ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக அனைத்துலக நாடுகளில் மக்கள் பேரெழுச்சி

வன்னியில் தமிழ்மக்களை இன அழிப்பு செய்தும் கண்மூடித்தனமான தாக்குதலை சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு தொடக்கம் தொடர்ச்சியாக நடத்தி ஆயிரக்கணக்கில் உயிர்களைக் காவுகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்துலக சமூகத்தின் பராமுகத்தை கண்டித்தும் அனைத்துலக நாடுகளில் மாபெரும் மக்கள் எழுச்சி மற்று கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

அவுஸ்திரேலியாவில்...

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உள்ள Binnalong Park Tonngabbie இல் இருந்தும் மெல்பேர்ண் நகரில் இருந்தும் ஊர்தி ஊர்வலம் தலைநகர் கன்பராவை நோக்கி நாளை செவ்வாய்க்கிழமை உரிமையை நிலைநாட்டுவதற்காக பயணிக்கின்றது.

இந்த உரிமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் சிங்கள அரசின் கொலைக்களத்தில் சிக்கி இருக்கும் எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் உரிமையை நிலைநாட்டவும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன் அணிதிரண்டு வருமாறு தமிழ் இளையோர் அழைப்பு விடுத்திருக்கின்றது.

ஊர்திகளில் இணைக்கக்கூடிய அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகளை பெற்றுக்கொள்ளவும் உங்கள் ஊர்திகளின் பதிவு இலக்கங்களை கொடுக்கவும் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

சிட்னி தொடர்புகளுக்கு

அரவிந்த்: 0434 497 085

கார்தீபன்: 0433 844283

கீதா: 0433 452 981

மெல்பேர்ண் தொடர்புகளுக்கு

கௌரிகரன்: 0402 078 430

பிரான்சில்....

மக்கள் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதி மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் தாமாகவே முன்வந்து பாரிஸ் நகர வீதிகளை முற்றுகையிட்டுள்ளனர்.

வன்னியில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் காத்திரமான முடிவை எடுக்கும்வரை தமது வீதி மறியல் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் உடனடியாக கலந்துகொள்ளும் வகையில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் றீப்பப்ளிக் சதுக்கத்திற்கு திரண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

அதேநேரம் பிரான்சில் தொடர்ந்து 33 ஆவது நாட்களாக உண்ணாநிலையில் இருக்கும் செல்வகுமார், நவநீதன் ஆகிய இரண்டு இளைஞர்களும் நீரை மட்டும் அருந்தியவாறு மிகவும் உறுதியோடு தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.

இதேவேளையில் நாளை செவ்வாய்க்கிழமை Place de l'Opéra எனும் இடத்தில் பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறவுள்ள 'அடங்காப்பற்று' பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்திருக்கின்றது.

அதேவேளையில் தமிழர்கள் நாளை நடத்தும் மாபெரும் பொது வேலை நிறுத்தத்திலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கனடாவில்...

தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதைக் கண்டித்தும் இத்தகைய கொடூரப் படுகொலையை உடன் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க, கனடிய அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் நேற்று காலை 10:00 மணி தொடக்கம் சிறப்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்ராறியோ மாநில நாடாளுமன்றத்தின் முன்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

அனைவரையும் இந்த அவசரகால சிறப்பு கவனயீர்ப்பில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இதேவேளையில் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7:00 மணி தொடக்கம் பெருமளவிலான தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பிரித்தானியாவில்...

பிரித்தானியாவிலும் நேற்று காலை தொடக்கம் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள சதுக்கத்தில் பிரித்தானிய வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் நேற்று காலை தொடக்கம் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வீதிகளை முடக்கும் நோக்கில் பிரித்தானிய போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

நெதர்லாந்தில்...

நெதர்லாந்து நாட்டின் டென்காக்கில் உள்ள நாடாளுமன்றம் முன்பாக தமிழர்கள் அனைவரையும் ஒன்றுதிரளுமாறு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு அவசர அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் முன்பாக நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அனைவரையும் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

டென்மார்க்கில்...

டென்மார்க்கின் தலைநகர் கொப்பன்காபனில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.

இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Comments