யாருக்கு நம் வாக்கு? - இனத் துரோகிகளை வீழ்த்த கிடைத்திருக்கும் வாய்ப்பு

Manmozhi Logo

தமிழீழத் தமிழர்களைக் காக்கவும், தமிழகத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து மண்மொழியில் எழுதி வந்தோம்.

இதழில் எழுதப்பட்ட அளவு இல்லையாயினும் அதை நோக்கிய திசையில், ‘இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கம்’ தோற்றம் பெற்றது குறித்தும், அதன் செயல் பாடுகள் குறித்தும் மண் மொழி 26வது இதழில் எழுதியதோடு, தேர்தல் அறிவிப்பால் இந்த கூட்டணி சிதறி விடக் கூடாது, மாறாக தமிழீழ ஆதரவுக் கூட்டணியே தேர்தல் கூட்டணி யாகவும், பரிணமிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை யும் வெளியிட் டிருந்தோம்.

ஆனால் அந்த வேண்டுகோள் முழுமையடைய வாய்ப்பில்லாமல் பா.ம.க., ம.தி.மு.க., இ.க.க, அ.தி.மு.க. அணியிலும், வி.சி.க. தி.மு.க. அணியிலுமாக இடம் பெற தமிழீழ ஆதரவு கட்சிகள் இருவேறு அணியாகப் பிரிய வேண்டியதொரு கெடு வாய்ப்பான சூழல் நேர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழல் உருவாகக் காரணமென்ன? எந்தப் பின்னணியில் இப்படிப்பட்ட அணி சேர்க்கைகள் உருவாயின என்பதெல்லாம் ஒரு புறம் நமக்குக் கேள்வியானாலும், அதற்கும் அப்பால் இப்படி உருவாகியுள்ள கூட்டணிகளில் தமிழ் உணர்வாளர்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், மனித நேயப் பற்றாளர்களது நிலை என்னவாக இருக்க வேண்டும், எதிர் வர இருக்கும் தேர்தலில் அவர்கள் எப்படிப்பட்ட நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலருக்கும் முக்கிய கேள்வி. எனவே, இதுகுறித்து நம் ஆழ்ந்த சிந்தனைக்காக சில கருத்துகள் :

1. தேர்தலின் இலக்கு : பொது வாகத் தேர்தல் என்றால் யாரை வெற்றி பெறச் செய்வது என்பதுதான் முக்கிய மான கேள்வியாயிருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் யாரை வீழ்த்துவது என்பதுதான் முக்கிய கேள்வி.

ஏன் இந்த வீழ்த்த வேண்டிய கேள்வியை நாம் முன் வைக்க வேண்டி யிருக்கிறது என்றால், முதலில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈழச் சிக்கலில், தமிழக மக்கள் உரிமைக் காப்பு நடவடிக்கையில் உடனடியாக எந்தவித பெரிய மாற்ற மும் நிகழ்ந்து விடப் போவதில்லை. மாறாக இச் சிக்கல்கள் தொடரவே செய்யும் என்பது ஒன்று.

அதேவேளை களத்தில் நிற்கும் மூன்று சக்திகளில் ஒப்பு நோக்கில் எந்த சக்தி குறைவான கெடுதி விளைவிப்ப தாக இருக்கும் என்கிற நோக்கிலான கணிப்பு மற்றொன்று.

இதில் முதலாவது கேள்விக்கான பதில், இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டிய சக்திகள், தமிழீழத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம், வஞ்சகம் செய்து வருகிற காங்கிரசும் தி.மு.க.வும் தான்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும், அவற்றைத் தணிக்கவும், திசை திருப்பவும், தமிழக மக்களை ஏமாற்றவும் இவ்விரு கட்சிகளும் கையாண்டுவரும் உத்திகளையும்,

இது மட்டுமல்ல, சிங்கள இனவெறி அரசின் தமிழீழ அழிப்பு இனவெறிப் போருக்கு தில்லி காங்கிரஸ் அரசு இராணுவ உதவிகள், படைப் பயிற்சி கள் அளித்து வருவதுடன் நேரடி யாகவே இந்திய இராணுவத்தினரையும் களத் துக்கு அனுப்பி சிங்களர்களின் தமிழின அழிப்புப் போருக்கு துணை நிற்பதை யும், அதில் சொந்த ராணுவத்தையே பலி கொடுத்து வருவதையும், தி.மு.க. அரசு இதை மூடி மறைத்து தில்லி அரசு ஏதோ தமிழீழ மக்கள்பால் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது போல படம் காட்ட முயன்று காங்கிரஸ் அரசுக்கு காவடி தூக்கி வருவதையும் நோக்க எவரும் இதைப் புரிந்து கொள்ளலாம். எனவேதான் இந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்கிறோம்.

ஆனால், இதில் காங்கிரசை வீழ்த்தவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரிய வில்லை. காங்கிரஸ் போட்டியிடும்

16 தொகுதிகளிலும் அதை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூடத் தோர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எல்லாரும் குறியோடும், மிகுந்த வெறியோடும் இருக்கிறார்கள்.

எனில், தி.மு.க. வையும் இந்த நிலையில் வைத்துப் பார்க்க வேண் டுமா. காங்கிரசோடு சேர்ந்து அதையும் வீழ்த்த வேண்டுமா என்பதில் தான் சிலருக்குக் கேள்வியிருக்கிறது. ஆயிரம் தான் தி.மு.க. தமிழர்களுக்குக் துரோக மிழைத்தாலும், சில தமிழ் உணர் வாளர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான அறியாமை வயப் பட்ட பற்று, தி.மு.க.வை விட்டால் வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது என்ப தான தயக்கம் ஆகியனவே இந்த கேள்விக்குக் காரணம்.

அதாவது காங்கிரஸ் நிற்கும் 16 தொகுதிகளிலும், அதைத் தோற்கடிக்க அதை எதிர்த்து வீழ்த்த எந்தக் கட்சிக் கும் வாக்களிக்கத் தயாராயிருக்கும் மனம், தி.மு.க.வை மட்டும் எதிர்க்கத் தயங்குகிறது. குறிப்பாக தி.மு.க. -வும், அ.தி.மு.க.வும் நேரடியாக மோது மிடங்களில், தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயக்கம் காட்டுகிறது.

இந்த தயக்கத்திற்கு காரணம், கருணாநிதி ஆட்சியிலாவது ஈழ மக் களுக்கு ஆதரவாக பேச, கூட்டம் போட, போராட்டம் நடத்த அனுமதி கிடைக்கிறது. ஜெ. ஆட்சி வந்தால் அந்த உரிமைகூட இருக்காதே என்கிற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இதனால் இரண்டையும் ஒப்பு நோக்க தி.மு.க.வுக்கு வாக்களிப்பதுதானே சரியாயிருக்கும் என்று கருதுகிறார்கள்.

இந்தக் கருத்தோட்டத்திற்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சலிப்பூட்டும் அளவுக்கு விளக்கம் அளித் திருக்கிறோம். முதலில் ஜெ. ஆட்சி சர்வாதிகார ஆட்சி, கருணாநிதி ஆட்சி சனநாயக ஆட்சி என்று கருதுவதே மயக்கமானது. இருவரது ஆட்சியி லுமே தமிழ் உணர்வாளர்கள், தமிழீழ ஆதாரவாளர்கள் சிறை வைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்களது சனநாயக உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது என் பதே அனுபவம்.

அப்படியே ஒரு வாதத்துக்கு மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்வ தானாலும், கருணாநிதி ஆட்சி சனநாயக உரிமை என்பதன் பேரால் மக்களுக்கு பராக்கு காட்டி வருகிறதே தவிர, போராடும் மக்களின் எந்தக் கோரிக்கை யையும் வலியுறுத்தி அதைப் பெற்றுத் தரமுயலாமல் மக்களை ஏமாற்றி வஞ்சித்து, வருகிறது. இதையே தொழி லாகக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. எனவே உதவி செய்வதாகக் கூறி படம் காட்டி வஞ்சித்து வரும் கட்சிக்கும், நேரடியாகவே எதிர்ப்புக் காட்டும் கட்சிக்கும் பெரும் வேறுபாடு எதுவுமில்லை. இத்துடன் கூட இருந்து குழி பறிக்கும் துரோகியை விட, நேரடி யாக வரும் எதிரி எவ்வளவோ தேவ லாம் என்றே தொடர்ந்து சொல்லி வந் திருக்கிறோம்.

அந்த வகையில் துரோகியை வீழ்த்தி எதிரியை முன் நிறுத்த வேண் டும் என்பதே நம் வேண்டுகோள்.

இதில் இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு ஆதரவான உணர்வு தமிழகமெங்கும் பொங்கி எழுந்துள்ள இத்தருணத்தில் தான் தனிமைப்பட்டு விடக்கூடாது என்கிற அச்சத்திலோ, வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டு விடுமோ என்கிற பயத்திலோ, ஈழச் சிக்கலுக்காக ஒரு நாள் பட்டினிப் போராட்டம் இருந்தார் ‘ஜெ’. அவர் ஈழப் போராளிகளுக்கு எதிரான கருத்து கொண்டவராக இருந்தும் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை - தன்னுரிமை அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்றிருக் கிறார். இதை அவர் உண்மையாகச் சொன் னாரா, கண் துடைப்பாகச் சொன்னாரா என்பதெல்லாம் மிகுந்த ஆராய்ச்சிக் குரியதாகக் கொண்டாலும், தமிழக மக்களுக்கு எதிராகக் கருத்து கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்கிற கட்டாயத்துக்கு அவர் ஆளாகி யிருக்கிறார் என்கிற அளவி லேனும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆக, இந்த நிலையில் நம் எதிரில் உள்ள கட்சிகள் இரண்டு. தமிழக மக்களை என்ன சொல்லியும் ஏமாற்றலாம், எப்படியும் வஞ்சிக்கலாம் என்ற நிலை யில் இருக்கும் தி.மு.க., தமிழகத்தில் தமிழீழ மக்களுக்கு எதிரான நிலை எடுத்து அரசியல் நடத்த முடியாது என்கிற அச்சத்தில் இருக்கும் அ.தி.மு.க. இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதே தற்போது உணர்வாளர்கள் மத்தியில் உள்ள கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடைகாணும் முன் இப்படி யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் தி.மு.க. அணி வெற்றி பெற்றால், இதைத் தங்கள் நிலைப் பாட்டுக்குத் தமிழக மக்கள் கொடுத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்வார்கள். காங்கிரஸ் - தி.மு.க. நெருக்கம் மேலும் அதிகமாகும். தமிழ் மக்களுக்கு எதி ரான வஞ்சகம் மேலும் தீவிரமாகும். அ.தி.மு.க. அணி வென்றால் ஈழ எதிர்ப்பு நிலைபாடு எடுக்கத் தயங்கும். ஏற்கெனவே ஈழ எதிர்ப்பு நிலைபாடு எடுத்து அதனால் தமிழக மக்களால் தோற்கடிக்கப்பட்ட தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளின் அனுபவம் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஈழச் சிக் கலின் தீர்வுக்கான தன் நிலைப்பாட்டில் ஓரளவேனும் மாற்றம் வரும். அத்துடன் தேற்கடிக்கப்பட்ட தி.மு.க.வும் தன் தோல்வியிலிருந்து ஓரளவு பாடம் கற்று, உண்மையாகவே ஈழ மக்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்க முயலும். இரண்டு கட்சிகளுமே அடுத்த இரண் டாண்டுகளில் வர இருக்கிற சட்ட மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சற்றேனும் ஈழ ஆதரவு நடவடிக்கை களை, அதற்கான போராட்டங்களை மேற்கொள்ள முயலும்.

ஆகவே, இப்படி எந்த நோக்கில் பார்த்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டில் தி.மு.க.வை தோற்கடிப் பதே, அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வதே பயனுள்ளதாயிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக, காங்கிரஸ் நிற்கும் 16 தொகுதிகளிலும் காங்கிரசை வீழ்த்து வது, தி.மு.க. நிற்கும் 21 இடங்களிலும் தி.மு.கவை எதிர்த்து யார் நிற்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க.வுக்கு எதிராக அதை வீழ்த்தும் அணிக்கு வாக்களிப்பது என்கிற நிலை யையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

மீதமுள்ள மூன்று தொகுதிகளில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம். இது தி.மு.க. அணியில் கூட்டணியாயி ருப்பதால் வீழ்த்த வேண்டிய கட்சி என்பதில் எவருக்கும் தயக்கம் இருக்க முடியாது. ஆனால் வி.சி.க. நிற்கும் இரு தொகுதிகள்தான் பலருக்கும் என்ன செய்வதென்று பிரச்சனை.

வி.சி.க. தொடர்ந்து ஈழ விடு தலைக்கு ஆதரவாக, கருத்துரிமைப் பறிப்புக்கு எதிராக போராடி வந்த கட்சி. நியாயமாய் அது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்து ஜெ. அணியில் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் என்ன நெருக் கடியோ, என்ன நிர்ப்பந்தமோ, அது தி.மு.க. அணியிலேயே தங்கி விட்டது. காங்கிரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வந்த வி.சி.க. காங்கிரசோடு சமரசமாகி அதனோடு குழையும் அவலத்துக்கு ஆளாகியிருக்கிறது.

இந்நிலையில் தி.மு.க. காங்கிர சோடு சேர்ந்து அதையும் எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

என்றாலும், வி.சி.க. தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், தாங்கள் பதவிக்கு வரக் கூடாது என் பதால் தங்களை ஓரம் கட்ட முனையும் முயற்சியிலேயே தங்களைத் தோற் கடிக்க முயல்கிறார்கள் என்று குறைப் பட்டுக் கொள்ள அது சார்ந்த பிரச்சாரத் தில் ஈடுபடலாம். தவிர, என்னதான் அது காங்கிரஸ் - தி.மு.க. அணியில் இருந் தாலும் அதன் ஈழ ஆதரவு உணர்வு முற்றாக மங்கிவிட்டது. இத்தேர் தலையொட்டிய பிளவு, பிரிவும் என் றென் றைக்கும் நிரந்தரமானதல்ல. தேர்தல் முடிந்தபின் நாளைக்கே ஈழச் சிக்கலின் தீர்வுக்காக பழையபடியே அனைவரும் ஒன்று சேர்ந்து போராட லாம் என்கிற நிலையும் ஏற்படலாம்.

எனவே, இதெல்லாம் கருத்தில் கொண்டு இரண்டு ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. சிதம் பரத்தில் களத்தில் நிற்கும் இரண்டு கட்சிகளுமே ஈழ ஆதரவு கட்சிகள் என்ப தால் உணர்வாளர் கள் எவரும் அவர வர்கள் விரும்பும் கட்சிக்கு வாக் களித்துக் கொள் ளட்டும் எனலாம்.

அதேபோல பிரச்சார களத்திலும் ஒருவரை யொருவர் கடுமையாக விமர்சனம் செய்து சாடிக் கொள்ளா மல், நேரடியாக வும், மோதிக் கொள்ளாமல், கண்ணியமாகவும், நாகரிகமாகவும் பிரச்சாரம் செய்து நேர்மையாக அவரவர்களுக்குள்ள செல்வாக்கிற்கு யார் வருகிறார்களோ வரட்டும் என்கிற அளவில் விட்டு விடலாம் என்றும் சொல்லலாம்.

ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், வி.சி.க. என்கிற இதை இங்கு தனிப்பட்ட ஒரு கட்சியாகப் பார்க்காமல் அதைத் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் ஒரு அங்க மாகவே பார்க்க வேண்டியுள்ளது. வி.சி.க. விற்கு அளிக்கும் வாக்கு காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு அளிக்கும் வாக்காகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.அதாவது வி.சி.க. என்கிற ஒரு தனிப்பட்ட கட்சியின் பால் நாம் கருணை கொண்டு அனுதாபத்தோடு பார்த்து நாம் அளிக் கும் வாக்கு, இதுநாளும் ஈழத் தமிழர் களைப் படுகொலை செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு அதற்குத் துணை போகும் தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்காக ஆகிற நிலை உள்ளது.

ஏன், அ.தி.மு.க. கூட்டணியாக பா.ம.க. வென்றால் நாளை அது தில்லிக்கு ஆதரவாகப் போகாதா, போகாது என்பது என்ன நிச்சயம் என்கிற கேள்வியும் சிலருக்கு எழலாம். நியாயம்.

தேர்தல் முடிந்த பிறகு தில்லியில் யார் ஆட்சியமைக்க வாய்ப்பிருக் கிறதோ அவர்களுக்கு அது காங்கிரசா, பா.ஜ.க.வா, மூன்றாவது அணியா என்பது பற்றிக் கவலைப்படாமல் தமிழகக் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறது. ஆதரவளிக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே எந்தக் கூட்டணி வென்றாலும் தில்லிக்குத் துணை போவதும், தில் லிக்கு ஆதரவளிப்பதும் நிச்சயம்.

என்றாலும், வெற்றி பெற்ற பிறகு தில்லியில் பேரம் பேசும் வாய்ப்போடு நிபந்தனை விதித்து அதற்கு ஆதர வளிக்க முன் வருவது என்பது வேறு. போட்டியிடும் தருணத்திலேயே காங் கிரசுக்கு கொத்தடிமை போல சேவகம் செய்து கொண்டிருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. இதில் பா.ம.க. நிலை முதல் நிலை என்றால், வி.சி.க.வின் நிலை இரண் டாவது நிலை. இந்த இரண்டாவது நிலையே இப்போது நாம் எதிர்க்க வேண்டியது. இந்த அடிப்படையில் நோக்க தெள்ளத் தெளிவாக தற்போதே காங்கிரஸ் ஆதரவு, காங்கிரஸ் கூட்டு என காங்கிரசின் தோளில் கை போட்டு வரும், வி.சி.க.வை உணாவாளர்கள் ஆதரிக்க முடியது.

ஆகவே, இந்த அடிப்படையில், ஏற்கெனவே தமிழினத்தை ஏமாற்றி வஞ்சித்து துரோகமிழைத்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதும், எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஈழ ஆதரவுச் சக்திகளை நாடாளுமன்றம் அனுப்புவதுமே இத்தேர்தலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை யாக, நடைமுறையாக இருக்க முடியும். எனவே, அதற்கேற்பவே நாம் வாக் களிக்கவும், மற்றவர்களை வாக்களிக்கச் செய்யவும் வேண்டும்.

இதற்கடுத்து இன்னும் இரண்டு கேள்விகள். ஒன்று, இரண்டு அணிகளில் எது வுமே சரியில்லை. ஆகவே உணர்வா ளர்களாகிய நாம் மூன்றாவது அணி யாக வாய்ப்புள்ள இடங்களில் ஒரு சில வேட்பாளர் களை நிறுத்த லாமே என்கிற ஒரு கருத்தும், அடுத்து இரண்டு அணிகளுமே சரியில்லாதவை, ஆகவே இரண் டையுமே புறக் கணித்து யாருக் கும் வாக்களிக்காமல் இருந்து விட லாமே என்கிற ஒரு கருத்தும் சிலரிடம் நிலவுகிறது.

மூன்றாவது அணி : தமிழகத்தில் தமிழீழ உணர்வாளர்கள் கொண்ட மூன்றாவது அணி என்பது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க. ஆகிய கட்சிகள், தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்புகள் கொண்ட அணியாக உருப்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி உருவாக வாய்ப்பற்ற சூழலில், இக்கட்சிகள் இருவேறு முகாம்களில் இடம் பெற்றுள்ள நிலையில், வெறும் உணர்வாளர்கள், ஆதரவாளர்களை மட்டுமே கொண்ட அணி, மிகச்சிறிய பலவீனமான அணியாகவே அமையும். இந்த அணியால் தி.மு.க. - காங்கிரஸ் அணியை வீழ்த்த முடியாது என்பதோடு மட்டுமல்ல, வீழ்த்தும் வாய்ப்புள்ள அணியையும் இது பலவீனப்படுத்து வதாகவும் அமையும்.

காரணம், இந்த உணர்வாளர்கள் அணி எந்த வாக்குகளைப் பெற முடி யும். காங்கிரஸ் தி.மு.க. அணியி லிருந்து இதற்கு வாக்குகள் கிடைக் காது. பா.ம.க., தி.மு.க., வி.சி.க., அணியிலிருப்பவர்கள் மட்டுமே இதற்கு ஆதரவாகச் செயல் படுவார்கள். வாக்களிக்கவும் முன் வருவார்கள். இந்நிலையில் இது தி.மு.க. எதிர்ப்பு அணியை வலு விழக்கச் செய்வதாக, எதிர்ப்பு வாக்குகளைக் கலைத்து, அதை சிதறடிக்கச் செய்வதாகவே, இதன் மூலம் ஆளும் தி.மு.க. காங் கிரஸ் ஆதிக்கக் கூட்டணிக்கு வலு சேர்ப்பதாகவே முடியும் என்பதால் இந்த யோசனை தேவையற்றது, நமது இலக்குகளுக்கு எதிரானது என்பதை உணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் புறக்கணிப்பு : ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 25 விழுக்காடு முதல் 40, 50 விழுக்காடு வரையான மக்கள் ஏதாவதொரு காரணம் பற்றி வாக்களிக்காமல் தான் இருந்து வருகிறார்கள். இதற்கு வாக் களிக்க விரும்பாமை, இயலாமை, ஈடுபாடின்மை என பலத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பகுதிக்கு உரிய நலத்திட்டங்களை நிறைவேற்ற வில்லை என்கிற முடிவிலான காரணங் களும் இருக்கலாம். இதற்கு அப்பால் கொள்கை, கோட்பாடு சார்ந்த ஒட்டு மொத்தப் புறக்கணிப்புகளும் காரண மாக இருக்கலாம். எனில், இப்படிப் பட்ட புறக்கணிப்பு என்பது எதிர்ப்பைக் காட்டும் நடவடிக்கை என்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட லாமே அன்றி பெரும் விளைவை ஏற்படுத்தும் என்று கொள்ள முடியாது. பெரும் போராட்டமும் கொந்தளிப்பும் நிலவுகிற காலங்களில், தேர்தல் வெற்றி பெற்றாலும் வெற்றி பெற்ற கட்சியால் ஆட்சி நடத்த முடியாது என்கிற நிலையில், பெருவாரியான மக்கள் செல்வாக்கு நிலவுகிற சூழலில் தான் இந்தப் புறக்கணிப்பு என்பது அர்த்த முள்ளதாகவும் ஒரு விளைவை ஏற் படுத்துவதாகவும் இருக்கும்.

ஆனால், இன்று, இப்போதுள்ள மக்களின் விழிப்புணர்வு, அரசியல் நிலை சார்ந்த சூழலில் இந்தப் புறக் கணிப்பு குறிப்பாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. இது, இந்தப் புறக்கணிப்புக்கு அப்பால் மக்கள் எப்போதும் போல் வாக்களிக்கவும், வெற்றி தோல்விகள் வழக்கம் போல் நிகழவும்தான் வாய்ப்பளிக்குமேயல் லாது, மாறுபட்ட எந்த விளைவு எதையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில் சாதாரண காலங்களிலானால் ஒரு எதிர்ப்பு நட வடிக்கை, மறுப்பின் வெளிப்பாடு என்கிற அள வில் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாசகார சக்திகள் ஒரு இனத்தின் அழிவே இலக்காகச் செயல்படும் போது, அப்படிச் செயல்பட்ட முகத் தைத் தூக்கிக்கொண்டு வந்து வாக்குக் கேட்கும்போது, அதை வீழ்த்தவும், முறியடிக்கவும் என்னென்ன வாய்ப்பு கள் உண்டோ அனைத்தையும் பயன் படுத்திக் கொண்டு அதை வீழ்த்தும் இலக்கு ஒன்றே சரியான நிலைப் பாடாய் இருக்க முடியும்.

தவிர, புறக்கணிப்பு என்றால் யார் புறக்கணிப்பாளர்கள்? தி.மு.க. காங் கிரஸ் அணியாளர்கள் யாரும் புறக் கணிக்க மாட்டார்கள். மூன்றாவது அணி போல், மாற்று அணியில் உள்ள உணர்வாளர்கள்தான் புறக்கணிப்பார் கள். இதுவும் மூன்றவாது அணி மாதி ரியே தி.மு.க. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை குறைக்கவே, அதைப் பலவீனப்படுத்தவே பயன்படும்.

ஆகவே, கொள்கைப் புனிதம், கோட்பாட்டுத் தூய்மைக் காக்க பரி சுத்த ஆவிகளாய்த் திரிய முயல்வது ஆதிக்க சைத்தான்களுக்கே துணை போவதாய் முடியும் என்பதை உணர்ந்து புறக் கணிப்பு நோக்கத்தை கொண்ட வர்கள் அந்நிலையைக் கைவிட்டு ஆதிக்க அணியை வீழ்த்த மாற்று அணிக்கு அது குறைவான ஆபத்து கொண்ட அணி எனக் கருதியேனும் இதற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழீழத்துக்கு ஜெ. ஆதரவு

இக்கட்டுரை ஜெ. தனி ஈழம் என்கிற கருத்தை முன் வைப்பதற்கு முன் எழுதியது. தற்போது அவர் தனி ஈழம் என்கிற கருத்தை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் உறுதிபடத் தெரி வித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய வாதங்களுக்கான நியாயத் துக்கு மேலும் வளம் கூட்டுகிறது. ஆகவே அனைத்தையும் கருத் தில் கொண்டு காங். - தி.மு.க. கூட்டணியை வீழ்த்தும் முனைப்பில் நாம் இயங்க வேண்டும்.

இ.க.க.(மா)-வுக்கும் நமது வாக்கா?

எல்லாம் சரிதான். ஆனால் காங். - திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என் பதற்காக தனி ஈழத்துக்கு எந்த நாளிலும் ஆதரவு தராத, எப்போதும் அதை எதிர்க்கும் இ.க.க.(மா)வுக்கு நாம் எப்படி வாக்களிக்க முடியும் என்று பலருக்குத் தயக்கம் இருக்கலாம். என்றாலும் வேறு வழியில்லை. இதற்கு வாக்களிக்காமல் விட்டால் ஆதிக்க அணி துரோக அணி, வஞ்சக அணிதானே ஜெயிக் கும் என்பதால் அந்த அணியை வீழ்த்த இ.க.க.மா.வுக்கும் அது ஜெ. அணியில் உள்ளது என்பதால் அதற்கு வாக்களிக்க வேண்டியது தான். தி.மு.க. காங்கிரஸ் அணியை வீழ்த்தி பின் இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

மாறாத கூட்டணி புனிதமானதா?

சில தலைவர்கள், தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுகிறார்கள் என்று சில பேர் அதையே ஒரு கேலியாகவோ, மலிவாகவோ பேசி வருகிறார்கள். தேர்தல் அரசியல் என்று வந்து விட்ட பிறகு அடிக்கடி கூட்டணி மாற்றம் என்று அது குறித்து பேசுவது அர்த்தமற்றது.

காரணம், ஒரே கூட்டணியில் நிரந்தரமாய் இருப்பது புனிதமானது, பத்தினித் தனமாது என்றோ, அடிக்கடி அணி மாறுவது, புனிதம் கெட்டது, சோரம் போவது என்றோ அர்த்தமாகி விடாது.

எந்தக் கூட்டணியிலும் எவரும் நிலையாக இருந்தாலும் சரி, கூட்டணி மாறினாலும் சரி, அவர் எந்த சந்தர்ப்பத்தில், ஏன் இருக்கிறார், மாறுகிறார், எந்த நோக்கத்திற்காக மாறுகிறார். தற்போதைய பொது இலக்கு என்ன என்பதை வைத்தே அதை நாம் மதிப்பிட முடியும்.

இந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் கூட்டணி பற்றி யோசிப்போம். தற்போது தமிழக மக்களின் உயிரும் உணர்வுமாய் இருக்கிற பிரச்சினை, பொதுவில் எல்லோருடைய கவனத்திலும், கவலையிலும் உறைந்திருக்கிற பிரச்சினை ஈழப்பிரச்சினை.

இதில் ஜெ. கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிற கட்சிகளில் இ.க.க.மா. தவிர அனைத்தும் ஈழ ஆதரவுகட்சிகள். ஆகவே இக்கூட்டணியில் ஏதும் முரண் இல்லை. ஆனால் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஈழ ஆதரவு கூட்டணி அல்ல, எதிர் கூட்டணி. வி.சி.க. ஆதரவு அணி. ஆகவே முரண்பட்ட கூட்டணி. எனவே, இந்தக் கூட்டணி வேறுபாட்டையும் நாம் வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும்.

துரோகம்

தமிழக அரசியலின் மிகப் பெரும் சோகம் கருணாநிதியின் துரோக, வஞ்சக குடும்ப அரசியலை வீழ்த்துவதற்கு வலுவான ஒரு மாற்று அணி இல்லை என்பதுதான். இடையில் ஜெ. முதல்வராக வந்தார். வந்து என்ன பயன்? கருணாநிதி ஆட்சியில் கோபாலபுரம் குடும்ப ஆதிக்கம் என்றால், ஜெ. ஆட்சியில் மன்னார்குடி குடும்ப ஆதிக்கம். ஜெ. மட்டும் இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்து நல்லாட்சி தந்திருந்தால் கருணாநிதி குடும்ப ஆட்சியை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் தடுக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு கிட்டாமல் போயிற்று. அடுத்து இருக்கிற பிற கட்சிகள், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க., இ.க.க., ஆகிய ஒன்றிணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்கும் என்று பார்த்தால் அதுவும் கை கூடி வரவில்லை. அதனால் தனக்கு நிகராக யாரும் இல்லை என்கிற எக்காளத்தில் தில்லியின் கூட்டோடு தில்லியின் பின்புலத்தோடு, காங்கிரஸ் - தி.மு.க. பரஸ்பர உதவியில் நடந்து கொண்டிருக்கிறது கருணாநிதி ஆட்சி. எனவே, இந்த சூழலையும் நாம் கருத்தில் கொண்டு இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. காங்கிரசின் துரோகத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.

பா.ம.க., வி.சி.க. நிரந்தர இணக்கம் தேவை

பா.ம.க., சிறுத்தைகள் அமைப்பினர் தொடக்க காலங்களில் அடிக்கடி ஒருவருக் கொருவர் மோதிக் கொள்ள சமூகத்தில் எப்போதும் ஒரு பதட்ட நிலை இருந்து வந்தது. பின் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், ஈழ ஆதரவுப் போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு ஒன்றுபட்டுப் போராட தொண்டர்களிடமும் நல்ல இணக்கம் ஏற்பட்டு இரு பிரிவினருக்குமிடையே மோதல் எதுவும் நேராமல், சமூகத்தில் அமைதி நிலவியது. இந்த இணக்கமும், அமைதியும் தொடரவேண்டும் என்பதே அனைவரதும் அவா. இதற்கு மருத்துவர் இராமதாசு எந்த அளவு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கோரப்படுகிறதோ, அதே அளவு ஒத்துழைப்பைத் தர வேண்டியது திருமாவின் பொறுப்பும். எனவே தாற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த தேர்தல் காலப் பிரிவை பெரிது படுத்தாமல் நாகரிகத்தோடும் கண்ணியத்தோடும் சுமுகமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி தேர்தலுக்குப் பின் எப்போதும் போல் இவ்விரு அமைப்பினரும் இணக்கமாகவும் சுமுகமாகவும் இயங்கக் கேட்டுக் கொள்கிறோம்.

இராசேந்திரசோழன்

Comments