மருந்துப் பொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புக்கள் அதிகமாகக் கூடும்: சூசன் ரைஸ்

யுத்த வலயத்தில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்களின் உயிரிழப்புக்கள் உயர்வடையக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அமெரிக்கப் பிரதிநிதி சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்படுவதாக இரண்டு தரப்பினர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி வன்னியில் ஆட்டிலறித் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான குழுவினர் யுத்த வலயத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கூர்ந்து கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்துவதாகவும் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென சூசன் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு நாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை பார்வையிட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் பூரண அனுமதியளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவீடன் வெளிவிவகார அமைச்சரது வீஸா நிராகரிக்கப்பட்டமை அதிருப்தியளிப்பதாக சூசன் ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

Comments