இளைஞர்கள் எதிர்காலங்களில் புதிய தமிழுண்மை ஒன்றைக் கண்டடைவார்கள்.
இவர்களில் ஃப்ரெஞ்சு, ஜெர்மன், போலிஷ், ருஷ்ய மொழி போன்ற பலவித மொழிகள் பேசும் இளைஞர்களும் இளம்பெண்களும் சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ஈழத்தை - அவர்களின் உறவினர்கள், வாழும் அல்லது சாகும் ஈழத்தை - பார்த்திருக்கக் கூட இயலாது.
எனினும் இவர்கள் புதுவிதமாக, எதிர்காலத்தில் தமிழ்மனதின் மூலம் சிந்திப்பார்கள். அவர்களின் மனதில் தமிழ்சினிமாவின் - அதன் அடையாளங்களின் பாதிப்பு இருக்குமா, இருக்காதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இருக்காவிட்டாலும் ‘தமிழ்’ என்ற சொல் ஒரு புது உணர்வை அவர்களின் மனதில் எழுப்பும்.
அந்த நேரத்தில் இந்தியாவில் கீழ்மூலையிலும் அதே தமிழை, சற்று வேறுவிதமாகப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற ஓர்மை எழும். அந்தத் தமிழர்களுக்கும் ஓர் நீண்ட பரம்பரை - கலையிலும் இலக்கியத்திலும் இருந்தது என்று ஞாபகம் வரும். சில இளைஞர்களும், இளம்பெண்களும் அது தங்களுடையது என்ற அந்த ஓர்மை வழிப் பயணப்படுவார்கள்.
ஒரு காலத்தில் தங்கள் உறவினர்கள் ரத்தம் சிந்திய இடங்களை எல்லாம் வந்து பார்ப்பார்கள். தங்கள் உறவுகள் விமானங்களால் தாக்கிக் கொல்லப்படுமுன், விரட்டப்படுமுன், பதுங்குகுழிகளில் அவர்கள் கண்ட கனவு எதுவாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து பல ஆண்டுகளுக்கப்புறம் வரும்போது ஒருவேளை காற்றில் அழுகுரல் இல்லாமல் இருக்கலாம்;
பனைமரங்கள் அசையும்போது சிங்கள சேனைகளின் நிழலோ அவை என்று பயப்படாத சூழ்நிலை இருக்கலாம்; காலம் மிகவும் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அவர்கள் மறக்கமாட்டார்கள். மறக்கமுடியாத ஒரு நினைவும் மூளையும் அவர்தம் உடல்களுக்குள் இருக்கும்.
அந்த ஞாபகத்தின் பல்வேறு இழைகளோடும் எழும் சக்தியின் பெயர்தான் ‘தமிழ்-உண்மை.’
- தமிழவன்
நன்றி - உயிரோசை.
Comments