மேற்கத்தேய நாடுகளும் ஐ.நா.வும் வடக்கின் அகதிகளுக்கான உதவிகளை மேற்கொள்கையில்
அதனை சுதந்திரமாக மேற்கொள்ள ஐ.நா.அமைப்புகளுக்கும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும் எனக் கோரிவருகின்றன.
ஆனால் உதவி கோரும் இலங்கை அரசாங்கம் அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்க அமைப்புகளினூடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் பிற அமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது எனத் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.
அண்மைக்கால சர்வதேச செயற்பாடுகளின்படி அனர்த்த உதவிகள் பெரும்பாலும் அரமற்றும் அரச சார்பற்ற நடவடிக்கைகளினூடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பாரிய மீளமைப்பு திட்டங்களைத் தவிர மத்தியதர, சிறிய மீளமைப்புத் திட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக மேற்கொள்வதையே மேற்கத்தேய அரசாங்கங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடானது மேற்கத்தேய நிலைப்பாட்டை ஆட்டம் காணச் செய்துள்ளது.
ஐ.நா.வும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இவ்விடயத்தில் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்கும்படி இலங்கை கோரிய போதும் இலங்கை மறுத்துவிட்டது. இது மேற்கத்தேய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள பலத்த சவாலாகும். இதன் பிரதிவிளைவு எதிர்காலத்தில் எவ்வாறாக அமையும் என்பது ஒருபுறமிருக்க இலங்கையின் நிலைப்பாடு பலமடைவதற்கு இந்தியாவின் உதவியும் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பகுதி மக்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், தோன்றிய அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உள்நாட்டின் அரச சார்பற்ற நிறுவனங்களை செயற்பட அனுமதியளிக்கவில்லை. மாறாக, அரசாங்க கட்டமைப்பினூடாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.
குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் நிவாரண உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்படுகையிலேயே அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளைக் கோரியது. இச்சந்தர்ப்பத்தில் மேற்கத்தேய நாடுகள் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கும்படி கோரியதுடன் இந்தியா எவ்வித நிபந்தனையுமின்றி நூறுகோடி ரூபா நிதியுதவியை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜப்பானும் நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இது பாரிய வெற்றியாகும். மேற்கத்தேய நாடுகளுடன் முரண்பட் டுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு தற்போது சீனா, லிபியா மற்றும் ஏனைய அணிசேரா நாடுகள் உதவி வழங்க முன்வந்துள்ளதுடன் ரஷ்யாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்தியா எவ்வித நிபந்தனையுமின்றி உதவி வழங்க முன்வந்தமையே இவ்வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
எவ்வாறாயினும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்தியா இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் அது இலங்கை விடயத்தில் இந்தியா பெற்ற வெற்றியாக அமையலாம். கடந்தவார கட்டுரையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து பி.ஜே.பி அரசாங்கம் ஆட்சி பீடமேறினாலும் தற்போது கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டினையே இந்தியா கடைப் பிடிக் கும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
அதனை வலி யுறுத்தும் வகையில் பி.ஜே.பி யின் முன்னணி உறுப்பினரும் அதன் பிரதான வேட்பாளரு மான வெங்கையா நாயுடு பத்திரிகைக்கு அளி த்த பேட்டியொன்றில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை விடயத்தில் இந் திய இரா ணுவத்தை பயன்படுத்தாது, மாறாக இலங் கைத் தமிழர் சுதந்திரமாக வாழ்வதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளையே மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.
இதன்படி நோக்கினால் இந்திய கொள்கை வகுப்போர் மத்தியில் பொதுக் கருத்துருவாக்கம் உருவாகியிருப்பதனை அறியலாம். அப்பொதுக் கருத்துருவாக்கமானது ராஜீவ் ஜே.ஆர் உடன்படிக்கையாகும். அதன்படி நோக்கின் எதிர்வரும் இந்திய தேர்தலின் பின்னர் எப்பிரிவினர் இந்தியாவின் ஆட்சிப் பீடத்தை கைப்பற்றினாலும் தற்போது இலங்கையில் அமுலில் இருக்கும் மாகாண சபையைப் பலப்படுத்தும்படியே கோருவர்.
ஆனால் இந்திய கொள்கை வகுப்போர் இதில் வெற்றி காண்பார்களா? என்பதே இன்று எழும் கேள்வியாகவுள்ளது.
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலை நோக்கினால் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு சிங்கள மக்கள் 69 சதவீத வாக்கினை அளித்துள்ளது டன் தமது விருப்பு வாக்கினை அதிகாரப் பகிர் விற்கு எதிராக பேசிய வேட்பாளர்க ளுக்கே பெரிதும் வாக்களித்துள்ளனர்.
ஜாதிகஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச தலைமையி லான கட்சியின் வேட்பாளர்களை வெற்றிய டையச் செய்துள்ளனர். மறுபுறம் நடந்து முடிந்த மத்திய மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அவர் களும் யுத்தத்தினை வெல்வதற்கு வாக்க ளிக்கும்படி கோரியதுடன் அதிகாரப் பகிர்வினைப் பற்றி எவ்வித கருத்தினையும் முன்வைக்கவில்லை. இந்திய கொள்கை வகுப்போரை பொறுத்த வரை ரஜீவ்ஜே.ஆர் உடன்படிக்கையின்படி உருவாக்கப்பட்ட மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் உட்பட ஏனைய அதிகாரங்களை வழங்கினால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் எனக் கருதுகின்றனர்.
ஆனால் ஜனாதிபதியுடன் இணைந்துள்ள அரசியல் சக்திகளினதும் மற்றும் அவரது கொள்கை வகுப்போர் சிலரின் நிலைப்பாட்டினைக் கருத்திற் கொண்டால் ஒருபோதும் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கத் தேவையில்லையென்ற கருத்தை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் இலங்கை வரலாற்றைப் பொறுத்தவரை நாட்டின் ஆட்சியாளர்கள் நியாயாதிக்க ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதனை அரசியல் பண்பாக கடைப்பிடித்தமை அரிது. அப்படியே கடைப் பிடித்தாலும் பெரும்பாலும் மூன்றாம் சக்தியின் அழுத்தம் காரணமாக பிரச்சினைக்கான தீர்வுகளை விருப்பமின்றியே முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய உலக செல்நெறியின் சமவலு நிலைமைக்கமைய இலங்கை மேற்கத்தேய அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளது. தற்போது இருப்பது இந்தியாவின் அழுத்தம் மட்டுமே. அதுவும் பாரிய அழுத்தமாகக் கருதமுடியாது. இந்திய அழுத்தத்தை வலுவிழக்கச் செய்ய இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடம் உறவைப் பேணி வருகின்றது.
இப்பின்புலத்துடன் தற்போதைய யுத்த நிலையை நோக்கினால் இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதனை தற்காலிகமாக தவிர்த்துள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி தென் மாநிலங்களுக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் இலங்கையின் யுத்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம். எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் மத்தியிலுள்ள மக்களை விடுவிக்க முடியாவிடின் இலங்கை இராணுவம் மட்டுப்படுத்தப் பட்ட கனரக மற்றும் வான் தாக்குதலை மேற் கொண்டு பொதுமக்களை விடுவிக்கலாம்.
அவ்வாறு விடுவித்ததன் பின்னர் முழு மையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பெருமளவு உதவியளிப்பதன் மூலம் இந்தியா இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்தலாம்.
இதன் மூலம் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள் ளும்படி கோரலாம். ஆனால் இலங்கை அர சாங்கம் அதனை ஏற்குமா என்பது சந்தேகம்.
அதிகாரப்பரவலாக்கலை ஜனாதிபதி மேற் கொள்ள முயன்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ள ஹெல உறுமய, தேசிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தினை ஆதரிக்கும் அறிவு ஜீவிக் குழுவினர் மற்றும் அரசாங்கத்திற்கு வெளியி லுள்ள சக்திகளான ஜே.வி.பி தேசபற்றாளர் இயக்கம் போன்றன அதிகாரப் பகிர்வினை எதிர்க்கத் தலைப்படலாம்.
இவையெல்லாவற்றையும் விட ஜனாதிபதி மஹிந்தவும் இவ்விரண்டு முக்கிய விடயத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. 1988ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மாகாணசபையை ஏற்றுக்கொண்டதுடன் அதனை எதிர்த்த ஜே.வி.பி யினரை பலாத்கார மாக நசுக்கினார். ஆனால் இன்றைய ஜனாதிபதி அவ்வாறானதொரு செயற்பாட்டை மேற்கொள்வாரா?
மேலும் யுத்தம் முடிவடைந்தபின் எவ்வித உள்ளக, வெளியக அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்திராத இன்றைய ஜனாதிபதி அவ்வாறானதொரு செயற்பாட்டை அதாவது தேசிய ரீதியில் அதிகாரப் பகிர்விற்கு எதிராக எழும் எதிர்ப்பலையை பலாத்காரா மாக நசுக்கி அதிகாரப்பகிர்வினை அமுல்படுத்துவாரா? இதேவேளை இக்காலக்கட்டத்தில் இந்தியா இலங்கை மீது எந்தளவு ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் ஏற்கனவே சீனா, ரஷ்யா, லிபியா போன்ற நாடுகள் இலங்கைக் கான உதவிகளை வழங்க இணங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவினால் பாரிய அழுத் தத்தை பிரயோகிக்க முடியுமா? எக்கோணத் தில் நோக்கினாலும் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அடிபணியக் கூடிய நிலையை யுத்தத்தின் பின்னர் கொண்டிராது. ஆகையால் இந்தியா இம்முறையும் இலங்கை யுடனான பலப்பரீட்சையில் இலகுவான வெற்றியைப் பெறமுடியாது
பெ.முத்துலிங்கம்
Comments