தடுப்பு வதைமுகாம்களில் இருந்து படையினரால் பலாத்காரமாக கொண்டு செல்லப்படும் இளம் தமிழர்கள்

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக என யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்குள் பிரவேசிக்கும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர்கள், யுவதிகளைப் பலவந்தமாகக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதால் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியிருக்கின்றது.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக என தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் பெருமளவு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த முகாம்களைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் அதேவேளையில் முகாம்களில் உள்ளவர்களை வெளியே சென்று வருவதற்கும் படையினர் அனுமதிப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இரவு வேளைகளில் முகாம்களுக்குள் நுழையும் இராணுவத்தினர் இளைஞர்கள், யுவதிகளைப் பலவந்தமாக அழைத்துச் செல்வதாகத் தெரிவிக்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி, மிருசுவில் பகுதியில் உள்ள முகாம் ஒன்றுக்குள் சென்ற படையினர் சில இளைஞர்கள், யுவதிகளை இவ்வாறு கொண்டு சென்றபோது தமது எதிர்ப்பைத் தெரிவித்த பெற்றோர் சிறிலங்கா படையினரால் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

தெல்லிப்பளையில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைத்திருக்கும் சிறப்பு புனர்வாழ்வு நிலையத்துக்கே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்துவைக்கப்படுவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சிப் பகுதியைப் பொறுத்தவரையில், கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 21 இளைஞர்களும், மிருசுவில் றோமன் கத்தோலிக்க தேவாலய நிலையத்தில் இருந்து 12-க்கும் அதிகமான இளைஞர்களும் இந்த வாரத்தில் மட்டும் இவ்விதம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல வடமராட்சியில் நெல்லியடி மகாவித்தியாலய முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களில் குறைந்தபட்சம் 10 இளைஞர்கள் இவ்விதம் பலவந்தமாக இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் இது தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்கு இராணுவ வட்டாரங்கள் மறுத்துவிட்டன. நெல்லியடி மகாவித்தியாலய முகாமில் இருந்து ஏற்கனவே 75 இளைஞர்கள் இவ்விதம் கொண்டு செல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முகாம்களில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்வதால் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதுவரையில் நூறுக்கும் அதிகமானவர்கள் இவ்விதம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், இது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அதேவேளையில் இவ்வாறு கொண்டுசெல்லப்படும் இளைஞர் யுவதிகள் தமது குடும்பத்தினருடன் எந்தவகையிலும் தொடர்பு கொள்ள முடியாத வகையிலேயே தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இதுவும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

Comments