அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம்

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.

கொழும்பு அரசாங்கத்தின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்கள் பேசமுடியாத விடயங்களாக உள்ளன. அது தொடர்பான தவறுகளை தவிர்ப்பதற்கு வன்னியில் நடைபெற்ற போரில் இறுதி வாரங்களில் என்ன நடைபெற்றது என்பதை சிறிலங்கா மக்கள் எல்லோரும் திரும்பி பார்க்க வேண்டும்.

அதாவது, இந்த போரானது அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொடுமையான கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அனைத்துலகம் கண்மூடிக்கொண்டு இருந்துள்ளது அல்லது இந்த போரில் ஒரு பக்கத்தில் மரணிப்பவர்கள் கருமையான தோலைக்கொண்ட ஏழை மக்கள் எனவும் அவர்கள் எண்ணி மௌனமாக இருந்திருக்கலாம்.

எவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு அப்பால் அவர்கள் மீது இனச்சுத்திகரிப்பு என்ற பதமும் பிரயோகிக்கப்படவில்லை.

உலகின் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ச்சியாகவும், வரலாற்று ரீதியாகவும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகி வருகின்றனர்.

எனவே தமது உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை.

இதன் தொடக்கமாக உடனடியாக விடை காணப்படவேண்டிய பத்து கேள்விகள் உள்ளன.

1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?

2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?

3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?

4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?

5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?

6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?

7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?

8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?

9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?

இவ்வாறு 'கௌண்டர் கரண்ட்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.

Comments