"இராணுவச் சீருடையில் வந்த அவர்கள் மூன்றாவது பெண்ணின் உடைகளைக் களைந்தபோது நான் எனது கண்களை மூடிக்கொண்டேன். இம்மாதம் என் ஊதியத்தில் ஏதேனும் வெட்டு விழுமோ என்பதை நினைத்தபோது இறுக்க மூடிய கண்களை நான் கடைசி வரை திறக்கவே இல்லை."
ஜேர்மனியின் நாஜி முகாமில் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போதோ,
பாலஸ்தீனத்தில் இன்று அமெரிக்க,
யூத அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ,
ருவாண்டாவின் டுட்சிக்களுக்கு எதிரான ஹுட்டுக்களின் படுகொலைக் காலங்களின் போதோ எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை.
ஈழத்தில் அன்றாடம் இனச் சுத்திகரிப்பில் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது அதைப் பார்த்து மௌனமாக இருக்கும் தமிழ்நாட்டு ஊடகங்களையும், ஊடக நண்பர்களையும் நினைத்த போது நான் எழுதித் தொலைத்த கவிதைதான் இது,
மௌனம் என்பதன் நேரடிப் பொருளான சம்மதம் என்பதை இலங்கையில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் நிலையில் இருந்து நாம் புரிந்து கொள்கிறோம்.
ஆனால், சம்மதம் என்கிற நிலையையும் கடந்து இன்றைய இந்தியா ஒட்டு மொத்த ஈழத் தமிழர் அழிப்பிற்கும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகிறது என்பதும் உண்மையாகி இருக்கிறது.
ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நெருக்கடியோடு ஊடக முதலாளிகளின் தொழில் ரீதியான தொடர்பு என்று இன்று ஆளும் திமுகவின் விருப்பங்களுக்கு ஏற்ப ஈழத்தில் அன்றாடம் கொல்லப்படும் மக்களின் செய்திகள் தமிழக ஊடகங்களில் முக்கியத்துவமற்று எழுதப்படுகின்றன.
கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களோ நேரடியாக இலங்கையில் போரே நடைபெறவில்லை என்பது போன்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அல்லது வவுனியா முகாமில் இராணுவ வீரன் ஒரு தமிழ் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுக்கிற படத்தைப் போட்டு சென்னையில் இருக்கும் சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரி அம்சாவுக்கு வாலாட்டிக் கொண்டிருப்பதன் மூலம் கொல்லப்பட்ட பல நூறு ஈழத் தமிழ் குழந்தைகளின் கொலைகளை கேள்விகளற்ற ஒன்றாக பெரும்பாலான தமிழ்நாட்டு ஊடகங்கள் மாற்றுகின்றன.
கொல்லப்படும் மனித உயிர்கள் குறித்த அக்கறை சிறிதளவு கூட இவர்களிடம் இல்லாமல் போனதை நாம் சமகாலத்தில் எதிர்கொள்கிறோம்.
தமிழ்நாட்டு ஊடகங்களின் மௌனம் இப்படி இருக்க, வட இந்திய ஆங்கில ஊடகங்களோ போர் நடைபெறும் பூமியான ஈழத்துச் செய்திகளில் இலங்கை அரசாங்கம் எதைக் கொடுக்கிறதோ அதை அப்படியே வாந்தி எடுத்து கொட்டிக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் புலிகளின் தோல்விக்கான நேரம் ஒன்றை கணித்துக்கொண்டு அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புலிகளின் தோல்வியை ஒட்டுமொத்த ஈழ மக்களின் தோல்வியாக மட்டுமல்லாமல், இந்தியத் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்கிற பார்வையின் வெளிப்பாடுகள்தான் இந்த ஆங்கில ஊடகங்களில் அப்பட்டமான இனவாதமாக உருவாகி இருக்கிறது.
இது எந்த அளவுக்கு மோசமான இனவாதச் சித்தரிப்பாக மாறியிருக்கிறது என்றால் வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக போராடிய போது அதை பதிவு செய்கிற ஆங்கில ஊடகங்கள் அதை (pro tamils) அதாவது தீவீர தமிழ் ஆதரவாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள்
தமிழ்நாட்டில், தமிழர்களால், ஈழத் தமிழர்களுக்காக நடத்துகிற போராட்டத்தை தீவிர தமிழ் ஆதரவாளார்கள் என்று பதிவு செய்கிற திமிர் எங்கிருந்து வருகிறது.
இந்தியத் தமிழர் மீதான வெறுப்புதான் ஈழத் தமிழர் படுகொலைச் செய்திகளையும் பதிவு செய்ய மறுக்கிறது.
ஈழத்தில் புலிகள் வலுப்பெற்றால் அது இந்தியத் தமிழர்களுக்கான எழுச்சி அரசியலாக மாறிவிடும் என்றும் பார்க்கப்படுகிறது.
தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் என்றால் சென்னையிலேயே செட்டில்மெண்ட்.
அதுவே ஆங்கிலம் பேசும் மேதாவிப் பத்திரிகையாளர்கள் என்றால் கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள்.
பெரும்பாலான ஊடகவியாலாளர்கள் இலங்கை அரசால் வழங்கப்படும் சில நூறு டாலர்களுக்கு விலை போய்விட்டார்கள்.
'மக்கள்' தொலைக்காட்சி, அரசியல் காரணங்களுக்காக ஈழத்துச் செய்திகளுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் 'ஜெயா' தொலைக்காட்சி தவிர்த்து பெரும்பாலான தமிழக ஊடகங்களில் நிலை இதுதான்.
இன்றைய தமிழகத்தில் இனப்படுகொலை பற்றிய விழிப்பு நிலை எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.
அதே நேரத்தில் போருக்குப் பிந்தைய பேச்சான தனி ஈழம், அல்லது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படுகிறது. பேசப்படுவதோடு ஈழம் முழுமையான தேர்தல் பிரச்சினையாக மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழக அரசியல்வாதிகளிடம் இன்றிருக்கும் வேகம் வாக்கெடுப்பு முடிந்த பிறகு இருக்குமா? என்பதும் தெரியாது ஆனால் நிரந்தரமான ஈழ விடுதலை ஆதரவாளர்களை கவர்ந்திருக்கும் ஜெயலலிதாதான் இன்று இவர்களுக்கு உற்சாக டானிக்.
தமிழ்நாடு தொடர்பான அச்சம் டில்லி காங்கிரஸ்காரர்களிடம் எந்த அளவுக்கு பரவிக் கிடக்கிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும்.
ஒன்று சோனியாவின் வருகைக்காக சென்னை தீவுத்திடலில் பொதுக்கூட்ட மேடை ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றது. மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலரை அழைத்து மேடையை நோக்கி செருப்பை வீசச் சொல்லி செருப்பு விழுந்த தூரத்தை அளந்து அந்தப் பகுதிக்கு வெளியே பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், அமரும் பகுதியை அமைத்தார்களாம்.
அது போலவே பிரதமர் மன்மோகன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தபோது பத்திரிகையாளர்கள் யாரும் கையில் எடுத்து வீசும் படியான எந்தப்பொருளையும் சந்திப்பு அறைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.
செல்போன், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததோடு மன்மோகன் அமரும் மேடைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் மிக நீண்ட இடைவெளி இருந்தது.
சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் மக்களுக்கும் இடையே மேடைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த இடைவெளிதான் இனப்படுகொலை மீதான தமிழக மக்களின் கோபம்.
இந்த இருவருமே சென்னையை விட்டுக் கிளம்பிய பிறகு காவல்துறை அதிகாரிகள் விட்ட நிம்மதிப் பெருமூச்சுதான் தமிழக மக்களின் இனப்படுகொலை மீதான தார்மீக ரீதியிலான கோபம்.
சரி, மன்மோகன் எதற்காக சென்னைக்கு வந்தார். வந்து என்ன சொன்னார். என்றால் அவரது பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதானமாக இருந்தது ஐந்து விடயங்கள்தான்.
1. வடக்கு மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கைக்குச் செல்வார்கள். இந்திய இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்கள் விரைவில் அவர்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.
2. இப்போது எங்கள் கவனமெல்லாம் போரால் பாதிக்கப்பட்டு முகாம்களுக்குள் இருக்கும் மக்களைப் பற்றித்தான். அவர்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பது பற்றித்தான்.
3. இலங்கை ஒரு பூரண இறையாண்மை உள்ள நாடு அப்படியான தேசத்திற்குள் நாம் தலையிடுவது முடியாது. அண்டை நாட்டிற்கு இராணுவ உதவிகள் செய்வதும் பயிற்சிகள் கொடுப்பதும் சகஜமான ஒன்று.
4. இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று ஒன்றுபட்டு இலங்கைக்குள் வாழ இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
5. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.
என்பதான ஐந்து கருத்துக்கள் பொதுவாக இருந்தது.
மேலே உள்ள ஐந்து கருத்துக்கள். குறித்தும் நாம் பல முறைப் பேசியாகி விட்டது.
இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி செய்யவில்லை என்று இந்தியத் தரப்பும் இதுவரை மறுக்கவில்லை. மாறாக வெளிப்படையாகவே ஒத்துக்கொள்கிறது.
அது போல போர் நிறுத்தம் குறித்தும் இந்தியத் தரப்பு இதுவரை இலங்கை அரசிடம் கேட்கவில்லை.
சென்னைக்கு வந்த மன்மோகன் மறந்தும் போர் நிறுத்தம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
மாறாக எப்போதெல்லாம் இந்தியத் தரப்பினர் கொழும்புவுக்கு சென்று பேசி வந்தார்களோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான இனப்படுகொலை முழு வீச்சுப் பெற்றது என்பதற்கு மிகச் சரியான சான்றாக மன்மோகன் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்ற சில மணி நேரங்களுக்குள் இலங்கை இராணுவம் தன் கொடூரத் தாக்குதலை தொடங்கி விட்டது.
கனரக ஆயுதங்களைக் கொண்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை இரக்கமற்ற முறையில் கொன்று குவித்திருக்கிறது.
நாம் தொடர்ந்து போர் நிறுத்தம் கேட்கிறோம். இவர்களோ கொல்லப்படுகிற நிர்க்கதியாய் விடப்படுகிற மக்களுக்கான நிவாரணங்கள் குறித்துப் பேசுகிறார்கள்.
அப்படியான நிவாரணங்களைச் செய்கிற யோக்கியதை இந்திய அரசுக்கோ தமிழக அரசிற்கோ இருக்கிறதா? என்றால் கொலைக்கு துணை போய்விட்டு சவங்களை அடக்கம் செய்ய பெட்டி தயாரித்து அனுப்புகிற செயலைத்தான் இந்தியா இப்போது ஈழத்தில் செய்து கொண்டிருக்கிறது.
இலங்கை இறையாண்மை உள்ள தேசம் என்றால்? ஈழ மக்கள் மீதான படுகொலையை தடுக்க இலங்கையின் இறையாண்மை மன்மோகனை தடுக்கும் என்றால் அப்படியான இறையாண்மை உள்ள தேசத்தில் கண்ணிவெடியை அகற்றுகிறோம் என்ற போர்வையில் இராணுவ வீரர்களை மட்டும் அனுப்புவது எந்த வகையில் இந்திய இறையாண்மைக்கு உகந்தது என்று ஒரு கேள்வியை யாராவது ஒரு பத்திரிகையாளர் கேட்பார் என்று எதிர்ப்பார்த்தோம்.
அதற்கான ஊடகச் சூழலே தமிழகத்தில் இல்லாதபோது நாம் மட்டும் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்.
அண்டை நாட்டுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்குவது சகஜமென்றால் பாகிஸ்தானுக்கு இதே பயிற்சியை இந்தியா வழங்குமா?
அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியமைத்த பிரதமர் பிரசந்தாவின் இராணுவத்துக்கு ஏன் இந்தியா பயிற்சியளிக்கவில்லை? மாறாக நேபாளம் சீனாவோடு நெருங்குகிறது என்பதற்காக நேபாளத்தில் இன்று அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கியதே இந்தியாதானே?
நேபாளம் எந்த சீனாவோடு நெருங்குகிறதோ அதே சீனாவோடு இலங்கையும் நெருங்குகிறதே? இந்தியாவின் இந்துப் பிராந்திய நலன் கருதியாவது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் சீனா இந்தியாவின் வடக்கு - கிழக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
இப்பிராந்தியத்தின் சீனாவிடம் மோதி வெற்றிபெற முடியாது. என்கிற அச்சம் தானே இலங்கையில் இனப்படுகொலையில் இந்தியாவை கை நனைக்கத் தூண்டுகிறது.
மன்மோகன் வந்து சென்ற ஒரு இரவுக்குள் 2 ஆயிரம் கொலைகள். மறுநாள் மாலை சென்னை தீவுத்திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிற சோனியா காந்தியோ இந்தியாவின் அழுத்தங்களால் இலங்கையில் போர் நின்றிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.
எவ்வளவு துணிச்சல் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்வதன் மூலம் பொய்யை மெய்யாக்கப் பார்க்கிறார்கள்.
ஒரு பிரதமர் பொய் பேசவும், பிரதமரை இயக்கும் ஒரு செல்வாக்குள்ள பெண்மணி பொய் பேசவும் பின்னால் இருந்து உற்சாகமளிப்பது தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிதான்.
இனப்படுகொலையில் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டிய முதல்வரே பொய் சொல்கிறார். டில்லியில் இருந்து வந்து செல்கிற நாம் சொல்வது மட்டும் எப்படி பொய்யாக இருக்கும் என்று சோனியாவும், மன்மோகனும் பொய் சொல்கிறார்கள்.
பொய்யை உண்மை போலப் பேசுகிறார்கள்.
வளைக்குள் சிக்கியிருக்கும் முயல்கள் இரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்து இவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
இந்த நூற்றாண்டில் இது மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம். புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் இனப்படுகொலையின் சூத்திரதாரிகள் இவர்களே!
இன்றைக்கு ஈழம் என்கிற சுதந்திரமான தேசீய இன விடுதலைக் கருத்தியல் தமிழகத்தில் மிகவும் வலுப் பெற்றிருக்கிறது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் ஒரு புதிய தலைமுறை உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது.
முப்பதாண்டுகால ஈழ விடுதலை ஆயுதப் போரில் இது மூன்றாம் தலைமுறைக்கான போராட்டம். அவரவர் வழியில் அவரவரால் இயன்ற அளவு போரடுவோம்.
இந்தியாவின் விருப்பத்திற்கிணங்க அல்ல, இரத்தவெறி கொண்ட பாசிச பயங்கரவாத இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கிணங்க அல்ல மாறாக நமக்காக நமது மக்களுக்காக குரல் கொடுப்போம்.
நமது மக்களை இனப்படுகொலைகளில் இருந்து காப்போம்.
உலகத்தை விழித்திருக்கச் செய்வோம்.
முதலில் போர் நிறுத்தம் செய்!
மக்களை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பு.
இலங்கை இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்று.
சுதந்திர தமிழீழத்தை அங்கிகரி..
இதுதான் இன்றைய உலகின் முன்னால் நாம் முன்வைக்க வேண்டிய முழக்கம்.
(இக்கட்டுரைக்கு பொருத்தமான ஓவியம் ஒன்றை வரைந்து தந்த நண்பரும் மாணவருமான புதியவனுக்கு நன்றி)
அ.பொன்னிலா
கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: aponnila@gmail.com
Comments