![](http://www.tamilwin.org/photos/thumbs/forgien_country/others/swiss_120509_5.jpg)
சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் அமைந்துள்ள சமஷ்டி நாடாளுமன்ற முன்றலில் உள்ள வளாகம் நிரம்பி வழிந்தது. குறுகிய கால இடைவெளியில் அங்கே குழுமிய மக்களின் எண்ணிக்கை மூவாயிரத்தையும் தாண்டியது.
தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டுவரும் செய்தி வெளியாகியதை அடுத்தும் அதனைத் தடுத்துவிட முடியாத கையறு நிலையிலே புலம்பெயர் தமிழ் மக்கள் இருப்பதனாலும் விசனமடைந்த நிலையில் இருந்துவரும் தமிழ் மக்களின் உணர்வுகள் இந்த அவசர ஒன்றுகூடலிலே வெளிப்பட்டது. சிறீலங்கா அரசின் இனவெறிக் கொலைத் தாண்டவத்தையும் சர்வதேசத்தின் மௌனத்தையும் கண்டிக்கும் கோசங்களையும் எழுப்பியவாறு பிற்பகல் 4 மணி முதல் குழுமியிருந்த மக்கள் உணரச்சிப் பிழம்புகளாக மாறியிருந்தனர்.
இந்த நிலையில் சிங்களத்தின் இனவெறிப் போரில் இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு உணர்த்தும் நோக்குடன் இளையோர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் திடீரென அருகே அமைந்திருந்த இந்தியத் தூதரகத்தை நோக்கிச் ஊர்வலமாகச் சென்றனர். மக்கள் இனங்கானாதவாறு ஏற்கனவேயே இந்திய தேசியக்கொடி அகற்றப்பட்டிருந்தது.
மாலை 7.00 மணியளவில் அங்கே குழுமியோர் கோசமெழுப்பிக் கொண்டிருக்கையில் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இதேவேளை குழுமியிருந்தோர் மத்தியில் இருந்து தூதரகத்தை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. அதில் தூதரகத்தின் கண்ணாடிகள் சில உடைந்தன. இதனையடுத்து காவல்துறையினர் இறப்பர் குண்டுகளால் சு10டு நடத்தினர். இதன்போது இளைஞர் ஒருவருக்கு மூக்கில் காயமேற்பட்டது. தூதரகத்தினுள் இருந்த பணியாளர்கள் பின்புற வாசலினால் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கோசங்களை எழுப்பியவாறே அங்கிருந்து அகன்ற மக்கள் நாடாளுமன்ற முன்றலுக்கு மீண்டும் வந்து இரவு 11.00 மணிவரை அங்கே குழுமியிருந்து விட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.
Comments