கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு. தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்...
உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்.. என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது.
பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள இராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!
வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,
''இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள இராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டது.
மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.
பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை, மனச்சாட்சியுள்ள இராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் சிங்கள இராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது.
நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு. கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது, இராணுவத்தினரிடம் பிடிபட்டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க. அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி விட்டது.
இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் இராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்!
பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன. கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் இராணுவத்தினர், அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!
அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. இராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்.. 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்' என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.
வவுனியா மாவட்ட அரச அதிபரான திருமதி சார்ல்ஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட.
தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..! ''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
இரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் இராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது இராணுவம்.
சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதில் ஒரு சிறுமி, இராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள். தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள்.
'கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்! என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் இராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில் அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும் மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன.
குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட நினைப்பதில்லை. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..! என்கிறார்கள் வன்னிப் பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.
அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள இராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!
நன்றி: ஜுனியர் விகடன்
Comments