"ஒரு பெண்ணின் நன்மைக்காக ஆயிரக்கணக்கில் தமிழர் பலியாகின்றனர்'

ஒரு பெண்ணின் நன்மைக்காக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் காங்கிரஸ் கட்சியானது தமிழர்களின் எதிரி என்றும் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான பிரசாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அவருக்கு திரைப்பட இயக்குநர் சீமான், நடிகர் வடிவேல், மணிவண்ணன் உட்பட பலர் ஆதர வளித்து வருகின்றனர்.

இந்திய மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர் உட்பட தமிழ்நாட்டின் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிரான கடும் பிரசாரத்தை பாரதிராஜா தீவிரப்படுத்தியுள்ளார். சோனியா காந்தியின் சென்னை விஜயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பாரதிராஜா திட்டமிட்டிருந்த போதும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையை காரணம் காட்டி அந்த விஜயம் ரத்துச் செய்யப்பட்டது.

"ரெடிவ் கொம்' இணையத்தளத்தின் ஏ. கணேஷ் நாயுடுவுக்கு பாரதிராஜா வழங்கிய பேட்டி இங்கு தரப்படுகிறது.

கேள்வி: சோனியா காந்திக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை ஏன் ஏற்பாடு செய்தீர்கள்?

பதில்: கடந்த 6 மாதங்களாக இலங்கைத் தமிழரின் அவலநிலைமை தொடர்பாக எடுத்துக் கூறி வருகிறோம். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டினியாலும் சன்னங்களாலும் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து இறந்து கொண்டிக்கின்றனர்.

கேள்வி: வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் இரு தடவைகள் இலங்கைக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இலங்கை ஜனாதிபதியுடன் கதைத்து தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனரே?

பதில்: அது பிரயோசனமற்றதாகும். ஒவ்வொரு தடவையும் யாரோ அங்கு சென்றும் தொலைபேசியிலும் பேசுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா எம்முடன் உள்ளது என்று இலங்கை ஜனாதிபதி பத்திரிகை அறிக்கை விடுத்துள்ளார். ஆனால், அங்கு தொடர்ந்து ஆயுதம் தரிக்காத பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.

கேள்வி: இலங்கை யுத்தத்துக்கு காங்கிரஸை குற்றம் சாட்டுகிறீர்களா?

பதில்: அவர்கள் (காங்கிரஸ்) ஆயுதங்களை விநியோகிக்கின்றனர். இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்குகின்றனர். யுத்தத்துக்கு இலங்கைக்கு நிதி கொடுக்கின்றனர்.

கேள்வி: ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

பதில்: சோனியாகாந்தியின் சார்பில் பழிவாங்குகின்றனர். ஒரு பெண்ணின் நன்மைக்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

கேள்வி: மக்களை வாக்களிக்க வேண்டாமென நீங்கள் கேட்டதாக தேர்தல் ஆணைக்குழுவிடம் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளதே?

பதில்: அவர்கள் சிறுபிள்ளைகள் போன்று செயற்படுகின்றனர். எம்முடன் ஜனநாயக ரீதியில் போராடட்டும். மக்களை வாக்களிக்குமாறு கோரும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்றால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கோரும் உரிமை எங்களுக்கு உண்டு. வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை ஒருபோதும் நாம் கேட்டிருக்கவில்லை

கேள்வி: இந்தத் தேர்தலில் யாரை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக மற்றொரு கட்சி அதிகளவு செய்யுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை. காங்கிரஸுக்கு எதிராகவே பிரசாரம் செய்கிறோம். காங்கிரஸைத் தவிர எந்தவொரு கட்சிக்கும் மக்கள் வாக்களிக்க முடியும்

கேள்வி: கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமானது ஜனநாயக வழியிலானது என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக இது ஜனநாயகமாகும். இது எதிர்ப்பிற்கான அடையாளம். எம்மை நிறுத்த முயற்சித்தால் வரவேற்கத்தக்கது.

கேள்வி: அடுத்ததாக என்ன செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: பிரசாரத்தின் இறுதித்தினமான மே 11 வரை காங்கிரஸ் போட்டியிடும் ஒவ்வொரு லோக் சபைத் தொகுதிக்கும் நாம் சென்று காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாமென கேட்போம். அக்கட்சி தமிழர்களின் எதிரி. அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிப்போம்.

Comments