உயிர் பிழைத்தவர்கள் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவித் தமிழ் மக்களுடைய இறந்த உடல்களை அங்கு சுற்றித் திரியும் நாய்களும், காட்டு மிருகங்களும் இழுத்துச் செல்கின்றன.
அந்த மக்களின் கதறல்கள் தொலைதூரங்களுக்குக் கேட்பதில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கம் வானத்தில் பறக்கும் பறவைகளைக் கூட அங்கிருந்து செய்திகளை எடுத்து வர அனுமதியளிப்பதில்லை.
பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருக்கும் தாய்மார்கள் அதற்குள் அழுது கொண்டிருக்கும் குழந்தைகளைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். பட்டினியால் வாடும் அந்தத் தாய்மார்களிடம், அவர்களுடைய குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தாங்கள் அச்சமடையாமல் இருப்பதாகக் பாவனை பண்ணிக் கொண்டு போர் அரக்கனால் வதைபடும் அவர்களுடைய சிறுவர்களை தெம்பூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உணவும், மருத்துவமும் தடைசெய்யப்பட்டுள்ள அந்த அப்பாவி மக்கள் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காயப்பட்ட பெருமளவிலானோர் திறந்த வெளிகளில் சாவதற்கு விடப்படுகிறார்கள். அதிர்ஸ்டமுள்ளவர்கள் தற்காலிக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மயக்கமருந்து இல்லாமலேயே அவர்களுடைய பாதிக்கப்பட்ட அவயவங்கள் அகற்றப்படுகிறார்கள். வலிநீக்க மருந்துகள் இல்லாமலேயே சிசேரியன் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சீனாவின் எப் 7 விமானங்களும், ரஸ்யாவின் மிக் விமானங்களும் வன்னி ஆகாயப்பரப்புக்கு மேலாகப் பறந்து வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், அகதி முகாம்கள் மீது தொடர்ச்சியாகக் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றன. அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக தடைசெய்யப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளும் பாவிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்னால் இறந்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு முன்னால் இறந்து கொண்டிருக்கிறார்கள். இறந்த பலருக்காக கவலைப்பட அங்கு எவரும் இருக்கவில்லை. கடந்த மூன்று மாதத்திற்குள் எட்டாயிரத்தும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களுக்கு இழப்பதற்கு தற்போது எதுவுமில்லை. அவர்களுடைய வீடுகளும், வயல்நிலங்களும் சுடுகாடுகளாக மாறிவிட்டன. பல குடும்பங்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்து விட்டன. இலங்கை அரசாங்கத்தின் கொலைக்களத்தில் படுகாயமடைந்து சிகிச்சையளிக்கப்படாதோரும், பட்டினியால் வாடுவோருமான ஆயிரத்துக்கு மேற்பட்ட இடம்பெயர்ந்தவர்களும், கணவனையிழந்தவர்களும் இதனை விடச் சாவு மேலானதென நினைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ஆதரவளிக்க அங்கு எவருமில்லை.
இலங்கையின் வடக்கு பிரதேசமான வன்னியில் வாழ்ந்த மக்களின் தானியக் களஞ்சியங்கள் எப்போதுமே நிறைந்திருந்தன. அவர்களுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியாக கடற்கரைகளிலும், அழகிய பூங்காக்களிலும் விளையாடினார்கள். கடற்தொழிலாளர்கள் கடல்களுக்கு மீன்பிடிக்காகச் சென்றார்கள், விவசாயிகள் கமத்துக்குச் சென்றார்கள். தாய்மார்கள் வீடுகளிலுள்ள வேலைகளைச் செய்தார்கள். அவர்களிடம் பணம் இருந்தது. அவர்களுடைய பிள்ளைகள் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் ஒரு போதும் கைதிகளாகச் சிறையில் வதைபட்டதில்லை. அல்லது யாரிடமும் கையேந்தி நின்றதில்லை.
இவையெல்லாம் முடிவுக்கு வருகிறது எப்போதென்றால், பௌத்த சிங்கள அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்ற போர்வையில் சிறுபான்மையினத் தமிழர்களை அழிக்க முடிவு செய்தபோது தான்.
திறந்த வெளியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்டனர். அந்தப் போர்ப் பிராந்தியத்திலிருந்து வெளியேறி வரும் மக்கள் இனவதை முகாம்களுக்கும், சித்திரவதை முகாம்களுக்கும் அனுப்பப்படுகின்றனர். போர்ப் பிராந்தியத்திற்கு வெளியே நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சட்டபூர்வமற்ற கைதுகளாலும், கடத்தல்களாலும், சித்திரவதைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் அச்சத்துடன் அந்தத் திறந்த வெளிச் சிறைச்சாலை போன்ற உலகில் வாழ்கின்றனர். அவர்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுடைய குரல்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுடைய அன்புகுரியவர்கள் வாழும் சுதந்திரமான நாடுகளில் அந்நாட்டு அரசர்களுடையதும், ராணிகளுடையதும் கதவுகளை அவர்கள் தட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதைகுழி அல்லது நரகத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற எவருமே இதுவரை முன்வரவில்லை.
சில மாதங்களின் முன்னர் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கி மக்களை அதற்குள் சென்று இருக்குமாறு கூறியது. பாதுகாப்பு வலயத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்களிலும், பதுங்குழிகளுக்குள்ளும் வாழத் தலைப்பட்டனர். ஆனாலும் மழையிலிருந்தோ, வெய்யிலிலிருந்தோ, தம்மீது குண்டுகள் விழுவதிலிருந்தோ தங்களைக் காப்பாற்ற அவர்களால் முடியவில்லை. இலங்கை இராணுவம் இப்போது பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளை அண்மித்திருக்கிறது. பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் அந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பாவிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் பட்டினிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காயப்பட்டவர்களுக்குச் சரியான மருத்துவ வசதிகள் இல்லாதபடியினால் அவர்கள் சாக விடப்படவேண்டியவர்களாகின்றார்கள். காயமடைந்த மக்களுக்குச் சிகிச்சையளிக்கப்படும் தற்காலிக வைத்தியசாலை மீண்டும் குண்டுத் தாக்குதலுக்கு ஆளாகிறது. மனித உயிர்களுக்கு அங்கு எந்த மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
போர்ப் பிராந்தியத்திலிருந்து வெளியேறிவரும் மக்கள் இனவதை முகாம், தடுப்பு முகாம்களில் சிறைக் கைதிகள் போலத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் பிரச்சார நோக்கங்களுக்காக இம்முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுபவர்கள் தவிர உதவி நிறுவனங்களோ, ஊடகவியலாளர்களோ, வெளிநாட்டு இராஜதந்ரிதிகளோ இம்முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இப்பயங்கர முகாம்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களோ நண்பர்களோ செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை. சிறுவர்கள் தாய்மார்களிடமிருந்தோ, தந்தைமார்களிடமிருந்தோ பிரிக்கப்பட்டு வௌவேறு முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். மக்கள் காட்டு மிருகங்கள் போல நடத்தப்படுகிறார்கள். இராணுவ வாகனங்களிலிருந்து அவர்களை நோக்கி உணவுப் பொதிகள் வீசப்படுகின்றன. நீர்ப்பாசனக் குளங்களிலிருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத நீரை அவர்கள் அருந்துமாறு பணிக்கப்படுகிறார்கள். தொற்று நோய்களால் அவர்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள். பலர் சித்தசுவாதீனமுற்றவர்களாகியிருக்கிறார்கள். மிகப் பாதிக்கப்பட்டவர்கள் கூட முகாம்களிலிருந்து வெளியேறி இவர்களுடைய உறவினர்களுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. இளைஞர் மற்றும் யுவதிகள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்கும், புதைகுழிகளுக்கும் அனுப்பப்டுகிறார்கள் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.
இதே போன்றதொரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபாகத்தில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைக்கென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதிற் கொல்லப்பட்டவர்களில் பலர் புதைகுழிகளுக்குள் போட்டு மூடப்பட்டார்கள். இதற்கொரு இராணுவ அதிகாரி பொறுப்பாக இருந்தார். இதைப் போன்றதொரு நிலைமையே இங்குமிருப்பதாக அஞ்சப்படுகிறது.
தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுவது வழமை. அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும், பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டும் பல சமயங்களில் கொல்லப்பட்டுள்ளார்கள். சித்திரவதை செய்யப்படும் இடங்களில் இவர்கள் தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக நிர்வாணமாகவே தடுத்து வைக்கப்படுகிறார்கள். சிங்கள இராணுவத்தினரிடையே தற்போது பிரபலமாக இருக்கும் சொற்றொடர்களில் ஒன்று என்னவென்றால் தமிழ் இளைஞர்களின் இரத்தத்தால் இந்து சமுத்திரம் சிகப்பாக மாறுகிறபோது, வன்னிப் பெண்கள் எமக்கு விருந்தாவார்கள் என்பதுதான்.
இலங்கையின் சித்திரவதை முகாம்கள் பற்றி சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. ஐ.நா. அமைதிப்படையில் ஒரு அங்கமாகப் பணியாற்றிய இலங்கைச் சிப்பாய்கள் ஹெய்ற்றியில் பணியில் ஈடுபட்டபோது பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்காளாகி அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதை முழு உலகமே நன்கு அறியும்.
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுடைய நிலைமைகள்; தொலைக்காட்சிகளுடாகவும் இணையங்களுடாகவும் உலகமெங்கும் பரவி வருகின்றது. இந்த உள்நாட்டு யுத்தத்தைப் பற்றி பலருக்கு மிகக் குறைந்தளவான அறிவே இருக்கிறது. அது ஒருநாள் மாறும். எப்போதென்றால் இந்தியாவுக்கும், சீனாவுக்குமான அணுவாயுத யுத்தமாக அது வெடிக்கும்போது.
இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பாகச் சர்வதேசம் எவ்வாறு அணுகுகிறது?
ஏன் தமிழர்களை அவர்கள் கொன்று கொண்டிருக்கிறார்கள்?
சிங்கள மக்கள் எல்லோரும் இனவாதிகளா?
அப்பாவித் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையில் இலங்கைக்கு பங்காளியாக இருப்பவர் யார்?
அவர்கள் என்ன செய்கிறார்கள்? ஏன் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்?
தமிழர்களை ஆதரிப்பவர்கள் யார்?
இந்த மிகமோசமான யுத்தத்தில் இதுவரை வென்றவர்கள் யார்? தோற்றவர்கள் யார்?
பயங்கரவாதத்திற்கு எதிராக ராஜபக்ஸ மேற்கொள்ளும் இந்த யுத்தத்தை ஏன் நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்?
தமிழர்களைப் பாதுகாப்பது யார்?
நிலைமைகள் மோசமாகும்வரை மற்றைய தேசங்கள் ஏன் காத்துக் கொண்டிருக்கின்றன?
இந்த மொத்தப் பிரச்சினையிலுமே ஐ.நா. என்ன செய்தது?
ஏனைய நாடுகள் தலையிடாவிட்டால் அதைத் தொடர்ந்து என்ன நடைபெறும்?
இலங்கையின் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
ரெலிகிராப்டில் றிச்சார்ட் டிக்ஸன் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.
Comments