சின்னக் குழந்தைகள் விளையாட சிங்கம், புலி, கரடி போன்ற முகமூடிகள் இருக்கின்றன. அரசியல்வாதிகள் அணிந்து கொள்ள மனித முகமூடிகள் பற்பல இருக்கின்றன. பெரிய மனிதர், எழைநேயர், நேர்மையாளர், கொள்கைக் குன்றம், தமிழர் நாட்டாண்மை, தமிழினக் காப்பாளர், சமூக நீதி வேந்தர், நிகரமையாளர் (சோசலிஸ்ட்), தமிழ்த் தேசியர் என வண்ண வண்ண முகமூகடிகள் இருக்கின்றன.
லெனின் சொன்னார்: “ஒருவர் தமக்குத் தாமே சூட்டிக் கொள்ளும் பட்டத்தை வைத்தோ, அவர் பேசும் புரட்சிக் கருத்துகளை வைத்தோ, அவர் அணிந்து கொள்ளும் ஆடைகளை வைத்தோ அவரை மதிப்பிட முடியாது. நடைமுறையில் அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்தே அவரை மதிப்பிட வேண்டும்” (நூல் : என்ன செய் வேண்டும்?) மேடைப் பேச்சிற்கு மயங்குவதில் தமிழினத்திற்கு ஈடாக இன்னொரு இனம் இருக்குமா?
தமிழ் மொழியின் இனிமை இந்தப் பக்கவிளைவை உண்டாக்கிவிட்டதா?
இவை ஆராயப்பட வேண்டியவை. மேடைப் பேச்சில் மட்டுமல்ல, எழுத்தின் கவர்ச்சியிலும் ஏமாந்து போனவர்கள் ஏராளம். இக்கவர்ச்சிகளின் நீட்சியாக உடலுக்கான மிகை ஒப்பனையில் தனிக்கவனம் செலுத்தினர் அரசியல்வாதிகள். இவையெல்லாம் முகமூடிகளே!
மேடையில் நிற்பதற்கான தோற்றப் பொலிவு, மயக்கும் சொற்பொழிவாற்றல் ஆகியவை இருந்தால் தான் ஒருவர் தலைவர் ஆக முடியும் என்ற கருத்து தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது. யாரும் சொல்லாத கருத்துகளை வித்தியாசமாக சொல்லி அதிரடியாகப் பேசுவதால் மக்கள் கவனத்தை ஈர்க்க முடியும் என்று கருதி செயற்கையாக ஆவேசப்பேச்சு பேசுவோரும் உளர். அவர்கள் சொன்ன அந்த அதிரடிக் கருத்துக்காக அவர்கள் உழைக்க மாட்டார்கள்; போராடமாட்டார்கள்.
மேடையேறிப் பேசும் போது ஆறுபோலப்பேச்சு கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு என கண்ணதாசன் எழுதினார். இப்படிப்பட்ட பேச்சாளர்களும் தலைவர்களும் தங்களுக்கென்று தனிச் சிறப்பான முகமூடிகள் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட முகமூடிகளுள் ஒன்றாக ஈழத்தமிழர் ஆதரவும் இருக்கிறது.
முகமூடிகள் தயாரிக்குபோது, அதற்குக் கொஞ்சம் விலை கொடுக்க வேண்டியிருக்கும். சிறை, வழக்கு என அடக்குமுறைகளைத் தாங்கித்தான் இவர்களுக்கான ஈழ ஆதரவு முகமூடி தயாரானது.
தமிழ்நாட்டில் இவர்களின் அரசியல் இலக்கு தமிழ்த் தேசிய இறையாண்மை அல்ல. இந்திய ‘தேசிய’ ஒடுக்குமுறைக் கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் அணி சேரத் தயங்காதவர்கள். இந்திய அரசிற்குக் கங்காணி வேலை பார்க்கும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்பவர்கள். இவர்களின் ஈழத்தமிழர் ஆதரவும் விடுதலைப்புலிகள் ஆதரவும் இந்திய தேசிய வேலி தாண்டாதவை.
ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் இந்திய - சிங்களக் கூட்டணியால் கொல்லப்பட்டதையொட்டித் தமிழ்நாட்டில் மாபெரும் எழுச்சி கிளம்பியது. இந்த எழுச்சியின் ஈட்டிமுனை யாருக்கெதிராகத் திருப்பப்பட வேண்டுமோ, அவர்களுக்கெதிராகத் திருப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள இந்திய அரசின் விமானப்படைத் தளங்களையோ, வரிவசூல் அலுவலகங்களையோ, மற்ற நிறுவனங்களோ முடக்கவில்லை. நமக்குள்ளேயே மனிதச்சங்கிலி, கடை அடைப்பு போன்றவற்றை ஆகப் பெரிய போராட்டங்களாக நடத்தினார்கள்.
இவை போன்ற போராட்டங்கள் தொடக்ககாலங்களில் தேவைப்பட்டன. ஆனால், 1983லிருந்து எவ்வளவோ போராட்டங்கள் நடந்தபின், இன்று மீண்டும் பேரெழுச்சி எழுந்துள்ளது. இப்போதும் தொடக்கநிலைப் போராட்டங்களை நடத்துவதும் முதன்மை எதிரியின் பக்கம், போராட்ட முனையைத் திருப்பாததும் தற்செயலான தவறுகளா? இல்லை. ஈழத்தமிழர் ஆதரவு முகமூடி அணிந்துள்ளோரின் வரம்புகள் அவ்வளவே! அவர்களின் இந்த வரம்புகளைத் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் கண்டறிய வேண்டும்.
இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் தமிழகக்கிளை ஈழத்தமிழர்களுக்காக போராடுகிறது. கட்சியின் அனைத்திந்தியத் தலைமை “ஈழத்தமிழர்” என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. “இலங்கைத் தமிழர்” என்று அழைக்க வேண்டும் என்று அது தனது தமிழ்நாட்டுக் கிளையை வலியுறுத்துகிறது.
சோனியா காந்தியையும் செயலலிதாவையும் கண்டிப்பதைப் பா.ம.க. விரும்பவில்லை. அதற்காகப் பத்துக் கட்டளைகளை உருவாக்கியது அக்கட்சி. இந்தியாவில் தமிழர்கள் நிலை என்ன? நம் இனத்திற்கு நம்மைவிட்டால் வேறு யார் ஆதரவு என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய காலம் இது.
இந்தியத் தேசியம் பேசும் அனைத்திந்திய அரசியல் தலைமைகளோ, பிற மாநிலக் கட்சிகளோ, ஈழத்தமிழர் இனப் படுகொலையைக் கண்டிக்க வில்லை. ஐ.நா.மன்றம் கண்டிக்கிறது. போப்பாண்டவர் கண்டிக்கிறார். பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் கண்டிக்கிறது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி கண்டிக்கிறது. ஆனால் அருகில் உள்ள மாநிலங்கள் கண்டிக்கவில்லை. அனைத்திந்தியத் தலைவர்கள் கண்டிக்கவில்லை. (பா.ஜ.க. இந்துத்வ நோக்கில் ஓரளவு கண்டிக்கிறது). தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகக் கட்சி நடத்தும் வடநாட்டுத் தலைவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.
அனைத்திந்தியத் தலித் ஒற்றுமை என்பதும், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என்பதும் எவ்வளவு மாய்மாலம் என்பது இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு பளிச்செனத் தெரிய வந்தது. இந்தி மண்டலத்திலுள்ள மாயாவதி, பாஸ்வான் போன்ற தலித் தலைவர்களும், முலாயம், லல்லு போன்ற பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களும் தங்கள் மீதான மேல்சாதி ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அதே வேளை, அவர்கள் இந்திப் பெருமிதத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இந்தியாவின் ஆளும் இனம் தாங்கள் என்ற கர்வத்தில் இருக்கிறார்கள்.
ஈழத்தில் சிங்களப்படையால், ஈழத்தலித்துகளும் பிற்படுத்தப் பட்டவர்களும் சுட்டுக் கொல்லப் படுவதோ அப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதோ, இந்த வடநாட்டுத் தலைவர்களுக்கு வலி ஏற்படுத்தவில்லை. ஈழத்தமிழர்களுக்காககத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் - தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் என அனைவரும் அக்டோபர் மாதத்திலிருந்து போராடுகிறோம். மற்ற மாநிலங்களில் இது எதிரொலிக்கவே இல்லை! அவர்கள் இரக்கங் காட்டவே இல்லை! ஏன்? இங்கே குறுக்கே நிற்பது இனம்! தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் என அனைவரும் இன வரம்புக்குள் தான் மோதிக் கொள்கிறார்கள்; பிறகு, சேர்ந்து கொள்கிறார்கள். இனம் என்பதைத் தாண்டி மனித நேய அடிப்படையில் இவர்கள் தமிழக தலித்துகளுடனோ, பிற்படுத்தப்பட்டவர்களுடனோ, சேர்ந்து ஈழத்தமிழர்க்காகக் குரல் கொடுக் விரும்பவில்லை.
கொலை செய்தவர்கள் கோடித் துணி எடுத்துக் கொண்டு போவது போல், வன்னெஞ்ச சோனியா காந்தி, வாக்குச்சீட்டை மனதில் வைத்து, ஈழத்தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் திரட்டி அனுப்ப தமிழக, ஆந்திர, கேரள காங்கரசாருக்க் கட்டளையிட்டார். ஏன் வடநாட்டில் உதவிப் பொருள் திரட்டக்கூடாதா? வடநாட்டுக் காங்கிரசார் அவ்வாறு பொருள் திரட்ட உடன்பட மாட்டார்கள் என்பதால் தான் மூன்று மாநிலங்களுக்கான வேலையாக அதை சோனியா மட்டுப்படுத்தினார். தென் மாநிலங்களிலும் கர்நாடகத்தை விட்டு விட்டார். காரணம் என்ன?
கர்நாடகத்தில் தமிழர் எதிர்ப்பு மேலோங்கி இருக்கிறது. அம்மாநிலக் காங்கிரசார் ஈழத்தமிழர்க்காக உதவிப் பொருட்கள் திரட்டமாட்டார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தாங்கள் இந்தியாவில் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள இதைவிட வேறென்ன நிகழ்வுகள் வேண்டும்?
தமிழ் இன முகமூடி போட்டிருக்கும் தலைவர்கள், தமிழர்களின் இந்த அவலத்தை, பிற மாநிலத்தவரின் புறக்கணிப்பை ஏன் அம்பலத்திற்குக் கொண்டு வரவில்லை?
பதவி அரசியலை இறுதி இலட்சியமாக்கிக் கொண்டு, இந்திய தேசிய வெறிக் கட்சிகளிடம் பல் இளித்துக்கிடக்கும் கட்சிகள் போட்டுக் கொண்டுள்ள, தமிழ் இன முகமூடி, தமிழ்நாட்டுத் தமிழர்களை ஏமாற்றிட மட்டுமே பயன்படும். தேர்தல் கட்சிகளில் மட்டுமல்ல, தேர்தலில் நிற்காத தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அமைப்புகளை நடத்துவோரில் சிலர், தமிழ் இன அரசியல் பேசிக் கொண்டே, சாதி ஆதிக்க மனப்பான்மையோடு செயல்படுகிறார்கள். அவர்களுக்குத் தமிழ், தமிழ் இனம், தமிழ்த்தேசியம் ஆகியவை முகமூடிகளே!
வணிக இதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அந்தந்தப் பருவத்திற்கேற்ப முகமூடிகளை மாட்டிக் கொள்ளும். இப்பொழுது எழுந்துள்ள ஈழத்தமிழர் ஆதரவு இன உணர்ச்சியை வணிகமாக்க முனைந்துள்ளன. பிரபாகரன் வாழ்க்கை வரலாறு, ஈழக்களச் செய்திகள் எனத் தமிழ் இன முகமூடிகளை மாட்டிக் கொண்டுள்ளன. இவற்றைப் படிக்கலாம்; செய்திகள் தெரிந்து கொள்ளலாம். இவை தமிழ் இன உரிமைக்கு வழிகாட்டுபவை என்று கருதி ஏமாறக்கூடாது.
தலித் அரசியல் பேசும் சிலர் பார்ப்பனிய சக்திகளுடன் கூடிக் குலவுகின்றனர். மாயாவதி பார்ப்பனர்களைப் பங்காளிகளாக்கிக் கொள்ளும் ரசவாதத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவரது பதவி அரசியலுக்கு தலித் அரசியல் ஒரு முகமூடியே!
நிகரமைக் கொள்கையை முதலாளியக் கட்சிகள் முகமூடியாக மாட்டிக் கொண்டன. இட்லர் தம்மை நிகரமையர் என்று சொல்லிக் கொண்டார். அவரது கட்சியின் பெயர் ஜெர்மானிய தேசிய நிகரமைக் கட்சி என்பதாகும். நிகரமை ஒரு முகமூடியாகப் பயன்படுகிறது.
இவ்வாறு முகமூடிகள் பற்பல இருக்கின்றன. முகமூடிகளையே முகம் என்று ஏமாறும் மக்கள் இருக்கும் வரை முகமூடிகள் வீதியுலா வந்து கொண்டுதானிருக்கும். விழிப்போடிருக்க வேண்டியது உண்மையான தமிழ் உணர்வாளர்களின் பொறுப்பாகும். பெப்சி, கோக் குடிப்புகள் தொடக்கத்தில் வேறுபட்ட கலவை ஒன்றின் மூலம் மற்ற குடிப்புகளை விட சுவையாய் இருந்தன. அவை மக்களின் பேராதரவைப் பெற்றன. இப்பொழுது பெப்சி, கோக் நிறுவனங்கள் குடிப்புகளைத் தயாரிப்பதில்லை. அவை அப்பொறுப்பைக் குத்ததைதாரர்களிடம் விட்டுவிட்டன. பல்வேறு குத்தகைதாரர்கள் தாம் பெப்சி, கோக் குடிப்புகளைத் தயாரிக்கின்றனர். பெப்சி கோக் தலைமை நிறுவனம், அவற்றிற்கான விளம்பரங்களை மட்டுமே தயாரிக்கின்றன. விளம்பரங்களைப் பார்த்து விட்டுத்தான், அக்குடிப்புகளை ஏராளமானோர் வாங்கிப் பருகுகின்றனர். பெப்சி, கோக் என்பவை இப்பொழுது நடைமுறையில் முகமூடிகளே! தொடக்கக் காலத்தில் இருந்த தரம் இப்போது அக்குடிப்புகளில் கிடையாது. ஆனாலும் முகமூடிகளின் செல்வாக்கால், அக்குடிப்புகள் வெளுத்துக் கட்டுகின்றன.
அரசியலிலும், முகமூடிகள் இவ்வாறு தான் வெளுத்துக் கட்டுகின்றன.
பெ.மணியரசன்
Comments