மனித குலத்திற்கே இந்தியா துரோகம் செய்து விட்டது: பழ.நெடுமாறன் கண்டனம்; வைகோவும் குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்க இராணுவத்தினரால் திட்டமிட்டு கொலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 3 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் குண்டு வீச்சினால் அடியோடு தகர்க்கப்பட்டு, சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டு இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகாயம் அடைந்து மருத்துவ வசதி இல்லாமல் இறந்திருக்கிறார்கள். சமாதானம் பேச வருமாறு இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்பட அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை செய்த ராஜபக்சவை போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்து அதை தோற்கடித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
இலங்கைக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரே நாடான இந்தியாவுக்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருக்க முடியாது. எல்லா உண்மைகளும் தெரிந்தும் மனசாட்சிக்கு எதிராக இந்தியா சிங்கள வெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதை தமிழ்ச் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.
தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே இந்தியா துரோகம் செய்து விட்டது. போர் குற்றம் புரிந்த ராஜபக்சவை பாதுகாப்பதின் மூலம் அந்த குற்றத்திற்கு இந்தியாவும் உடந்தையாக இருக்கிறது என்பதை உலகச் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசின் இந்த போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது : வைகோ
ஐ.நா.சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளதன் மூலம் இந்திய அரசு இப்போது மீண்டும் ஒரு தவறை செய்துள்ளது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசுகையில், ஈழத்தில் நடைபெற்ற துயரங்களுக்கு இந்திய அரசுதான் காரணம். துயரம் என்றவுடன் வேறு எதையும் கற்பனை செய்துவிட வேண்டும். துயரம் என்று நான் சொன்னதற்கு காரணம் இலங்கை தமிழர்களை கருவறுக்கும் இந்த செயலுக்கு இந்த அரசு துணை போகும்போது நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை தான் துயரம் என்றேன்.
இந்திய விடுதலைக்கு முதலில் போராடியது தென்னாடுதான். அந்த வீர சரித்திரம் இந்த மண்ணுக்கு உண்டு. அப்படிப்பட்ட இந்த மண்ணில் இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு சிறிய இடைவெளி. நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்கா விட்டாலும் மக்கள் மன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.
இந்திய அரசு இப்போது மீண்டும் ஒரு தவறு செய்துள்ளது. ஐ.நா.சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டுள்ளது. உலகில் யாருக்கும் ஏற்படாத கொடுமை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது தற்காலிக வெற்றிதான். அதுவும் இந்தியா உதவி செய்து ஆயுதங்களை, வீரர்களை அனுப்பியதால் கிடைத்த வெற்றி.
கடந்த 5 மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். இது இந்திய அரசின் துரோகம். இதிலிருந்து அவர்கள் விரைவில் மீளுவார்கள். என்று வைகோ பேசினார்.
Comments