இளைஞர்கள் இலங்கை செல்லதயார் பாரதிராஜா

இலங்கை தமிழர்களை காப்பாற்ற பல லட்சம் இளைஞர்கள் புறப்பட தயார்'' என சினிமா இயக்குனர் பாரதிராஜா பேசினார்.திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் சார்பில் சிவகங்கை, காரைக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழர்களை காக்க தடைகளை உடைத்து பல லட்சம் இளைஞர்கள் புறப்பட தயார். காங்., கட்சியை

விமர்சிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தால் எந்த கட்சியாக இருந்தாலும் எதிர்ப்போம்.காங்., ஆட்சியில் தான் இலங்கைக்கு ராணுவ, பொருளாதார உதவிகள் செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இலங்கை ராணுவம் மட்டுமின்றி உலக நாடுகளே வந்தாலும் பிரபாகரனை நெருங்க முடியாது. தனி ஈழம் ஏற்படுத்த உறுதி எடுக்க வேண்டும். தனி ஈழம் அமைப்பேன் என உறுதி தந்துள்ள வேலுநாச்சியாரை (ஜெ.,) ஆதரிப்போம்' என்றார்.

இயக்குனர் சீமான் பேசியதாவது:இலங்கையில் பிரபாகரன், சோனியாவுக்கு இடையே தான் சண்டை நடக்கிறது. இலங்கைக்கு எல்லா உதவிகளையும் சோனியா செய்கிறார். 25 ஆண்டுகள் பதவி வகித்த ப.சிதம்பரம் இந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை.

அவரது வேட்டியில் செம்மண் கரை படிந்தது உண்டா? இலங்கைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் கொடுத்துள்ளார்.போரை உலக நாடுகள் கண்டிக்கும் போது ஏன் பணம் கொடுத்தீர்கள். அப்படி என்ன தமிழ் இனத்தின் மீது ஆத்திரம். உணவு இன்றி தவிக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை காப்பாற்ற துப்பு இல்லை.

என்னை சிறை படுத்த முடியும். எனது சிந்தனை, செயல்களை என்ன செய்வீர்கள். இருப்பது ஒரு உயிர். எப்போது போனாலும் பரவாயில்லை. 60 ஆண்டுகளாக இனப்படுகொலை நடக்கிறது. பாகிஸ்தானை 2 ஆக பிரிக்க முடியும். இலங்கையை பிரிக்க முடியாதா?. போர் நின்றதாக கூறி மக்களை ஏமாற்றியவர்களை உலகம் மன்னிக்காது.

தமிழ் ஈழத்திற்காக அ.தி.மு.க., வை ஆதரிக்கிறோம். வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் எதிர்ப்போம்' என்றார்.இயக்குனர்கள் சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, கவுதமன், கவிஞர் சிநேகன் பங்கேற்றனர்.

Comments