போர் நிறுத்தம் கொண்டுவர அனுசரணைப் பணி செய்யுங்கள்! ரவிசங்கர் குருஜியிடம் புலிகள் கோரிக்கை

இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அனுசரணைப் பணிபுரியுமாறு இந்தியாவின் ஆன்மீகத் தலைவரும் வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் நேற்று குருஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று இந்தியச் செய்தி ஏஜென்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

மோதல் பிரதேசத்தில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நடேசன் ரவிசங்கர் குருஜியிடம் தமது தொலைபேசி உரையாடலின் போது எடுத்துரைத்தார்.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுவாமிகள் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.

அதன்பின் 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

Comments