ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையில் புதுடில்லியின் 'கை'யும் நனைந்துள்ளது என்றும் அத்துடன் தமிழ்நாட்டு மக்கள் கையறு நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் உண்மை நிலவரங்களை அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா.
ஈழத் தமிழர்களே!
விடுதலைப் புலிகளே!
புலம்பெயர் மக்களே!
எங்களை மன்னித்து விடுங்கள்.
பெரும் தொகையான ஈழத் தமிழ் மக்களின் இனப் படுகொலையில் எங்களின் தாய் நாடு கை நனைத்திருக்கிறது.
இந்த உலகத்தின் இன்னொரு இனக் கொலை வரலாற்றில் நாங்கள் இன்று மௌன சாட்சிகளாக வாழும்படியாகி விட்டது.
அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி நீங்கள் எங்களிடம் பல்வேறு உதவிகளைக் கேட்டீர்கள்.
மக்களை வெளியேற்றச் சொல்லிக் கேட்டீர்கள்.
மூன்றாம் தரப்பு ஒன்றிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவும் பிரச்சினையை பேசித் தீர்க்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தீர்கள்.
கடைசியில் இந்தியாவில் இருந்து உணவுக் கப்பல் ஏதாவது வருகிறதா? என்று கூடக் கேட்டீர்கள்.
ஆனால், என்ன செய்வது ஈவிரமில்லாத ஒரு துரோக நிழலுக்குள் நாங்கள் சபிக்கப்பட்ட ஒரு வாழ்வைச் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வரலாற்றின் கொடூரமான பக்கங்களில் இன்னொரு முறை எழுதும்படியான இரத்தக்கறை இந்தச் சமூகத்தின் மீது படிந்து விட்டது.
இந்தியா என்னும் தென்னாசிய வல்லரசும் ஒரு இனவாத அரசும் சேர்ந்து உங்களைக் கொன்றொழித்தபோது தமிழகம் அதனை வேடிக்கை பார்க்கவில்லை.
எங்கள் மக்கள் வீதிக்கு வந்தார்கள். வழக்கறிஞர்கள் போராடினார்கள்.
நீங்கள் கொத்துக் குண்டுகளால் எரிவது கண்டு தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொண்டார்கள் 15 இளைஞர்கள்.
அவர்களின் தியாகங்கள் மிக மிக மலினமாக கொச்சைப்படுத்தப்பட்டது.
தடித்தனமாக நாங்கள் ஒடுக்கப்பட்டோம் இறையான்மையின் பேரால்.
ஆமாம், இந்திய இறையான்மையின் பேரால் கைது செய்யப்பட்டு பலரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
டில்லி ஆட்சியாளர்களின் மனம் புண்படுகிறது என்பதையிட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் மரணங்களை சகித்துக் கொள்ளும்படி நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டோம்.
அழுது ஓய்ந்து நாங்கள் மௌனமானபோது உங்களின் எவரேனும் பெரும் தொகையான தமிழ் மக்கள் எஞ்சியிருக்கவில்லை முள்ளிவாய்க்காலில்.
அந்த 50 ஆயிரம் பேருக்கு என்ன நடந்ததோ என்பதை நினைக்கும்போது அய்யோ இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்பதற்கு மனித விழுமியங்கள் மறந்து விட்டதே என்பதை நினைக்கும் போது உங்களின் கால்களில் விழுவதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்.
இதோ நடேசனின் உடலென்றும், புலித்தேவனின் உடலென்றும் பானுவின் உடலென்றும் ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டுகிறார்கள் பேரினவாதிகள்.
ஆறு படங்களைக் காட்டி இவர்கள் 60 ஆயிரம் பேரைக் கொன்றதை மறைக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியா எழுதிக் கொடுத்த திரைக்கதையில் ஒரு பாதி அரங்கேறிக் கொண்டிருக்கிறது நந்திக்கடலில்.
நாமும் அவர்கள் காட்டுகிற படங்களை மட்டுமே பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்.
நமது கண்ணீர் பேசியே ஆக வேண்டிய இன்னொரு பகுதியை மறைத்து விடுகிறது.
அவர்களோ நமக்கு கண்ணீரை பரிசளித்து விட்டு ஈழத் தமிழினத்தை தடயமற்ற இனமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
கடைசி மூன்று நாட்களில் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? இந்தக் கேள்வியை நாம் கேட்டாக வேண்டும்.
25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்யும் படியும் அனைத்துலக சமூகத்திடமும் கெஞ்சிக் கொண்டிருந்தாரே சூசை. அந்த 25 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்?
அவர்களைச் சுற்றிலும் பதுங்குகுழிகளில் நான்கு நாட்களாக உணவில்லாமல் பதுங்கிச் சோர்ந்து கிடந்த 30 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்.
கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அனைத்துலக சமூகம் தங்களை வந்து காப்பாற்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருகிறது என்று நம்பினார்கள்.
உலகம் எவ்வளவோ கதைகளைச் சொன்னது இதோ அதோ என்று யாராவது போய் அந்த மக்களைக் காப்பாற்றி விடமாட்டார்களா? என்று நம்பினோம்.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் பிராந்திய தளபதி திமேத்தி ஜி கேட்டிங் தலைமையிலான அமெரிக்க கடற்படை போர் வலயத்துக்குள் நுழைந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்ற செய்திகள் பரவிய நிலையில் திமேத்தியை டில்லிக்கு அழைத்தாரார்களாம் இந்தியக் கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும் எம்.கே.நாராயணனும், ஏ.கே அந்தோனியும், சிவசங்கரமேனனும்.
அமெரிக்க தளபதியிடம் இந்திய - அமெரிக்க இராணுவ கடற்படை உறவு குறித்துப் பேசினார்கள்.
இலங்கையில் தலையிட முடியாத சூழலை எடுத்துச் சொல்லி அவரைத் தடுத்தார்களாம்.
அப்படி அமெரிக்க கடற்படை தடுக்கப்பட்ட இரவிலோ அல்லது அதற்கு மறுநாளோ மூன்றாவது ஒரு நாட்டின் அறிவுறுத்தலின் படி சிங்களப் படைகளிடம் சமரசம் பேசப் போன நடேசன் உட்பட பல மூத்த தளபதிகள் கொல்லப்பட்டார்கள்.
நடேசனின் மனைவியும் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இவர்களோடு பிரபாகரன் அவர்களின் மகன் சார்ள்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருக்கிறார்.
இவர்கள் மட்டும்தான் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்களா?
அந்த போர்ப் பகுதியில் இருந்து மீண்டு வந்ததாகச் சொல்லப்படும் மக்கள் மட்டும்தான் அங்கு இருந்தார்களா?
கடந்த ஜனவரி மாதம் கிளிநொச்சி படையினரிடம் விழுந்த போது போராளிகளோடு போராளிகளாக கிளம்பிப் போனவர்கள் முன்றரை லட்சத்திற்கும் அதிகான மக்கள் என்கிறது தகவல்கள்.
ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி நாடாளுமன்ற விவாதத்தில் பேசும் போது 70 ஆயிரம் பொதுமக்கள் போர்ப்பகுதிகளில் சிக்கியிருக்கிறார்கள் என்றார்.
இரண்டு மாதங்கள் கழித்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் மக்கள் போர்ப் பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு வந்தார்கள் என்றது ஐ.நா.வின் அறிக்கை. அதையே ஓபாமாவும் சொன்னார்.
இப்போது போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து விட்ட சூழலில் 70 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வந்து விட்டதாகச் இலங்கை அரசு சொல்கிறது என்றால் ப்ரணாப் முகர்ஜி சொன்ன 70 ஆயிரம் பேர் என்கிற கணக்கு இந்த நான்கு மாதங்ககளுக்குள் குட்டி போட்டா இத்தனை லட்சமாக ஆனது?
அது மட்டுமல்லாமல் பல லட்சம் மக்கள் போர்ப் பகுதிக்குள் இருக்க இந்தியாவின் அறிவுரைப்படி வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே உணவை அனுப்பிக் கொண்டிருந்தது இலங்கை அரசு.
பட்டவர்த்தனமாக இந்த இன அழிப்பில் ஈடுபட்டிருக்கும் இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி இந்தப் போர் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்.
கிளிநொச்சியில் இருந்து கிளம்பிப் போன தமிழ் மக்கள் மூன்றரை லட்சம் பேர் எங்கே என்று கேட்டால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டிய பொறுப்பு இந்திய - இலங்கை அரசுகளுக்கு உண்டு.
70 ஆயிரம் பேர்தான் போர்ப் பகுதிகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்று ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார் என்றால் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தில் அவரும் நிறுத்தப்பட வேண்டியவர்தான்.
ஆனால் சீக்கிய மக்களையும் காஷ்மீரிகளையும் இழிவுபடுத்தியதைப் போல எந்தப் பதிலும் சொல்லாமல் வழக்கம் போல ஏளனத்தை மட்டுமே பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தருவார்கள் என்றால் அதற்கு பழி தீர்க்கும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்று பாதிக்கப்பட்ட தமிழன் நம்பக்கூடும். நம்பிக்கைகள் வலுப்பெறக் கூடும்.
உண்மை ஒன்றுதான் அவர்கள் பெரும் தொகையான மக்களையும் முக்கியமான போராளித் தலைவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் குழந்தைகளையும் சாட்சியமற்ற முறையில் கொன்றொழித்திருக்கிறார்கள்.
போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் போராளித் தலைமையை அழித்து விட்டதாகவும் சொல்லும் இலங்கை அரசு முள்ளியவாய்க்காலில் ஒரு துடைத்தழிப்பு வேலையில் வெகுவேகமாக ஈடுபட்டிருக்கின்றது.
இதை விட்டு விட்டு பிரபாகரன் என்று சொல்லப்படும் ஒரு வீடியோவையோ ஒளிப்படத்தையோ காட்டி ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய விடுதலைப் போரை மௌனமாக்கி விட முடியாது.
உளவியல் ரீதியாக இலங்கையும் இந்தியாவும். அதன் ஆங்கில ஊடகங்களும் தொடர்ந்து கக்கிவரும் வல்லாதிக்க பேரினவாத பிரச்சாரத்திற்கு எதிரான எதிர்ப்பிரச்சாரமாக நாம் ஒன்று கூட வேண்டும்.
சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கும் ஒரு லட்சம் மக்களின் உயிர்கள் குறித்து அனைத்துலக சமூகம் விழிக்கும் வரை நாம் போராட வேண்டும்.
உயிர்களை உடமைகளை பிள்ளைகளை பெற்றோர்களை என எல்லாவற்றையுமே இழந்து விட்ட மிச்சம் மீதியிருக்கும் மக்கள் முகாம்களுக்குள் முட்கம்பிகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எட்டு மாதங்களாக தமிழகம் கத்திக் கதறியபோதும் போரை நடத்துவதில் தீவீரமாக இருந்த இந்தியா இப்போது முகாம்களுக்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கான முழு நிவாரணங்களையும் ஏற்றுக் கொள்ளப் போகிறதாம். அதற்கு தமிழகமும் தன்னால் ஆன பங்களிப்பைச் செய்யுமாம்.
பட்டினியால் போர்ப் பகுதிக்குள் சிக்கிய மக்களுக்கு உணவு அனுப்பும்படிக் கேட்டோம் அனுப்பவில்லை.
முள்ளிவாய்க்காலில் சிக்கி காயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களை மீட்டு தமிழகத்தில் நிவாராண முகாம் அமைக்கும்படி கேட்டோம்.
இதே கோரிக்கையை செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாட்டு கிளையும் வைத்தது. அதையும் செய்யவில்லை.
இப்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டிருக்கும் பல்லாயிரம் மக்கள் குறித்தும் இனப் படுகொலைக்கு துணைபோன சகல தரப்புமே தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறோம்.
ஆனால், வேடிக்கை யார் இந்த இனப்படுகொலை செய்தார்களோ அவர்களே இப்போது நிவாரணங்களை கொடுக்கிறார்களாம்.
பெருமளவு இந்திய தமிழக மக்களின் வரிப்பணங்களில் அனுப்பப்படும் இவ்விதமான நிவாரணங்களை முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் விருப்பப்பட்டு வாங்குவார்கள் என்று தெரியவில்லை.
மாறாக அச்சுறுத்தி அவனை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகளை தயாரிக்க இந்தியா 500 கோடி ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறது.
இந்து மகா சமுத்திரத்தின் ஆதிக்கப்போட்டியில் பங்கெடுக்கும் ரஷ்யாவும் கொடுத்தது, சீனாவும் கொடுத்தது எல்லோரும் கொடுத்ததை விட இந்தியா கொடுத்த ஆயுதமும் அதிகம் ஆதரவும் அதிகம்.
இப்போது அந்த இனம் முடமாக்கப்பட்டிருக்கிறது.
30 ஆண்டு காலம் தாங்கள் நம்பிய தாயக விடுதலைக்காக களமாடிய பல இளைஞர்கள் கடைசி வரை போராடி களத்தில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.
இப்போது எஞ்சியிருப்பது நானும் நீங்களும்தான் நாம் என்ன செய்யப் போகிறோம்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளார் என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதன் மூலமும் ஒவ்வொரு நாளும் ஒரு மூத்த புலிப் போராளியின் உடலை காட்டுவதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்று குவித்த கொலை பாதகத்தை, இன அழிப்பை மூடி மறைத்து விட நினைக்கிறது இலங்கை அரசு.
அதனூடே இனி எவனும் தமிழர் உரிமை என்றோ புலி இயக்கம் என்றோ இந்த மண்ணில் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்றும் திட்டமிட்டு நேரடியாகவே மிரட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அரசு இயந்திரங்கள் முள்ளிவாய்க்காலில் மேய்ந்து அந்த மண்ணை நீள அகலமாக உழுது தடையங்களை அழித்துக் கொண்டிருக்கிறது.
நாம் அது பற்றி கேள்விகளைக் கேட்கக்கூடாது என்றுதான் நம் உளவியலைச் சிதைக்கும் ஒளிப்படங்களைத் தொடர்ந்து வெளியிட்டபடி இருக்கிறார்கள்.
மென்மையான போக்கோடு இதுவரை இலங்கை அரசை கண்டித்து வந்த மேற்குலகம் வீதிகளில் திரண்டு நிற்கும் எமது தமிழ் மக்களுக்கு உரிய பதிலைச் சொல்ல வேண்டும்.
உங்களுக்கு எமது மக்களால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால் நீங்கள் இலங்கை அரசுக்கு கொடுக்கும் அழுத்தங்களுக்கு அடிபணியப்போவதில்லை என்று இலங்கை அதிபர் அறிவித்திருக்கிறார்.
அப்படி என்றால் யார்தான் இதற்குப் பொறுப்பாளி. புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகவும் புலிகளின் தலைமையை அழித்து விட்டதாகவும் சொல்லி போர் முடிவுற்றதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சனையை கிடப்பில் போட நினைக்கிற சிங்களப் பேரினவாத அரசுக்கு உரிய தண்டனை வழங்கப்படா விட்டால் நாளை இப்பிராந்தியத்தில் இது தொடர் கதையாகும்.
புலிகள் அழிக்கப்பட்டதை ஒப்புக்கு ஏற்றுக்கொண்டால் கூட ஒரு நீண்டகால இனப்பிரச்சனையின் போராட்ட வளர்ச்சியில் புலிகளின் ஆயுதப் போராட்டம் என்பது 30 ஆண்டுகாலப் போராட்டமே.
சாதகமும் பாதகமுமான அந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் கடைசி வரை அஞ்சாமலும் அடிபணியாமலும் எதிரிகளிடம் அடங்கமறுத்து வீரச்சாவடைந்திருக்கிறார்கள் போராளிகள். இன்னும் போராளிகள் மிச்சமிருக்கிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய தமிழர் சிங்களர் இன முரணுக்கும் இலங்கைத் தீவில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கும் நூற்றாண்டு கால வரலாறு எப்படி உண்டோ அது போலவே தமிழர் விடுதலைப் போரின் சாத்வீக, ஆயுதப் போராட்ட வரலாறும் இந்தக் காலங்களை ஒட்டியே கடந்து வந்துள்ளது.
ஆக, களமாடி மடிந்த வீரத் தியாகிகளுக்கு மனித குலத்தின் ஆகப்பெரிய மரியாதையை நாம் வழங்காமல் போவது களமாடி மடிந்த கிட்டத்தட்ட 20 ஆயிரம் போராளிகளுக்கு நாம் செய்கிற துரோகம் என நினைக்கிறேன்.
ஆனால் இனத்தை அழித்து போரைச் சிதைத்து மக்களை முகாம்களுக்குள் முடக்கி விட்டு இந்தியா 13 ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைத் கொடுப்பேன் என்று நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது.
இந்தியத் தமிழர்கள் உட்பட எந்தத் தமிழரும் இந்திய - இலங்கையின் இந்த நாடகத்தை நம்புவதற்கு தயாராக இல்லை என்பதோடு ஒட்டுமொத்த தமிழினமும் இந்திய, இலங்கைத் தலைமைகளுக்கு ஒரு செய்தியைச் செல்ல வேண்டிய தருணம் வந்திருக்கிறது.
அவர்கள் பிரச்சனை முடிந்து விட்டது என்கிறார்கள். தமிழ் மக்களோ பிரச்சனை முடியவில்லை போராட்டம் அல்லது, போர் தொடரும் என்று அறிவிக்கக் காத்திருக்கிறார்கள்.
நூற்றாண்டு கால விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை.
வஞ்சிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் பழிதீர்த்து அதை வெற்றிக் களியாட்டங்களாக மாற்றி பெரும்பான்மை சமூகத்தின் ஏளனப் பொருளாகி விட்ட எமது தமிழ் மக்கள் இந்தியாவிற்கு விடுக்கும் செய்தி அதுதான். ஆமாம் போராட்டம் தொடரும்.
அ.பொன்னிலா
கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: aponnila@gmail.com
Comments