மாறுமா தமிழரின் தலைவிதி?--விகடன்

விதியென்று சொல்வதா, சர்வதேச சமூகத்தின் சதி என்று சொல்வதா..? அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஐ.நா. மனித உரிமை கவுன் சிலின் சிறப்புக் கூட்டம் தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்காமல் தோல்வியில் முடிந்து விட்டது!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றி விவாதிப் பதற்குத்தான் அந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட பதினேழு நாடுகள்

இதற்காகக் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அவர்களின் முயற்சி இப்போது இலங்கையின் சூழ்ச்சியாலும், அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்மை யாலும் 'வெற்றிகரமாக'த் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக ஐரோப்பிய நாடுகள் முயற்சி எடுத்தபோதே, அதைத் தோற்கடிக்க இந்தியா களமிறங்கிவிட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த தூதர்களின் கூட்டத்தை மே 15-ம் தேதி கூட்டினார்கள். அதில் இந்தியா, பாகிஸ்தான்,

எகிப்து, கியூபா ஆகிய நாடுகளின் தூதர்களைக்கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் வரைக்கும் இந்தக் குழு இலங்கைக்கு ஆதர வான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவுசெய்யப்பட்டது. 'ஐரோப்பிய யூனியன் நாடுகள் சில, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக செய்துவந்த முயற்சிகளை முறியடித்து, அதற்கு மாற்றாக சில யோசனைகளை முன்வைப்பது' என்பதே இக்குழுவின் நோக்கமென்றும் அறிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டப் படுகொலைகள் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும். ஆனால், இந்த முயற்சிகளையும் மீறி, சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுவிடும் என்று தெரிந்த தால்தான், இலங்கை அரசு வன்னியில் அந்த இனப் படுகொலையை அவசர அவசரமாக நடத்தியிருக்கிறது போலும். ஐரோப்பிய நாடுகள் தலையிட்டு தமிழர்களைக் காப்பாற்றிவிடுமோ என்ற அச்சம், இலங்கை அரசுக்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் வந்திருக்கக்கூடும். முள்ளிவாய்க்கால் பகுதியில் உதவி கேட்டுக் கதறிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு ஒரு உதவியும் கிடைத்துவிடாமல் இலங்கையும் அதன் கூட்டாளி நாடுகளும் பார்த்துக்கொண்டன. அதேபோலத்தான் இப்போதும் உயிர் பிழைத்துள்ள தமிழர்களுக்கு உதவி கிடைக்காமல் செய்திருக்கிறார்கள்.

http://cache.daylife.com/imageserve/03JAdYH4IZda5/610x.jpg

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவராக இருக்கும் மார்டின் உகோமெய்பி அந்த சிறப்புக் கூட்டத்தின் தொடக்க உரையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருந்தார். அதைவிடவும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஹை கமிஷனராக இருக்கும் திருமதி நவநீதம் பிள்ளையின் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சற்றே நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

'சிவிலியன்கள் மீது கனரக ஆயூதங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசு தாக்குதல் நடத்தி யதாகவும், மருத்துவமனைகளைப் பலமுறை குண்டு வீசித் தாக்கியதாகவும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தளபதிகளை வஞ்சகமாகக் கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை போரின் நியதிகளை மீறிய செயல்களாகும்' என்று விமர்சித்த நவநீதம் பிள்ளை, 'தமிழர்கள் சிலருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்போவதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. அதனை வைத்து தன்னைக் கருணையுள்ள அரசாகக் காட்ட முயல்கிறது. போர்க்காலக் குற்றங்களைச் செய்து இனப்படுகொலையில் ஈடுபட்ட நபர்களைத் தப்பிக்கச் செய்துவிடலாம் எனவும் இலங்கை அரசு திட்டமிடுகிறது' என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நாடுகளின் சார்பில் சுவிட்சர் லாந்தால் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தைப் பார்த்தபோதே, அந்தக் கூட்டத்தின் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. இலங்கை அரசின் போர்க்காலக் குற்றங்களைப் புலனாய்வு செய்ய சுயேச் சையான சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசாங்கத்திடமே அந்தப் பொறுப்பைக் கையளிப்பதாக அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது-

'மனித உரிமைகளும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் போர்க்காலத்தில் மீறப்பட்டிருக்கின்றன. அது பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சிவிலியன்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு கவலையளிப்பதாக உள்ளது' என்று அந்த வரைவுத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 'பிணைக் கைதிகளாக மக்களைப் பிடித்து வைப்பது, சித்ரவதை செய்வது, சட்ட விரோதமான கொலைகள் ஆகியவற்றைப் பற்றி இலங்கை அரசாங்கமே விசாரித்து நீதிவழங்கவேண்டும்' என்றொரு தீர்மானம் அதில் இடம் பெற்றிருந்தது. அந்த வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த பதினாறு விஷயங்கள் மட்டும்தான் இலங்கை அரசை சற்று விமர்சிப்பதாக இருந்தது. ஆனால், இதுவும்கூட வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்டதுதான் வேதனை.

விவாதம் முடிந்தபிறகு, சுவிட்சர்லாந்தால் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக பதினேழு வாக்குகளும், எதிராக இருபத்திரெண்டு வாக்குகளும் பதிவாயின. எட்டு நாடுகள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தன. இந்தத் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டதைவிடவும் வேதனையான விஷயம், இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்ற தென்பதுதான். இலங்கை அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக இருபத்தொன்பது நாடுகளும் எதிராக பன்னி ரெண்டு நாடுகளும் வாக்களித்துள்ளன. ஆறு நாடுகள் நடுநிலை வகித்தன.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசு அடைந்துள்ள வெற்றி, முழுக்க முழுக்க இந்தியாவால் கிடைத்த வெற்றியாகும். தமிழர் களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழித்தொழிப்புப் போருக்கு உதவியது மட்டுமல்லாது, அதன்பிறகும் சர்வதேச சமூகத்தின் விமர்சனங்களிலிருந்து இலங் கையை காப்பாற்றுவதற்கும் இந்தியாதான் உதவி செய்துகொண்டிருக்கிறது. இது இங்குள்ள தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயம்.

இலங்கை அரசைப் பாதுகாப்பதற்காக இந்தியா தன்னுடைய தலைவலி நாடாகக் கருதிவரும் பாகிஸ் தானோடு தன்னையுமறியாமல் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொருளாதாரத் துறையிலும் சர்வதேச அரங்கிலும் இந்தியாவுக்கு போட்டியாகக் கருதப்படும் சீனாவோடும் கைகோத்திருக்கிறது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகின்றன. இலங்கையின் இனவாத அரசு இதுவரை நடத்திவந்த போரில் இந்தியாவும் கூட்டாளியாக இருந்தது உண்மைதானா? இலங்கையின் இன அழித்தொழிப்புக் கொள்கைக்கு இந்தியா இந்த அளவுக்கு ஆதரவளிப்பது ஏன்? இவையெல்லாம் ராஜதந்திர நடவடிக்கைகளா, அல்லது வெளியுறவுத் துறையில் உள்ள ஒரு சிலரின் தமிழர் விரோத அணுகுமுறையால் விளைந்த கொடுமைகளா? இதற்கெல்லாம் இந்திய அரசுதான் விளக்கமளிக்க வேண்டும்.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள போரும், தற்போது தொடர்ந்துகொண்டு இருக்கும் அவலங்களும் நமக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகின்றன. ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் போன்றவற்றின்மீது நம்பிக்கை வைப்பதில் பயனில்லை என்பதே அது. ஐ.நா. சபை என்பது இளிச்சவாய் நாடுகளை மிரட்டுவதற்காக வல்லரசுகளால் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம், அவ்வளவுதான். ஈரானை மிரட்ட வேண்டுமா? வடகொரியாவை முடக்க வேண்டுமா? அதற்குத்தான் ஐ.நா. சபை பயன்படும். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் செல்லவேண்டுமென்றால், அதற்கு ஒப்புதல் வழங்க ஐ.நா. தேவைப்படும். மற்றபடி, இத்தகைய சர்வதேச அமைப்புகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இதற்கு முன்பும் பலமுறை இப்படியான சிறப்புக் கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் பத்தாவது சிறப்புக் கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய ஆண்டு நான்கு சிறப்புக் கூட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச் னையை இப்படிப் பலமுறை விவாதித்திருக்கிறார்கள். ஒன்பதாவது சிறப்புக் கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னை விவாதிக்கப்பட்டபோது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, பாலஸ்தீனத்தில் தாக்குதல் நிறுத்தப்பட்டதே தவிர, பிரச்னை தீரவில்லை.

இன்றைய சர்வதேசச் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. சபையோ அல்லது வேறெந்த சர்வதேச அமைப்புகளோ எந்த நீதியையும் வழங்கிவிடமுடியாது என்பதே உண்மை. இத்தகைய அமைப்புகள் யாவும் அரசாங்கங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கி வைத்திருக்கும் ஏற்பாடுகள்தான்.

எனவே, ஈழத் தமிழர்கள் தற்போதைய இக்கட்டான சூழலிலிருந்து மீண்டு வருவது அவர்களுடைய சுயேச்சையான முயற்சிகளின் மூலம்தான் சாத்தியப்படும் போலிருக்கிறது. உலக அளவில் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் இயக்கங்களோடு ஒன்றிணைந்து தம்முடைய நியாயங் களுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் பலவற்றில் ஈழத்தமிழர்கள் எழுச்சியோடு போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அந்தப் போராட்டங்களுக்கு அந்தந்த நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளோ மக்களோ பெரிய அளவில் ஆதரவை வழங்கிவிடவில்லை. ஈழத் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் அரசாங்கங்களை அணுகி சிறிய அளவில் லாபி செய்ததும் உண்மை. என்றாலும், அதனால் போரை நிறுத்தவோ தமிழர்கள் மீதான இனப் படுகொலையைத் தடுக்கவோ முடியவில்லை.

இந்த யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, இனியாவது மக்கள் இயக்கங்களோடு ஒருங்கிணை வதற்கான வழிகளை அவர்கள் தேடவேண்டும். ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடிக்கொண்டு இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாதவரை, இவர்களின் குரல்களுக்கு இந்திய அரசு மதிப்பளிக்காது. எனவே, ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்தாவது இங்குள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.

தற்போது இலங்கையில் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் யாவரும் அவர்களுடைய சொந்த வீடுகளுக்குத் திரும்புகிற தைரியம் வரவேண்டும். அதற்கு இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து இலங்கை அரசு கொடுக்கும் வெற்று வாக்குறுதிகளை இந்தியாவும் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருப்பது தமிழர்களை ஏமாற்றுவதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், தமிழர்களுக்கு அங்கே சமமான உரிமைகள் கிடைக்க, ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

தற்போது வெற்றி மிதப்பில் இருக்கும் ராஜபக்ஷே இதைத் தானாக செய்துவிடமாட்டார். இந்தியாதான் அவரை செயல்படவைக்க வேண்டும். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுபோல் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை ஒருங் கிணைத்து தமிழர் தாயகமாக அறிவித்து அதை சுய அதி காரம் கொண்ட அமைப்பாக உருவாக்கினால் மட்டுமே, தமிழர்களுக்கு ஓரளவாவது நியாயம் கிடைக்கும்.

புதிய ஆட்சிப் பொறுப்பேற்று நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து போகிற உறுப்பினர்கள் யாவரும் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரே குரலில் பேசினால் நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். தேர்தல் சமயத்தில் தி.மு.க. கூட்டணியும் அ.தி.மு.க. கூட்டணியும் இந்த விவகாரத்தில் ஒரே குரலில்தான் பேசின. அது தேர்தலுக்காக மட்டுமே பேசப்பட்டதல்ல என்று நிருபிக்க, அக்கட்சிகளுக்கு இப்போது இது ஒரு வாய்ப்பு!

Comments