துயரைப் பகிர்வோம்; அமைதியாக எங்களை நாங்களே தேற்றுவிப்போம்

விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது.

இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் மேற்குலக நாடுகளின் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்களாக மாறிவிடக்கூடாது.

ஆலயங்கள், தேவாலயங்களின் பால் நாங்கள் ஆத்ம சாந்தித் தேடுதலில் ஈடுபடுதலும், அமைதிப் பிரார்த்தனைகள், மெழுவர்த்தியுடனான மௌனப் பிரார்த்தனைகள் போன்றவற்றை எங்களின் இனத்தவர்களுடன் இணைந்து நாங்கள் எடுத்துச்சென்று தற்காலிகமாக எங்கள் துயரைத் தேற்றி இந்த பாழ்பட்ட உலகின் முன் எங்கள் இனத்தின் அவலத்தை வெளிக்கொணர்வோம்.

யதார்த்ததைப் புரியாத உலகாக தற்போதைய உலகு உள்ளவரையில் நாங்கள் எங்களின் பாதைகளை இலாவகமாகத் தேர்வு செய்து அவற்றில் அவதானிப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதையே யூதப் படுகொலைகளின் பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளின் யூதர்கள் கடைப்பிடித்தவையும், வியட்நாமியப் போரின் போது புலம்பெயர்ந்த அந்த நாட்டு மக்கள் கடைப்பிடித்தவையும் உணர்த்தி நிற்கின்றன.

இப்போது தமிழீழத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூதர்கள் இருந்த நிலையை எய்தி இருக்கிறோம். எங்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் முன் உதாரணங்களை புறம் தள்ளாமல் எங்களால் இந்த உலகின் பார்வையை, புரிதலை ஏற்படுத்தி எங்கள் மக்களின் கனவுகளை நிஜப்படுத்த முடியும் என்ற உருக்குறுதியுடன் நகர்வோம்.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பரின் பின்னான உலகு ஒரு பாரிய மாறுதலுக்குள் தன்னை உட்படுத்தி விடுதலைக்கான போராட்டங்களைக் வேறு வகைப்படுத்தி பார்க்க முடியாதபடியான ஒரு அலசலற்ற கொள்கை வலைப்பின்னலுக்குள் கண்மூடித்தனமாக வீழ்ந்துள்ளது.

இந்த மேற்குலகு இன்று முட்டிமோதும் ஈராக்கிய, ஆப்கானிய களங்களின் இழப்புக்களும் செலவுகளும் அவற்றின் மௌனத்திற்கு இன்னும் வலுச்சேர்த்து அவற்றை மேலும் மௌனிக்க வைத்துள்ளன என்பது துன்பகரமான உண்மை.

எனவே எங்களின் குரல்கள் ஈனக்குரல்களாக நசுக்கப்பட்டு ஈழத் தமிழன் உலகின் பார்வையில் இருந்து அகற்றப்படாத வகையில் நாங்கள் சிறந்த செயற்பாட்டாளர்களாக மாற வேண்டும். உலகப்பந்தின் உச்சத்தில் ஜனனித்த ஒரு புதிய தேசமே அழிக்கப்பட்டு தொடர்புகள் அறுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் ஆத்திரப்பட்டு இன்னமும் ஏதிலிகளாகிவிடக்கூடாது. எங்கள் உறவுகளின் கனவுகளைப் புதைத்தவர்களாகிவிடக் கூடாது.

மாறாக, அவர்களின் கனவுகளைச் நிஜமாக்குவோம் என்ற உறுதியைச் சுமந்தபடி ஒரு ஆணித்தரமான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் வரை எமது துயரையே எமக்கான உறுதியாக்கி, புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒவ்வொருவரும் மற்றையவருக்கான துணையாகி துயராற்றி உறுதிகொண்ட நெஞ்சினராக எமக்கான குரல்களாவோம்.

எமது கிராமங்களையும் நகரங்களையும் நாங்கள் புதிப்பபது என்பது கனவல்ல. மேற்குலகில் உள்ள அந்த அந்த ஊரைச் சார்ந்தவர்கள், கிராம சங்கங்கள் இவற்றைச் சாத்தியமாக்கும். ஆனால் உலகத்தை இராஜதந்திர ரீதியில் வெல்ல வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டு எமது மக்களின் வேதனைகளை துடைத்தெறிய வழி செய்வோம்.

முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட எமது மக்கள் மீண்டும் மீட்கப்படுவார்கள். அதற்காக நாங்கள் இந்த உலகைத் தயார்ப்படுத்துவோம் என்பதைச் சத்திய வாக்காக்கி உறுதி எடுப்போம். புதைக்கப்பட்ட உயிர்களின் கல்லறைகள் நாட்டில் எழும்! சிதைக்கப்பட்ட நகரங்கள் மீண்டும் புதுப்பொலிவு பெறும்! எமக்கான ஒரு நாடு எமது மக்களாலேயே நிர்வகிக்கப்பட நாங்கள் ஆதாரமாய், ஜீவநாதமாய் இருப்போம் என்று சத்தியம் செய்வோம்.

முள்ளிவாய்க்கால் மீண்டும் முளைக்கும்! என் தேசம் மீண்டு எழ நான் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை நாளும் நாங்கள் காலைப் பிரார்த்தனையாக தற்போது எடுத்து எமது மக்களின் தீர்வுக்கான வடிவைத் தேடிய பயணத்தைத் தொடர்வோம்.

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: srajawarman@gmail.com

Comments