ஆனால் இவ்வாண்டு ஜனவரி முதல் முல்லைத்தீவு நரகலோகம் ஆக்கப்பட்டுவிட்டது. 250 000 வரையான அப்பாவித் தமிழ் மக்கள் நரகலோகத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். கற்பனைக் கதையிலேயே நரகலோகத்தில் ஒரு யமனின் ஆட்சி தான் இருக்கும்.
ஆனால் வன்னி மக்களோ இரு யமன்களுக்கு மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களின் நிலை:
முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இலங்கைப் படைகள் நெருங்க மோதல்கள் மேலும் தீவிரமடைந்து உள்ளது. 5 சதுர கி மீ பரப்பளவேயுள்ள இப்பிரதேசத்தில் 40 செல்சியஸ் வரை அனல் வீசும் வெப்பத்தில் தாகத்திற்கு தண்ணீரும் இன்றி பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழுகின்ற கொடுமை நினைத்துப் பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.
அதற்குள் கர்பிணித் தாய்மார் குழந்தைகளைப் பிரசவிக்கின்றனர். கைக் குழந்தைகள் பாலின்றித் தவிக்கின்றன. தாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை குழந்தைகளுக்காவது ஏதாவது கொடுக்க முடியாதா, அவர்களது பசியாற்ற முடியாதா என்று அந்த அம்மாக்களும் அப்பாக்களும் தவிக்கின்ற தவிப்பு மரணத்தை விடக் கொடுமையானது. குடிப்பதற்கே தண்ணீரில்லாத போது குளிப்பது எப்படி? ஏப்ரல் 20 - 21ல் 100 000ற்கு மேற்பட்ட மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறிய போது அவர்களது அவலங்களை விபரிக்க வார்த்தைகள் இல்லையென சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த மக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்கு அனுப்ப்படுகின்ற போது பஸ்வண்டிகளிலேயே உயிர் பிரிந்துள்ளனர்.
அந்த மக்கள் தவிட்டை தண்ணீரில் கரைத்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இலங்கை அரசு உலக உணவுத்திட்டம் மூலம் அனுப்புகின்ற உணவு அவர்களுடைய தேவைக்கு மிகமிகக் குறைவானது. அதனையும் சிலர்??? மக்களுக்கு விற்பனை செய்கின்ற நிலைதான் அங்கு உள்ளது. அந்த உச்சவிலைக்கு தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அன்று வெளியேறியவர்கள் தம் இயலாமையை விபரித்து இருந்தனர்.
வன்னி முகாம்கள் பற்றிய வாக்கு மூலங்கள்:
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமை இவ்வாறு மரணப் போராட்டமாக இருந்தால், அங்கிருந்து தப்பி வருகின்ற மக்களுக்கு இலங்கை அரசு அடிப்படைத் தேவைகளைக் கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. Hurricane Katrina -ஹரிக்கேன் கத்ரீனா அமெரிக்காவின் நியூஓர்லினைத் தாக்கிய போது அங்கு நிவாரணப் பணிகள் எதனையும் அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய பிபிசி செய்தியாளர் மக் பிரைட், மூன்றாம் உலக நாடான இலங்கை சுனாமி நடந்த 48 மணி நேரத்தில் உதவிகள் மக்களைச் சென்றடைய ஆரம்பித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
அப்படியான எதிர்பாராத சுனாமி அவலத்தின் போதே மக்களை உதவிகள் சென்றடைந்தன. ஆனால் இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட மனித வெளியேற்றம் ஒன்று இடம்பெற்ற போது அரசு தன்னைத் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை.
இது தொடர்பாக வன்னி முகாம்களுடன் தொடர்புடையவர்கள் தேசம்நெற்றுக்கு அளித்த வாக்குமூலங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது. தகவல்களை வெளியிட்டவர்களது விபரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
அரசு தயார் நிலையில் இருக்கத் தவறிவிட்டது. - வைத்தியர்:
”இந்த யுத்தத்தின் போது மக்கள் யாரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை என்பது அரசுக்கு நன்கு தெரியும். அப்படி என்றால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எல்லாம் எங்கு போனார்கள்? அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தான் இருந்திருப்பார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா? அவ்வளவு மக்களும் வெளியேறி வந்தால் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை கவனிக்க வேண்டியது அரசினுடைய பொறுப்பு. என்ஜிஓக்களை முன்னரேயே அங்கு அனுமதித்து தயார்நிலையில் அல்லவா வைத்திருந்திருக்க வேண்டும்.
மக்கள் வெளியேறி வந்தபோது அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு என்பனவற்றுக்கு மணித்தியாலக் கணக்கில் தவிக்கவிடப்பட்டனர். உடனடி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்கான போக்குவரத்துகள் ஒழுங்கற்று இருந்தது. பல மணிநேரம் மக்கள் பஸ் வண்டிகளிலேயே விடப்பட்டனர். சில சமயங்களில் அம்மக்கள் வாகனங்களிலேயே இரவைக் கழித்துள்ளனர்.
ஏற்கனவே வந்தவர்கள் ஓரளவு அங்கு பரவாயில்லாமல் உள்ளனர். ஆனால் புதிதாக முகாம்களில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உடல் பலவீனப்பட்டு இறந்துள்ளனர். இவர்களது உடல்கள் கொழுத்தும் வெய்யிலில் பல மணிநேரமும் சில நேரங்களில் 24 மணிநேரத்திற்கு மேலாக அங்கேயே விடப்படுகின்றது. அதனால் உடல் பழுதடைந்து துர்நாற்றம், தொற்று கிருமிகள் என பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.
புலிகளும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டனர். தங்களது பலத்தையும் பலவீனத்தையும் மதிப்பிடாமல் இன்று தமிழ் மக்களை பெரும் மனித அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். எல்லா இடங்களையும் கைவிட்ட அவர்கள் இந்த துண்டு நிலத்தில் என்னத்தை சாதிப்பதற்காக மக்களை இப்படிப் பலிகொடுக்கின்றனர். நாம் இவ்வளவு இழந்து இவ்வளவு கஸ்ரங்களை அனுபவித்து கண்டது தான் என்ன?”
மக்கள் விலங்குகளாக நடத்தப்படுகிறார்கள். - வங்கி அலுவலர்:
”நான் மக்களுடைய வங்கித் தேவைகளுக்காக இந்த முகாம்களில் பணியாற்றினேன். அங்கு மக்கள் படும் அவலங்கள் நெஞ்சைப் பிழிகின்றது. வெப்பநிலை காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் சில சமயம் பழுதடைந்த நிலையில் வந்தடைகின்றது. அதனை உண்டாவது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனையும் நெருக்குவாரப்பட்டு மிதிபட்டு வாங்க வேண்டி உள்ளது. சிலர் அதனை வாங்காமலேயே சென்று விடுகின்றனர். நான் சந்தித்த ஒருவர் இரு நாட்களாக தனக்கு உணவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நான் சென்ற முகாம் மிகவும் பரந்த பிரதேசம் அதனைச் சுற்றிவர மூன்று மணிநேரம் எடுக்கும். காடுகள் அழிக்கப்பட்டு வெட்ட வெளியிலே கொளுத்தும் வெய்யிலைத் தடுக்க ஒரு ரென்ற் கூட அவர்களுக்கு இல்லை. கிழிந்து கந்தலான ஆடைகளுடன் தான் வந்துள்ளனர். ”
பாலியல் வல்லூறவுகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளது. - உதவிகள் மேற்கொள்ளும் அரச அலுவலர்:
”நான் அடிக்கடி முகாம்களுக்கு சென்று வருவேன். ஒரளவு தொடர்புகளை ஏற்படுத்தி சில உதவிகளையும் வழங்கி வருகிறேன். முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது. பெண்கள் மீதான கொடுமைகள் சில இடம்பெற்று உள்ளதை நான் அறிந்திருக்கிறேன்.
குறிப்பாக செட்டிகுளம் முகாம் அருகில் உள்ள கல்லாறு ஆற்றில் பொழுதுசாய குளிக்கச் சென்ற சில பெண்களின் (1 - 9) உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் குளிப்பதற்கு மறைவிடம் இல்லாததால் பொழுதுசாய இருட்டில் குளிப்பதற்குச் சென்று உள்ளனர். அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடந்தது என்று தெரியவில்லை ஆனால் பத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு இவ்வாறு நடந்திருக்கலாம்.
இதனைச் சென்று முறையிடுவதற்கோ விசாரிப்பதற்கோ மக்கள் பயப்படுகின்றனர். இச்சம்பவங்கள் பரவலாக நடக்கின்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இச்சம்பவத்தையடுத்து அம்முகாம்களின் கட்டுப்பாடு இராணுவத்திடம் இருந்து பொலிசாரிற்கும், STF ற்கும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது பொழுதுசாய்ந்த பின் ஆற்றுப் பக்கம் செல்ல வேண்டாம் என அவர்களுக்கச் சொல்லப்பட்டு இருக்கிறது.
நூற்றுக் கணக்காணவர்கள் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டாலும் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை. புலிகளைக் களையெடுக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களும் அது பற்றிய சில தகவல்களை வழங்கியும் வருகின்றனர்.”
சுதந்திரமாக செயற்பட முடிவதில்லை. - மற்றுமொரு வைத்தியர்;
”நான் பணியாற்றும் முகாமிலும் பல்வேறு குறைபாடுகளுடன் மக்கள் வருகின்றனர். அவர்கள் அங்குள் சிங்கள மருத்தவர்களால் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் மொழிப் பிரச்சினை காரணமாக முழுமையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் என்னிடம் வந்து முறையிடும் போது பல பிரச்சினைகளையும் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாமல் உள்ளது. எந்நேரமும் இராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பார். நோயாளியுடன் சுதந்திரமாக உரையாட முடியாது. இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி எல்லாம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் அருகில் நிற்கும் போது அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியாது. அது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இயலுமானவரை முகாமிற்கு சென்று கடமையைச் செய்துவிட்டு வருவதையே செய்கிறேன். இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவது ஆபத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் யுவதிகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. ஆனால் அதனையெல்லாம் ஆராய முடியாது.”
பொம்பிளைப் பிள்ளைகளின் நிலைதான் மிகவும் மோசம் - உதவிகள் வழங்கிவரும் வயதான தாயார்:
”நான் இந்த யுத்தத்தில் ஆரம்பத்திலேயே வந்துவிட்டதால் முகாமில் இல்லை. ஆனால் வவுனியா வைத்தியசாலைக்கு தினமும் சென்று வருகிறேன். அங்கு தான் மிகவும் காயப்பட்டவர்களை நோய்வாய்ப்பட்டவர்களைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பஸ்நிறைய நோயாளிகள் கொண்டு வந்து இறக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அவர்கள் குளித்து பல் விளக்கி பல நாட்களாக இருக்கும். கிழிந்த அழுக்கான உடைகளுடன் வருவார்கள். அவர்களுக்கான சோப், பற்பசை, ஆடைகளை கொண்டு சென்று கொடுத்து வருகிறேன்.
பொம்பிளைப் பிள்ளைகளுடைய நிலைதான் மிகவும் கஸ்ரமானது. அவர்களுடைய இயற்கை உபாதைகள் ஒருபுறம். வன்னியில் புலிகள் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால் சின்னஞ் சிறுசுகளுக்கெல்லாம் கலியாணம் செய்து வைத்திடுவினம். பதினைந்து பதினாறு வயசிலேயே அந்தப் பிள்ளைகளுக்கு கைக் குழந்தையும் வந்திடும். முந்தி கலியாணம் கட்டின பெடியளை பிடிக்காயினம். இப்ப என்னென்றால் கடைசி நேரத்தில கலியாணம் கட்டினவையையும் பிடித்துக் கொண்டு போய் அதுகளும் செத்துப் போக இந்தப் பிள்ளையள் கைக்குழந்தையோட முகாம்களில தவிக்குதுகள். (முகாம்களில் 350 பெண்கள் அடுத்த மாதம் குழந்தைப் பேற்றிக்கு தயாராக இருக்கிறார்கள் என அரசாங்க அதிபரின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது.)
புலிகளோடு தொடர்புடையவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சிலர் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தாய் தகப்பன் இருந்தால் அவர்களிடம் கூறிவிட்டே அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் விசேட முகாம்களில் வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
முதலில் வந்து தங்க வைக்கப்பட்டவர்களின் நிலைகள் பரவாயில்லை. அவர்களுக்கு அடிப்படையான விடயங்கள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20லும் அதற்குப் பிறகும் வந்தவர்களுடைய வசதிகள் சரியான மோசமாக உள்ளது.”
இந்த நேரடிச் சாட்சியங்கள் வன்னி முகாம்களின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. விலங்குகளைக் கூட இவ்வளவு மோசமான சூழலில் வைத்திருக்க முடியாத நிலையில் வன்னி மக்களை அரசு இவ்வாறு வைத்திருப்பது வன்மையான கண்டணத்திற்கு உரியது. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த வன்னி மக்களையும் கீழ்மைப்படுத்தும் வகையிலேயே அரசு நடந்து கொள்கிறது.
ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்கப்படவில்லை. இந்நிலையில் இன்னும் பல்லாயிரக்கணக்காண மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது தொடர்பான முன் ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம் அதற்கான பரவலான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும் கீழுள்ள விடயங்களை மேற்கொள்வதற்கான அழுத்தக் குழுவொன்று குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உருவாக்கப்பட்டு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனை ஒரு பொது வேலைத்திட்டமாக பரவலாக முன்னெடுப்பது மிக அவசியம்.
1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும்.
2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.
4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
Comments