கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் மனிதாபிமான யுத்தத்தை நடத்துகிறோம் என்று அரச தரப்பு கூறுவதை உறுதிப்படுத்தக் கூடிய சர்வதேச நபர்கள், எவருமே அப்பிரதேசத்தில் இல்லை.
ஐ.நா. சபை வெளியிட்ட செய்மதிக்கோள் படங்களை அந்த சபையே ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. தவறுதலாக அதனை வெளியிட்டாலும் அம்மண்ணில் தப்பு நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ளும் திராணியும் ஐ.நா. சபைக்கு இல்லாதிருப்பது சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.
பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் மீது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து தடை விதிக்கலாம். ஆனாலும் அறிவியல் பூர்வமான செய்மதிக்கோள் சாட்சிப்பதிவுகளின் மீது சீனாவினால் "வெட்டு வாக்கினை' பிரயோகிக்க முடியுமா?
அதை நிராகரிக்க முடியாது என்கிற கருதுகோளைப் புரிந்து கொள்வதால் தரைப்படச் சான்றுகளை மறைக்கும் முயற்சியில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
இவை தவிர இறந்தோர், காயப்பட்டோரின் எண்ணிக்கைகளை வெளியிடும் இச் சபை, போராயுதமாக உணவு பயன்படுத்தப்படுவது குறித்து பேச மறுக்கிறது. யுத்தம் நடைபெறுவதால் உணவை அனுப்ப இயலவில்லையென்று தனது இரட்டைவேட நிலைப்பாட்டினை மறைக்க முயற்சிக்கும் ஐ.நா. சபை, போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்துவதை தவிர்த்துக் கொள்கிறது.
பிறகெதற்கு இந்த ஐ.நா. பொதுச் சபைக்கு, உலக உணவுத் திட்டங்களும் மனித உரிமை அமைப்புகளும் என்று மக்கள் விசனமடைவதில் தவறேதுமில்லை.
ஆயுதங்களைக் கீழே போட்டு மூன்றாம் தரப்பினரிடம் விடுதலைப் புலிகள் சரணடைந்தால் ஒரே இரவில் இனப்பிரச்சினை தீர்ந்து விடுமென சில மேற்குலக நாடுகள் தெரிவிக்கும் கருத்தினை செவி மடுக்கும், இந்த உலக மகா சபை, பட்டினிச் சாவினை அரவணைக்கும் வன்னி மக்களின் பேரவல நிலை குறித்து பேச விரும்பவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தமது ஆதரவினை வழங்குவதாக எழுத்து மூல உத்தரவாதத்தை விடுதலைப் புலிகள் இரு தடவை வழங்கியிருந்தும் ஏதோவொரு மாயச் சக்தி, அவர்களைத் தடுத்து நிறுத்துவது போன்று பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்பதில் அதிக அக்கறை காட்டும் இந்த சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் அம் மக்கள் எதிர்கொள்ளும் பேரவல விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
ஏற்கெனவே தாக்குதல்கள் மூலம் வெளியேற்றப்பட்ட வவுனியா முகாம்களில் நெடுந் துயர் சுமக்கும் மக்கள் குறித்து அக்கறையற்று, இந்த மனிதாபிமான யுத்த முன்னெடுப்பாளர்கள் செயற்படுகிறார்கள்.
வவுனியா முகõமில் பதிவு செய்யப்பட்டு பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை ஒரு முதல்தர ஆவணமாக ஏற்றுக் கொள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைச் சங்கங்கள் தயக்கமடைகின்றன.
சர்வதேச ஊடகத்தாரையும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்க மறுக்கும் தீவிரப் போக்கினை இவர்களால் மாற்ற முடியாமல் இருக்கிறது.
ஏனெனில் சர்வதேச மனிதாபிமானச் சட்டதிட்டங்களை மறுதலிப்பவர்களுக்குப் பின்னால் நின்று செயற்படும் வல்லரசுச் சக்திகளுக்கு ஐ.நா. சபை அச்சமடைவது
போலிருக்கிறது.
பிரச்சினையின் தீவிரத்தைத் தணிப்பதற்கு இங்கை சென்று திரும்பிய விஜய் நம்பியார் மேற்கொள்ளும் திரைமறைவு வேலைகளுக்கு ஊக்கியாகவும் உந்து சக்தியாகவும் யார் தொழிற்படுகிறார்களென்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
அதேபோன்று பாரிய சக்திமிக்க எதிரியோடு இலங்கை மோதுவதாகக் கூறும் ரஷ்யாவின் பக்கத்தில் நின்று தமிழின அழிப்பிற்கு தூபமிடுபவர் எவரென்பதும் தெரியும்.
இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தளத்திலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக அகற்றுவதன் ஊடாக தமது பிராந்திய நலன்களையும் பேரினவாத ஆட்சியினையும் நிலை நிறுத்தலாமென காய்களை நகர்த்துபவர்கள் பற்றியதான தெளிவு உள்வாங்கப்பட வேண்டும்.
மே 16 ஆம் திகதி வெளிவரும் இந்திய தேர்தல் முடிவுகள், போர் அரங்கில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கிறது.
படையினரால் தற்போது முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் மென் தீவிர யுத்தமென்கிற வரையறைக்குள் உள்ளடக்கப்படுகிறது. ஆனாலும் தினமும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையானது தீவிர யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்தியபடியே இருக்கிறது.
உணவும் மருந்தும் போராயுதமாகி பேரவலம் என்கிற கருத்து நிலை வரையறையின் எல்லைகளை உடைத்து விட்டது.
தமிழினத்தின் மீது இந்தியா தொடுத்திருக்கும் போரும், சர்வதேச மூலஸ்தானமான ஐ.நா. சபையின் பராமுகமும் வன்னி மக்கள் எதிர்கொள்ளும் அவல வாழ்வின் கொடூரப் பரிமாணங்களை விரித்துச் செல்கின்றது.
ஆனாலும் இதனை உடைத்துக் கொண்டு வெளியேறி விடுதலை வானைத் தரிசிக்கும் ஆற்றல் அந்த ஒடுக்கப்படும் மக்களுக்கே உண்டு.
- சி.இதயச்சந்திரன் -
Comments