விஜய் நம்பியார், ஈழத்தமிழினத்தின் வில்லனா?

இந்தியாவில் பிறந்து, அதன் உயர் பாதுகாப்பு அமைப்பில் அங்கம் வகித்து, சீன தேசத்தில் இராஜரீக கடமை புரிந்த நம்பியார், இன்று ஐ.நா சபைப்பொதுச் செயலாளரின் உதவியாளராகப் பணிபுரிகிறார்.

இதுகாலவரை, போரை நிறுத்தும்படி வலியுறுத்தாத பான் கீ மூனின் நிலைப்பாட்டிற்கு உறுதுணையாகவும், அறிவுரையாளராகவும் நம்பியாரே இருந்துள்ளார் என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

உச்சமடையும், மேற்குலகில் வாழும் புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சிக்கு வடிகால் அமைக்க, பான் கீ மூனால் சிறீலங்காவிற்கு அனுப்பப்பட்டவரே இந்த நம்பியார்.அங்கு சென்றவர், மகிந்த சகோதரர்களுடன் கலந்துரையாடியபின்னர், தனது தாய்நாட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, ஐ.நா சபைக்குத் திரும்பியுள்ளார்.

எரிக்சொல்ஹெய்ம் அனுசரணைப் பாத்திரம் வகித்த காலம் முதல், இன்றுவரை கொழும்பு - புதுடெல்லி - மேற்குலகம் என்கின்ற பயணப்பாதை இன்னமும் மாறவில்லை. பாதுகாப்புச் சபையில் வாய்திறக்கமாட்டேன் என அடம் பிடிக்கிறார் நம்பியார். திறந்தேயாகவேண்டுமென பிரான்சும் உறுதியாக இருக்கிறது.

மூடிய பாதுகாப்புச் சபைக்குள், மேற்கொள்ளப்பட்ட ஒன்றுகூடலில், மாவோவின் செஞ்சீனத்திற்கு வந்த கோபம், விடுதலைப்புலிகள் மீது திரும்பியிருப்பதே வேடிக்கையான விடயமாகக் கருதப்படுகின்றது.கடந்த இரண்டு நாட்களுள், இந்தியாவும், சீனாவும் விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டுமென்கிற செய்தியினை உலகிற்கே வெளிப்படுத்தியிருந்தார்கள்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழிக்கும் சிங்கள அரசிற்கு, தமது பூரண ஆதரவினைத் தொடர்ந்தும் வழங்கப்போவதாக, சிவப்புச் சீனாவின் வெளியுறவுத்துறைப் பேச்சாளர் கூறிய கருத்து, இந்திய வல்லாதிக்கத்தை மிக நெருக்கமாக சிங்களத்தை நோக்கி நகர்த்தும்.

அதாவது ஆசியப் பிராந்தியத்தில் சீனாவையும், இந்தியாவையும் மீறி, மேற்குலகம் உள்நுழையக் கூடாது என்பதில் இவை இரண்டும் மிக உறுதியாக இருப்பதனையே இவை எடுத்துக்காட்டுகின்றன.நேபாளமும், சிறீலங்காவும் தமக்கு நட்புநாடுகள் என்று சீனா பிரித்துக்காட்டுவது, இந்தியாவை சீண்டுவதற்கு என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இவ்விரு அணுஆயுத வல்லரசுகளும் சிங்களத்துடன் நட்புரிமையைப் பாராட்டினாலும், ஆதிக்கப் போட்டியின் வெளிப்பாடுகள் அவர்களின் கருத்துக்களில் உடைத்துக்கொண்டு பீறிடுவதனை அவதானிக்கலாம். இனப்பிரச்சினையானது பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டாலும், அவை திசைமாறி, விடுதலைப்புலிகளுக்கொரு சட்டபூர்வமான அந்தஸ்தினை வழங்கிவிடக்கூடாது என்பதில் சீனா காட்டும் அக்கறைபோன்று, இந்தியாவும் கவலைப்படுகிறது.

இந்தியப் பூர்வீகக்குடி விஜய் நம்பியார் சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கையானது, மனிதாபிமான விவகாரம் என்கிற அடிப்படையில் விவாதிக்கப்படுவதை இந்தியா விரும்புகிறது.அவ்விவாதத்தை இந்த வகையில் நகர்த்திச்செல்ல வேண்டும் என்கிற அறிவுரையே, இந்தியாவால் புதுடெல்லியில் வைத்து விஜய் நம்பியாரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

அது ஒரு தனிப்பட்ட விஜயம், பகிரப்படமுடியாத பரமரகசியமென நாட்களை இழுத்தடித்துப் பார்த்த நம்பியார், மேற்குலகின் அழுத்தத்தால் அடிபணிந்து அறிக்கை விடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார். வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, பாதுகாப்புச் சபையிலும், மேற்குலக ஆதரவுகொண்ட இந்தியா பக்கத்தில் இருக்கும்வரை, இன அழிப்புப் போரினை சாட்சியங்களற்று நடாத்திமுடித்து விடலாமென சிங்களத்தரப்பு இதுவரை எண்ணியிருந்தது.

தமிழக எழுச்சியை தமிழின அழிவுத் தலைவர் கருணாநிதி ஒரு கை பார்ப்பதால், இந்திய மத்திய அரசிற்கு தலைவலி குறைவாக இருந்தது. ஆனாலும் புலம்பெயர் தமிழ் மக்களின் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்குலகை அசைக்க ஆரம்பித்திருப்பதை நிறுத்தமுடியாத கையறு நிலையில் இந்தியா இருக்கிறது.

புதிய தலைமுறை மாணவ - இளைஞர்களின் போராட்ட வடிவங்கள் புதிய பரிமாணத்தைத் தொட்டு அந்நாட்டு வெகுஜன இயக்கங்கள், தொழிற் சங்கங்கள்வரை விரிந்து செல்ல ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள பாரிய தொழிற் சங்கமான யுனிசன், தேசிய ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்துடனும் எமது மாணவ - இளைஞர் அணியானது பொது வேலைத்திட்டமொன்றினூடாக இணைகிறது.

தமிழ் மக்கள் வாழும் மேற்குலக நாடுகளில் உள்ள வெகுஜன ஸ்தாபனங்களோடு கலந்து, தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான முன்னெடுப்பினை மேற்கொள்ளும் மாணவர்களின், முற்போக்குப் பாத்திரத்தினை உணர்ந்து, சகல உதவிகளையும் வழங்க மக்கள் முன்வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக, இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புக்கள், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஒன்றியம் யுத்தத்திற்கு எதிரான முன்னணி போன்றவற்றுடன் ஒரு கருத்தாதரவின் (solidarity)அடிப்படையில் அவர்களை அணிசேர்க்கும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய விரி தளங்களை அரவணைத்துச் செல்லும் மாணவ - இளைஞர்களின் செயல் வடிவங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை முழக்கத்தை நோக்கி நகர்த்திச் செல்லப்படுகின்றது.

விடுதலைப்புலிகளை ஏக தலைமையாக ஏற்று, முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை, மக்கள் குரலாக ஏற்றுக்கொள்ளாத இந்த சர்வதேசம், புலம்பெயர்ந்த மாணவ - இளைஞர்களின் வெகுஜனக் குரலை நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும்.

சகல தமிழ் அமைப்புக்களின் குரல்களையும், புலிகளின் குரலாகச் சித்தரிக்கும் மேற்குலகம், அந்தந்த நாடுகளில் உள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெகுஜனக் குரல்களோடு கைகோர்த்துச் செல்லும் தமிழ் மக்களின் குரலை நிராகரிக்க முடியாது.

தட்டி எழுப்பப்படவேண்டியது, பிற இனத்து மக்களின் மனச்சாட்சி என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு புரட்சிகர அரசியலிற்கும், போராட்ட அரசியலிற்கும் அடிப்படையாக உள்ள விடயம் இதுதான். இவ்வகையாக, புலம்பெயர் சமூகத்தில் ஏற்படும் புரட்சிகரமான சிந்தனை மாற்றங்கள், தமிழகத்திலும் உருவாகும் என்கிற சமிக்ஞைகள் தென்படுகின்றன.

ஆனாலும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபைவரை சென்ற ஈழத்தமிழர்களின் இன்றைய அவலநிலை, இந்தியாவின் மறைமுகமான தலையீடுகளினால், கவனிக்கப்படாததொரு நிலைக்கு இட்டுச் செல்லப்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

நடைபெறப்போகும் ஒட்டுமொத்த தமிழினப் படுகொலைக்கு, சாட்சியாகவும் உற்ற துணையாகவும் சீனாவும், இந்தியாவும் இருக்கப்போவதை ஐ.நா சபையின் வழுவழுத்த நிலைப்பாட்டினூடாகப் பார்க்கலாம்.

தற்போது மோசமடையும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி நிலையில், சீனாவுடன் நேரடியாக மோதும் வகையில், அமெரிக்கா சில முன்னகர்வுகளை திட்டமாக மேற்கொள்ளுமா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.போரை நிறுத்துமாறு வலியுறுத்த இயலாத ஐ.நா சபையானது, மனிதக் கேடய விவகாரத்தையே மறுபடியும் உயர்த்திப் பிடிக்கிறது.

ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களை மனிதக் கேடயமாகவும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றும் கருவிகளாகவும் பயன்படுத்திய சிங்களத்தின் குரூரத்தால் புதுமாத்தளனின் ஒருபகுதியில் தங்கியிருந்த மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். மக்கள் மீட்கப்படுவதால், போர்நிறுத்தம் வேண்டுமென்கின்ற அழுத்தத்தை தம்மீது ஐ.நா சபை சுமத்த முற்படக்கூடாது என்கிற தந்திர புத்தியே சிங்களத்தால் பிரயோகிக்கப்படுகிறது.

சிங்களத்தின், மக்களைச் சிறைப்பிடிக்கும் கொடூர வழிமுறைகள் குறித்து சர்வதேசம் அறிந்திருந்தாலும், அவை பற்றி சுட்டிக்காட்ட விரும்பவில்லை.அதேவேளை இன்னமும் சில நாட்கள் கால அவகாசத்தை சிங்களத்திற்கு வழங்கினால், எஞ்சியுள்ள இரண்டு இலட்சம் மக்களையும் மீட்டெடுத்து, விடுதலைப்புலிகளின் தலைமையையும் மகிந்தர் அழித்துவிடுவார் என்று இந்திய வல்லாதிக்கம் கூறுவதை ஏற்கும் நிலையிலேயே மேற்குலகம் இருப்பதுபோல் உணரப்படுகிறது.

17 நாட்களைக் கடந்து சோர்வின்றி மக்களால் முன்னெடுக்கப்படும் உண்ணாநிலை, ஆர்ப்பாட்டப் போராட்டத்தைப் பார்வையிட பொறுப்பு வாய்ந்த பிரித்தானிய ஆட்சிப் பிரதிநிதிகள் எவருமே முன்வரவில்லை. பரமேஸ்வரனுடன் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்த சிவதர்சன் என்ற இளைஞருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் உள்ளார்கள்.

ஏப்ரல் 2ம் திகதிக்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. புலம்பெயர் மக்களின் பூரண ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட "வணங்கா மண்" மனிதாபிமான அவசர உதவிப் பயணத்தை, எவர் தடுக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியவில்லை.

ஆகவே அவலப்படும் வன்னி மக்களிற்கான அவசர உதவிகள் தடுக்கப்படுவதோடு, சர்வதேச சமூக கட்டமைப்பிலிருந்து ஈழத் தமிழினம் முழுவதும், தீண்டத்தகாத ஒடுக்கப்பட்ட மனிதக்கூட்டமாக மாற்றப்படும் அபாயம் ஒன்று தோன்றுகிறது.இந்தத் தமிழின அழிப்பின் சூத்திரதாரி இந்தியா என்பதில், எதுவித சந்தேகமும் கிடையாது.

1987ல், விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க இந்தியாவானது நித்திகைக் குளம்வரை சென்றபோது, இராஜீவ் காந்தி உயிரோடு இருந்தார். அப்போரை வழிநடாத்தினார். அதேபோன்று, 2009ல், அவரின் மனைவி சோனியாகாந்தி புதுமாத்தளன்வரை வந்துள்ளார்.

ஆனாலும் இராஜீவின் கொலைக்காக, சோனியா பழிவாங்குவதாகக் கூறப்படும் கதைகளெல்லாம், பிராந்திய - புவிசார் அரசியலைப் புரிந்துகொள்ளாதோர் முன்வைக்கும் மலினமான அரசியல் பார்வையாகும்.87ல் நேரடியாகவே விடுதலைப்புலிகளுடன் இந்தியா மோதும்போது, அதன் நோக்கத்திற்கான காரணிகளாக, எந்தப் பழிவாங்கல் கதைகளை நாம் முன்வைக்க முடியும்?

இந்திய மக்களுக்கு வேண்டுமென்றால், இராஜீவ் கதைகூறி, சிங்களத்திற்குச் செய்யும் படைக்கல உதவிகளுக்கான நியாயத்தைக் கூறலாம். ஆனால் அதுவல்லப் பிரச்சினை. 87ல் அரைகுறையாக விட்டுச்சென்ற ஆதிபத்திய உரிமைக்கதையை, 2009ல் எழுதிமுடிக்க இந்தியா செயற்படுகிறதென்ற உண்மையை நாம் புரிதல் வேண்டும்.

இதயச்சந்திரன்

நன்றி : ஈழமுரசு (24 ஏப்பிரல் 2009),tamilkathir

Comments