வன்னியில் நூற்றுக்கணக்கான சிறார்கள் பலி: ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

வன்னியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட சிறார்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. சபை, இத்தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்புக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சிறார்கள் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சிறார்களின் மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை.

மிகக் குறுகிய இடத்திற்குள் மக்கள் சிக்கியிருப்பதால் தாக்குதல் நடந்தால் மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் என ஏற்கனவே ஐ.நா. எச்சரித்து வருகிறது.

ஆனால் நாங்கள் சொன்னதை யாருமே கேட்கவில்லை. இப்போது நூற்றுக்கணக்கான சிறார்கள் உள்பட பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது கவலை தருவதாக உள்ளது.

மீட்புப் பணியில் மக்களே ஈடுபடும் அவலம்..

இதற்கிடையே இலங்கை இராணுவம் நடத்திய இரத்தவெறியாட்டத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதிலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களே ஈடுபடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளையும், தீயினால் கருகிய பொருட்களையும் அப்புறப்படுத்தும் பணியிலும் மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும்தான் அதிகம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாததால் உயிரிழப்பு கூடிக் கொண்டே போகிறது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகள்தான் இத்தனை பேரின் சாவுக்குக் காரணம் என இராணுவம் வழக்கம் போல குற்றத்தை திசை திருப்ப முயன்றுள்ளது.

Comments