பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனிநாட்டை ஏற்படுத்துவதற்காக இந்திரா காந்தி இந்தியப் படைகளை அனுப்ப முடிந்தபோது, இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தைப் பிரிக்க ஏன் படைகளை அனுப்ப முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், தனி ஈழத்தை அமைப்பதற்காக இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்ப முடியாது அதற்கு சட்டம் இடம் தராது என்று கூறியிருந்தது பற்றி ஜெயலலிதாவிடம் கேட்டபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசுக்கு தாக்குதலுக்கான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும், தற்காப்புக்கான ஆயுதங்களை மட்டுமே வழங்கியதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு விடையளித்த ஜெயலலிதா, பிரதமர் இதுபோன்ற பதில்களுக்கெல்லாம் முதலமைச்சர் கருணாநிதிதான் விளக்கம் தரவேண்டும். தற்காப்புக்கு ஆயுதங்களை அளித்தாலும் தாக்குதலுக்கு ஆயுதங்களை அளித்தாலும் அவை அழிவுக்குத்தான் பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
Comments