பட்டினிச் சாவுகளை ஒபாமா அரசு மட்டுமே தடுத்திட முடியும்: நிவாரண அலுவலர்

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள 1,65,000 அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்தின்றி பட்டினி கிடந்து சாவதை, விமானங்கள் வாயிலாக உணவுப் பொட்டலங்களை வீசி ஒபாமா அரசு தடுத்திட வேண்டும் என்று அப்பகுதியில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை அலுவலர் கூறியுள்ளார்.
TNetTNET

பாதுகாப்பு வலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ள மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களுக்குத் தேவைப்படும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் உடனடியாக அனுப்பப்பட தங்களுடைய சர்வதேச கூட்டாளிகளுடன் பேசி வருவதாகவும் அதிபர் ஒபாமா சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கைத் தெரிவித்தது.

அந்த எச்சரிக்கைக்கு பதில் கூறுவது போல, பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவித்த சிறிலங்க அரசு, அன்றைய தினமே வான் வழியாக குண்டு மழை பொழிந்து நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமின்றி, பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உணவு கொண்டு செல்வதை தொடர்ந்து தடுத்து வருகிறது.

கடல் வழியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த செஞ்சிலுவைக் கப்பல் மீது சிறிலங்கப் படைகள் தாக்குதல் நடத்தி திருப்பி அனுப்பி விட்டன. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு பக்கம் தொடர்ச்சியான தாக்குதல், மறுபக்கம் உணவு அனுப்பாமல் தடுத்திடும் பட்டினித் தாக்குதல் என இரண்டு முனைகளில் திட்டமிட்டு தமிழர்களை படுகொலை செய்து வருகிறது சிறிலங்க அரசு.

“பாதுகாப்பு வலயப் பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியையே தனது இராணுவம் செய்து வருவதாக அப்பட்டமான பொய் கூறி உலகத்தை ஏமாற்றி வருகிறது கொழும்பு. கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குகிறது. அத்தாக்குதலின் காரணமாக வெளியேறிய மக்களை வேலிகளுக்குள் சிறைபடுத்துகிறது. அப்பாவி மக்களை உணவு கொடுக்காமல் சாகடித்து வருகிறது” என்று அங்கு மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவை சங்க அலுவலர் கூறியுள்ளார்.

சிறிலங்க படைகள் தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி நோயர்களையும் கொன்று குவித்து வருவதையடுத்து, முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனையை வேறொரு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் இந்த அலுவலரின் தலைமையிலான மனிதாபிமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மனிதாபிமான பணியாளர்களும், மருத்துவர்களும் அளித்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நெட்.காம், இன்றும் வான் வழியாகவும், கனரக பீரங்கிகளைக் கொண்டும், எறிகணைகளை வீசியும், பல்குழல் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வீசியும் ஏராளமான தமிழர்களை சிறிலங்க இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், கொல்லப்பட்டவர்களும், காயம் பட்டவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படாத காரணத்தினால் உயிரிழந்தோரின் கணக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

“சிறிலங்க அரசின் இன அழிப்புத் திட்டத்திற்கு முழு உதவி அளித்துவரும் இந்திய அரசு, இந்தியாவில் தேர்தல் முடிந்து அடுத்த அரசு பதவி ஏற்பதற்குள் ‘எல்லாவற்றையும்’ முடித்துவிடுமாறு அளித்த யோசனையின் அடிப்படையில்தான் வான் வழித் தாக்குதல் உட்பட அப்பாவி மக்களை பட்டினி போட்டுக் கொல்லும் முறையும் கடைபிடிக்கப்படுவதாக” அச்செய்தி கூறுகிறது.

சிறிலங்க அரசின் திட்டமிட்ட இன அழிப்பினால் அப்பாவித் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் நிலையில், அதுகுறித்து இதுவரை தீர்மானமாக எதையும் விவாதிக்காமல் ஐ.நா. தட்டிக் கழித்து வருவது உலகத் தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மனிதாபிமான ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு விமானம் மூலம் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் வெளியேயும் உள்ள மக்களுக்கு உணவு பொட்டலங்களை வீச வேண்டும் என்றும், அது மட்டுமே இன்றுள்ள நிலையில் செய்ய்க்கூடிய ஒரே காப்பாற்று நடவடிக்கையாக இருக்கும் என்றும் அந்த செஞ்சிலுவை அலுவலர் கூறியுள்ளார்.

Comments