அம்பலமாகும் இந்தியப் பங்களிப்பு

இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் இலங்கைப் படைகளின் கைகள் ஓங்குவதற்கு யார் காரணம் என்ற குட் டைப் போட்டு உடைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

"மிகவும் வலுவான நிலையில் இருந்த புலிகளை அழித்து ஒடுக்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் பெரும் அளவிலான இராணுவ ஒத்துழைப்புகளே காரணம்"" என்று வெளிப்படையாக உண்மையை அம்பலப்படுத்தி யிருக்கின்றார் ரணில். இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொடூரப் பேரழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள்.

தினசரி அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்படுவது மிகக் கோரமாக அரங்கேறி வருகின்றது. இந்தப் போரை ஊக்கு வித்துத் தூண்டி, இலங்கைக்கு உதவி வருவது புதுடில்லி யும், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசும்தான் என்பது இப்போது ஐயந்திரிபற அம்பலமாகிவிட்டது.

இதற்குப் பின்னரும், தமிழகத்தில் தனது ஆட்சிக் கதி ரையைத் தக்க வைப்பதற்காகக் காங்கிரஸ் அரசுக்குக் கூஜா தூக்கும் கலைஞர் கருணாநிதியும், அவரது தி.மு. கவினரும், அவரது அணியினரும் எப்படித் தமிழக மக் களுக்கு முகம் கொடுக்கப் போகின்றார்கள்?

நேற்றுமுன்தினம் சென்னை வந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அங்கு ஒரு விடயத்தைச் சொன்னார். "எனக்குத் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சக்தி வாய்ந்த தொடர்பு இருக்கின்றது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோருக்குத் தந்த அன்பைத் தமிழக மக்கள் எனக்கும் தருகின்றார்கள். நம்முடைய தேசியத் தலைவர் களான நேரு, இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி ஆகியோரின் மனதில் தமிழகம் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. இந்திரா காந்தி முதலே தமிழகமும், தமிழக மக்களும் எங்கள் குடும்பத்தின் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் அன்பும் மதிப் பும் வைத்திருக்கின்றார்கள்."

" இப்படித் தமிழகத் தலைநகரில் வைத்துக் குறிப்பிட்டிருக்கின்றார் சோனியா அம்மையார். அத்தகைய தமிழக மக்களுக்கு சோனியா அம்மையார் செய்யும் கைம்மாறுதானா நன்றிச் செயல் தானா தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்படும் போருக்குத் தமது மத்திய அரசு மூலம் இராணுவ ஒத்துழைப்பு வழங்கும் இந்தத் திருப்பணி......?

ஈழத் தமிழர்கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்படு வதைத் தடுத்து நிறுத்துங்கள் என முழுத் தமிழகமுமே ஒன்று பட்டுக் கதறும் போது, அந்த இறைஞ்சலைப் புறம் ஒதுக்கி, உதாசீனப்படுத்தி, திமிரோடு நடந்துவிட்டு, இப்போது தமிழக மக்கள் நேரு குடும்பத்துக்கு இதுவரை அளித்த மரியாதை, பக்தி, நேசம், நம்பிக்கை ஆகியவை குறித்து பெருமிதம் பேசுகின்றார் சோனியாகாந்தி.

நன்றி மறந்த இந்தக் காட்டிக் கொடுப்புக்காகத் தமிழக மக்கள் காங்கிரஸ் அணிக்கு இம்முறை நல்ல "சூடு" கொடுப் பார்கள் என்பது திண்ணம்.

தலைமுறை தலைமுறையாக நேரு குடும்பத்தை ஏற்றில் போற்றிய தமிழக மக்கள், இப்போது அக்குடும்பத் தின் சார்பில் அதிகாரத்தைத் தக்கவைத்திருக்கும் சோனியா அம்மையார் தமிழ் மக்களைப் பரிதவிக்க வைத்த கொடு மைக்காக இனிமேல் எப்படி நடந்து கொள்வர் என்பதை அ.தி.மு.க. செயலாளர் செல்வி ஜெயலலிதா வெளிப்படை யாகவே தெரிவித்திருக்கின்றார்.

"இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இலங்கை யில் தமிழர்களை முற்றிலுமாக அழித்துவிட சபதம் மேற் கொண்டவர் போல செயற்படும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் நீங்கள்(சோனியா காந்தியும், கருணாநிதியும்). மன்னிக்க முடியாத இந்தத் துரோகத்தைச் செய்த உங்களை எங்கள் தமிழினம் தலைமுறை தலை முறையாக நினைவில் வைத்துத் தண்டிக்கும்"" என்று அறிவித்திருக்கின்றார் ஜெயலலிதா.

சென்னைத் தீவுத் திடலில் நேற்று முன்தினம் சோனியா பேசிய கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி யின் சுயரூபம் மீண்டும் ஒரு தடவை வெளிப்பட்டமை யையும் அவதானிக்க முடிந்தது.

இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழ அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புக் கிடைக்க அவர் கள் தமது கலை, கலாசாரம், விழுமியங்கள், தாயகம் போன் றவற்றைப் பேண தனித் தமிழ் ஈழமே ஒரே வழி என அறிவித்துள்ள அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா, அத னைப் பெற்றுக் கொடுக்கத் தாம் உறுதியோடு செயற் படுவார் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

அம்முடிவில் தாம் மிக உறுதியாக உள்ளார் என்பதையும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றார்.

அவரின் இந்தப் புதிய நிலைப்பாட்டால் தமிழகம் முழுவதிலும் மட் டுமல்ல, உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்குப் பெரிதும் உயர்ந்து விட்டது. ஒரே நாளில் உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவியாக அவர் உயர்ந்துவிட்டார்.

இதைப் பார்த்துவிட்டு நொந்துபோன தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாமும் ஒப்புக்குச் சப்பாணி போல, தமிழீழம் அமைக்கும் பணியைத் தாம் பொறுப்பேற்கின்றார் என்ற அறிவிப்பை வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்த வாறே விடுத்துப் பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஆனால், வைத்தியசாலையை விட்டுப் புறப்பட்ட பின்னர் தாம் பங்குபற்றிய முதல் பொது நிகழ்வில் சென் னைத் தீவுத் திடல் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்திக்கு முன்பாக வைத்து அது குறித்து எதுவுமே பிரஸ்தாபிக்காமல் அதனை அமுக்கி விட்டார்.

வழமைபோல, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், தமிழ்ச்செல்வனுக்குத் தாம் வரைந்த இரங்கல் கவிதை பற்றி வியாக்கியானம் கூறி, பழைய கதை பேசி தமிழக மக்கள் காதில் பூச்சுற்ற முயன்றார்.

அரைநாள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, ஈழத்தில் யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதாக ஏமாற்று அறிவிப்பு விடுத்த கலைஞரும், அவரது கூட்டணியின் பிர தான தலைவியான சோனியா காந்தியும் இன்னும் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் கொடூரம் தொடர்வது குறித்து மேற்படி கூட்டத்தில் மூடிமறைப்பாக நடந்து கொண்டமை அவர்களின் உண்மை ரூபத்தைத் தமிழக மக்களுக்குப் பளிச்சென்று எடுத்துக் காட்டிவிட்டது.

அதற்குரிய பதிலை தமிழக மக்கள் நாளை தமது வாக்குகள் மூலம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு வசமாகத் தருவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Comments