கடற்படையின் இரு நீரூந்து விசைப்படகுகள் கடற்புலிகளால் தாக்கியழிப்பு: முல்லை கடலில் அதிகாலை கடும் சமர்

முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் றொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகள் இன்று அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அரோப் படகுகளில் பெருமளவு இராணுவத்தினர் கடற்பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டு நீரூந்து விசைப்படகுகளும் கரையை நோக்கி தொடர்ச்சியாகவும் செறிவாகவும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன.

இந்நிலையில் கடற்புலிகள் இதற்கு எதிரான தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் வெடித்தது.

கடற்படையினரின் நீரூந்து விசைப்படகுகளில் 107 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி கடற்படையினர் சரமாரியான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக கடற்புலிகள் இன்று அதிகாலை திடீர்த் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் இரண்டு கடற்படை நீரூந்து விசைப்படகுகளும் தாக்கி அழிக்கப்பட்டு அந்த இடத்திலேயே மூழ்கியது. இதனால் இன்று காலை மேற்கொண்ட தரையிறக்க முயற்சியை கடற்படையினர் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.

கடற்படையினரின் இரண்டு விசைப்படகுகளிலும் இருந்த கடற்படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவோ கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவே உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதற்கான கடுமையான முயற்சிகளை கடற்படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடற் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டுவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையும் இப்பகுதியில் கடற்படையினரின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இரண்டு கடற்படைப் படகுகள் இன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது சிறிலங்கா கடற்படையினருக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments