கடற்புலிகளின் பலமும் படைத்தரப்பு சந்தித்துள்ள புதிய நெருக்கடிகளும்

வன்னி களநிலமை முற்றிலிலும் மாறுபட்ட ஒரு பூகோள அமைப்பை நோக்கி நகர்ந்துள்ளது. அதாவது தரைப்படையினர் பல முனை நகர்வுகளை அங்கு மேற்கொள்ள முடியாது.

தெற்குப்புறம் வட்டுவாய்காலுக்கும் - வெள்ளைமுள்ளிவயலுக்கும் இடையிலான ஒன்றரை கி.மீ நீளமான முன்னனி பாதுகாப்பு நிலையும், வடக்குப்புறம் வலைஞர்மடத்திற்கும் - இரட்டைவாய்காலுக்கும் இடையில் உள்ள இரண்டு கி.மீ நீளமான பிரதேசமும் தான் படைத்தரப்பு தரையினால் நகர்வை மேற்கொள்ள சாதகமான பகுதிகள்.

மேற்குப்புறமாக பார்த்தால் நந்திக்கடல் நீரேரி உள்ளது. ஏறத்தாள 5 கி.மீ அகலமுள்ள நக்திக்கடல் நீரேரியை படகுகளின் துணையின்றி கடப்பது சுலபமான காரியம் இல்லை. வாகரை படை நடவடிக்கையின் போது இராணுவத்தின் சிறப்பு படையணிகள் கயிற்றை பயன்படுத்தி உப்பாறு நீரேரியை கடந்தது போன்றதொரு நடவடிக்கையை இங்கு மேற்கொள்வது கடினமானது.

மேலும் மரங்களோ பற்றைகளோ அற்ற வெறும் மணலான தரையமைப்பு என்பதனால் இராணுவம் பகலில் நகரமுடியாத நிலை அங்குள்ளது. விடுதலைப்புலிகளின் கனரக ஆயுதங்களின் தாக்குதலும், குறிபார்த்து சுடும் வீரர்களும், பொறிவெடிகளும் படையினருக்கு பாரிய சேதங்களை இந்த பகுதிகளில் ஏற்படுத்தி வருவதாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களில் இந்த பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் பாரிய இழப்புக்களை சந்தித்ததை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை (30) காலை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா வன்னி கட்டளை பீடத்திற்கு விஜயம் செய்ததுடன் தாக்குதல் தொடர்பான ஒழுங்கமைப்புக்களையும் மறுசீரமைத்திருந்தார்.

அவரின் உத்திகளின் அடிப்படையில் வியாழக்கிழமை (30) மாலை முள்ளிவாய்கால் பகுதியில் ஒரு தரையிறக்க நடவடிக்கையை மேற்கொள்ள படைததரப்பு முயன்றிருந்தது.எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் காரணமாக ஒரு டோரா படகும், ஒரு நீரூந்து விசைப்படகும், சில அரோ படகுகளும் மூழ்கியதை தொடர்ந்து படைத்தரப்பு தரையிறக்கத்தை கைவிட்டு பின்வாங்கியிருந்தன.

இதன் பின்னர் வியாழக்கிழமை (30) மாலை விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் வெளியிட்டிருந்த தகவலில், கடந்த புதன்கிழமை (29) நடைபெற்ற சமரில் 350 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 700 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.மேலும் கடற்படையினரின் இரு படகுகள் அழிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மோதலை தொடர்ந்து கடற்படையினரின் முன்னனி கடல் பாதுகாப்பு வலையத்தின் மீது விடுதலைப்புலிகள் கடந்த 1 ஆம் நாள் அன்று ஊடுருவல் தாக்குதல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

கடற்கரையில் இருந்து 5 கடல்மைல் தொலைவில் அரோ ரக படகுகள் சகிதம் சிறப்பு கடற் தாக்குதல் பிரிவு (Special Boat Squadron), விரைவு நடவடிக்கை பிரிவு (Rapid Action Squadron)போன்ற கடற்படையணிகள் நிலைகொண்டடிருந்த வலையத்தின் மீது கடற்புலிகளின் விரைவு தாக்குதல் படகுகள் மேற்கொண்ட தாக்குதலில் லெப். கொமோடோர் தரத்தை சேர்ந்த சிறப்பு கடற் தாக்குதல் பிரிவின் பிரதி கட்டளை அதிகாரி உட்பட 12 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும், 3 அரோ ரக படகுகள் அழிக்கப்பட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.

கொல்லப்பட்ட கட்டளை அதிகாரி பின்னர் கொமோடராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் இழப்புக்கள் மிக அதிகம் என தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், கடற்படையினரின் முன்னனி வலையம் பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகவும் வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே கடந்த 29 ஆம் நாளில் இருந்து நான்கு நாட்கள் நடைபெற்ற சமர்களில் 600 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்திருந்தன.

பின்னர் கடந்த சனிக்கிழமை (2) ஆம் நாள் மீண்டும் படைத்தரப்பு பாதுகாப்பு வலையத்தின் வடமுனையான இரட்டைவாய்கால் பகுதியினூடாக மேற்கொண்ட நகர்வின் போது ஏற்பட்ட மோதல்களில் பெருமளவான படையினர் கொல்லப்பட்டதாகவும், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் வன்னி தகவல்கள் தெரிவித்திருந்தன.இதன் போது கொல்லப்பட்ட படையினரின் 60 இற்கு மேற்பட்ட சடலங்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

கடந்த 2 ஆம் நாள் கொழும்பில் 115 தடவைகளுக்கு மேலாக நோயாளர்காவு வண்டிகள் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.இந்த சமரில் 160 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு வலையத்திற்குள் ஊடுருவிய சிறப்பு படையணியை சேர்ந்த 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வன்னி களமுனையில் பணியாற்றிவரும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் கடுமையான இழப்புக்களை படைத்தரப்பு சந்தித்து வருவதை தொடர்ந்து படையினரின் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.59 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த நீக்கப்பட்டு அதன் கட்டளை தளபதியாக பிரிகேடியர் பிரசன்னா டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 55 ஆவது படையணின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தவர். 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக முன்னர் சிறப்பு படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் சார்லி கலகே நியமிக்கப்பட்டுள்ளார்.இராணுவம் தனது இறுதித்தாக்குதலை ஆரம்பித்து விட்டது ஆனால் களமுனை அவர்களுக்கு பாதகமான நிலையையே தற்போது கொண்டுள்ளது.

பரந்த மணல் வெளிகளை கொண்ட ஏறத்தாள இரண்டு கி. மீ நீளமான நிலப்பகுதிகளே அவர்களுகான நகர்வுக்களமாக தற்போது எஞ்சி உள்ளது. இந்த தரையமைப்பில் கவசப்படையும் அதிக பலனைக்கொடுக்கப்போவதில்லை.மேலும் இந்த பகுதிகளிற்கு குறுக்காக 10 அடி உயரம் கொண்ட மண் அணைகளை ஒன்றின் பின் ஒன்றாக விடுதலைப்புலிகள் அமைத்துள்ளதாகவும், மணல் அணைகளுக்கு மறுபக்கம் 6 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துவருகின்றது.

களமுனையின் தரையமைப்பு படையினருக்கு பாதகமான நிலையை அடைந்துள்ள நிலையில் படைத்தரப்பு கடல் வழியிலான தரையிறக்கத்தில் அதிக நாட்டம் காட்டி வருகின்றது. கடந்த திங்கட்கிழமை (4) அதிகாலை மீண்டும் ஒரு தரையறக்கத்திற்கு படைத்தரப்பு முயன்றிருந்தது. கடற்படையினரின் உட்கரையோர ரோந்து படகுகள் மூலம் சிறப்பு கொமோண்டோக்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தரையிறக்க படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களின் போது கடற்படையினரின் இரு நீரூந்து விசைப்படகுகளும், ஒரு அரோ ரக அதிவேக தாக்குதல் படகும் தாக்கி அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகளின் வன்னி சமர் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.கடற்புலிகள் பலவீனமாகி விட்டனர் என படையினர் எண்ணியிருந்த வேளையில் அவர்களின் தாக்குதல்களும், தாக்குதல் உத்திகளும் பல மடங்கு வலுப்பெற்றுள்ளது படைத்தரப்புக்கு ஆச்சரியமானதே.

கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய படகு 496 குதிரை வலுக்கொண்ட இயந்திரத்தை உடையது. இது சிறீலங்காவின் அதிவேக டோரா படகினை விட வேகம் கூடியது.அதாவது டோரா படகின் வேகம் 37 தொடக்கம் 45 கடல்மைல்களாக உள்ள போது விடுதலைப்புலிகளின் படகின் வேகம் 50 கடல்மைல்களாகும். இந்த படகினால் டோரா படகினை துரத்தி சென்று தாக்கியழிக்க முடியும் என படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே கடற்புலிகள் பலமாக இருப்பது தற்போதைய களமுனையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகவே படைத்தரப்பு கருதுகின்றது.இதனிடையே களமுனையின் உக்கிரத்தை போலவே இராஜதந்திர நகர்வுகளின் உக்கிரமும் அதிகமாக உள்ள போதும் அனைத்துலக சமூகத்தின் பேச்சுக்களை போல நடவடிக்கைகள் அமையவில்லை.

ஐ.நா என்றாலும் சரி மேற்குலகம் என்றாலும் சரி மேலும் பேசுவதில் பயனில்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டிய காலம் இது. அவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையில் தான் வன்னியில் உள்ள பல பத்தாயிரம் மக்களின் உயிர்கள் தங்கியுள்ளன.

வன்னியில் என்ன நடைபெறுகின்றது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரியும். அவர்களிடம் இறந்த மக்கள் தொடர்பான தகவல்கள் உள்ளன, குண்டு வீச்சுக்களினாலும், கனரக ஆயுதங்களின் தாக்குதல்களினாலும் சேதமடைந்த பகுதிகளின் புகைப்படங்கள் உள்ளன. அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளும் தெரியும்.

உதாரணமாக தற்போது அங்கு 50,000 மக்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு அனைத்துலக செஞ்சிலுவை கப்பல் மூலம் 30 மெற்றிக்தொன் உணவு எடுத்து செல்லப்படுவதாகவும் அது அவர்களுக்கு போதுமானது அல்ல எனவும் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன்ஸ் கோல்ம்ஸ் கடந்த மாதம் 30 ஆம் நாள் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

30 மெற்றிக் உணவு 50,000 மக்களுக்கு ஒருநாளைக்கு தான் போதும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் அங்கு 45 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 165 ஆயிரம் மக்கள் உள்ளனர் அவர்களுக்கு இந்த உணவு எவ்வாறு போதும்?எனவே சிறீலங்கா அரசானது உணவை ஒரு போரியல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கே வன்னியில் உள்ள மக்கள் தொடர்பான தகவல்களை குறைத்து கூறி வருகின்றது.

அதாவது அங்கு வாழும் மக்களை பட்டினி போட்டு சரணடைய வைக்க அவர்கள் முயல்கின்றனர் என்பதை ஐ.நா புரிந்து கொள்ள வேண்டும். முன்னரும் 70,000 பேர் இருப்பதாக அரசு கூறியிருந்தது. ஆனால் ஏப்பிரல் 20 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் எவ்வாறு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார்கள் என அனைத்துலகம் அரசிடம் கேட்கலாம் அல்லது அரசின் தகவல்களின் நம்பகமற்றதன்மையை குறிப்பிட்டு காட்டலாம்.

மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை சிறீலங்கா அரசு தடுககுமாக இருந்தால் பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல்ட் (Prof. Francis Boyle, International Law at the University of Illinois College of Law) கூறியது போல வான்வழி மூலம் உதவிப்பொருட்களை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை அனைத்துலகம் எடுக்க வேண்டும்.

இது உலகில் எங்கும் நிகழாதது அல்ல. 1987 களில் சிறீலங்காவிலும் நிகழந்திருந்தது.சிறீலங்கா மீதான அழுத்தமான நகர்வுகளுக்கு ஐ.நாவும், அனைத்துலக சமூகமும் முன்வர வேண்டும். தமது கருத்துக்களை சிறீலங்கா மிகவும் தீவிரமாக எதிர்ப்பதாக அண்மையில் கோலம்ஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் சிம்பாபே மீதான பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு பல நாடுகள் எதிர்த்த போதும் பிரித்தானியா அதனை வாக்கெடுப்பின் மூலம் மேற்கொண்டிருந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.மேலும் மேற்குலகம் என்றாலும், ஐ.நா என்றாலும் அவர்கள் மேற்கொள்ளும் சிறிய அசைவுகளையும் வலுவாக்குவதற்கு எமக்கு அனைத்துலகத்திலும், பிராந்தியத்திலும் வலுவான பலம் வேண்டும்.

அனைத்துலகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தற்போது ஒரு காத்திரமான பங்களிப்பை வளங்கிவருகின்றன என்பது உண்மையே ஆனால் எமது உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரையிலும் அதன் தீவிரம் குறைதல் கூடாது. ஏனெனில் தற்போது களமுனை மோதல்களை விட இராஜதந்திர நகர்வுகளே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதனை எமக்கு சாதகமாக்கும் வல்லமை உலகில் பரந்து வாழும் தமிழ் மக்களிடம் தான் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் எமக்கு தற்போது பலம் சேர்க்கும் வல்லமை உண்டு என்றால் அது தமிழகம் தான். அங்கு வாழும் 80 மில்லியன் மக்களை உலகம் புறம்தள்ள முடியாது.

மாநில அரசு உத்தியோகபூர்வமாக கூறும் தகவல்களையும் ஐ.நா புறக்கணிக்க முடியாது. எனவே தமிழக மக்களினதும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் வலுவான பங்களிப்பில் தான் தமிழ் மக்களின் விடுதலைப்போரின் அசைவுத்திறனின் பெரும் பகுதி தங்கியுள்ளது என்றால் அது தவறாகாது.

வேல்ஸ்இல் இருந்து

அருஷ்

Comments