
அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்கா படையினரிடம் அவர்கள் இருவரும் சரணடைந்தனர்.
இவை எல்லாம் நடைபெறும்போது நடேசனின் மனைவியான திருமதி விஜித்ரா நடேசனும் அவர்களுடன் கூடவே இருந்தார்.
பின்பு, அவர்கள் இருவரும் சரணடையும் போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்களுடன் தானும் வெளியேறி சிறிலங்கா படையினரிடம் தன்னை ஒரு சிங்களப் பெண் என அவர் அறிமுகம் செய்தார்.
அந்த நேரத்திலேயே சரணடைந்த நடேசனையும் புலித்தேவனையும் சிறிலங்கா படையினர் சுட்டுக்கொன்றனர்.
அப்போது, துடித்து அழுது கதறிய நடேசனின் மனைவி, தனது கணவர் உட்பட அரசியல்துறையைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தபோது அவர்களைச் சுட்டுக்கொன்றது மிகவும் கொடூரமான ஒரு தவறு என சிறிலங்கா படையினருடன் கத்தி வாக்குவாதப்பட்டார் என அப்போது அந்த இடத்தில் இருந்த - பாதுகாப்புக் கருதி தனது பெயரை வெளியிட விரும்பாத - ஒரு சிங்கள செய்தியாளர் தெரிவித்திருக்கின்றார்.
நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்ததால், அவர் சிங்கள மொழியிலேயே படையினருடன் வாக்குவாதப்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்த போது சிறிலங்கா படையினர் நடேசனின் மனைவியை நோக்கி சரமாரியாகச் சுட்டனர் எனவும் அப்போது அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.
நடேசன் முன்னர் சிறிலங்கா காவல்துறையில் பணிபுரிந்தவர். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நாரஹேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விஜித்திராவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.
விஜித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர்.
அந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.
1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
நடேசனின் மனைவி விஜித்ரா ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்தபோதிலும் கூட, நடேசனின் அனைத்துப் பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்ததுடன், தமிழ் மக்கள் பட்டு வந்த நெருக்கடிகளிலும் துன்பங்களிலும் ஒரு பங்காளியாக அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார் என்பது சொல்லப்படவேண்டியது.
Comments