மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்... இருபதா யிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்... பிரபாகரனின் சம காலத் தளபதிகள்... என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள் -
''முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?' என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி
வரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப் பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், 'நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பாரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப் பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!' என்று சொல்லி இருக்கிறார்.
அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப்பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத பாரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார். மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங் களை வகுத்துக்கொடுத்தார்.
இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள். ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.
தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார். முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், 'நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!' என்று சொல் லியிருக்கிறார்கள்.
ஆனால், 'மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்கு தல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள்.
இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள். அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட... அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள்.
அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!'' என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.
''மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன். அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்' என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.
தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.
ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூர மாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடிய வில்லை. அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.
ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலை வரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது. அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன் படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத் திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.
ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி 'வீர வணக்க' தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!'' என்கிறார்கள் உறுதி குறையாமல்.
- இரா.சரவணன்-
Comments