இதன் அடிப்படையிலேயே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக, இந்தியா கூற முனைகிறது.
இந்திய அரசின் நகர்வுகள் பற்றியதான சந்தேகங்களுக்கு சில காரணிகள் உண்டு.விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்புணர்வு, தற்போது தமிழ் மக்கள் மீது திரும்பியுள்ளது போலுள்ளது.ஐ.நா.சபையில், மேற்குலகு ஓரணியாக நிற்க, அதற்கு எதிரான நாடுகள் மற்றோர் அணியாக நின்று இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ளன. ஆனாலும், இவர்கள் எவருமே, கடந்த சில மாதங்களாக உணவிற்காகவும், மருந்திற்காகவும் ஏங்கிய மக்களை திரும்பிப் பார்க்கவில்லை.
ஆயுதப் போராட்டக் கட்டமைப்பு அழிக்கப்பட வேண்டுமென்பதில் சிரத்தை கொண்ட இந்த வல்லரசாளர்கள், மக்களின் அழிவு குறித்து கவலைப்படவில்லை. அவ்வாறு கவலையடைய மாட்டார்கள் என்பதை பலர் உணர்ந்து கொள்ளவுமில்லை.
மூன்று இலட்சம் மக்களுக்கு 25 தொன் உணவு போதாது என்கிற உண்மையை காலங்கடந்து புரிந்து கொள்கிறார்கள்.
நிலத்தில் ஊர்ந்து செல்லும், வாகனங்களின் இலக்கத் தகடுகளைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் செயற்கைக் கோள்கள், அங்கு சிக்குண்டிருந்த மக்களின் எண்ணிக்கையையும் அறிந்திருக்கும்.
அரசாங்கம் முன்னர் வெளியிட்ட மக்கள் தொகை, புள்ளிவிபரம் தவறானது எனப் புரிந்தும், எதுவித காத்திரமான அழுத்தங்களையும் செலுத்த முற்படாத உலக மகா மனிதாபிமான நாடுகளின், புவிசார் அரசியல் நலன்களை புரிந்து கொள்ளப்பட
வேண்டியது அவசியம்.இப்படி நடக்குமென்று இவர்களுக்கு நன்கு புரியும். ஆனாலும், இவர்களின்
உள்நோக்கத்தையும், ஜனநாயகப் போர்வையினையும் சிலர் உணர்ந்து கொள்ளவில்லை.
சர்வதேச தொண்டு நிறுவனங்கள், ஐ.நா.சபையின் உப அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்வற்றைக் வன்னிக் களமுனையிலிருந்து அரசாங்கம் அகற்றியவுடன், வல்லரசாளர்களின் திட்டமிட்ட அசமந்தப் போக்கினை புரிந்திருக்க வேண்டும்.
ஆனாலும், இன்னும் கூட அந்நிலை நீடிப்பதையிட்டு கவலைகொள்ளாமல், அரசாங்கத்தின் தயவில் அகதி முகாமில் இருப்பதை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே சர்வதேசம் சமூகம் இருக்கிறது.
விடுதலைப் புலிகளோடு இறுதிவரை நின்றவர்களை, பழிவாங்கும் மனோ நிலையில், சர்வதேசமும் இருக்கிறதென்கிற சந்தேகம் தமிழ் மக்களிடையே தோன்றியுள்ளது.
ஆகாயத்திலிருந்து கள முனைகளின் கோரத்தைப் பார்த்தவர்களும், முகாம்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தவர்களும், வெறும் கவலையைத் தெரிவித்து கலைந்து சென்றுள்ளனர்.
முடமாகிப் போன, நோயுற்ற மக்களுக்கான போதிய வைத்தியவசதிகள் அற்ற நிலைமை முள்ளிவாய்ககாலில் இருந்து வவுனியா வரை நீடித்துக் கொண்டேயிருக்கிறது.
கூடுகள் கலைக்கப்பட்டு, பெற்றோர், குழந்தைகள் யாவரும் தொடர்பற்ற நிலையில், சிதறுண்டு போகடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பொறுப்பேற்று, பராமரிக்கக் கூடிய வல்லமையையும், ஐ.நா. சபை இழந்திருப்பதே பெரும் சோகமாகும். பிராந்தி வல்லரசாளர்கள், அதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வேறெõருவரும் உள்நுழைய முன்பாக, நிவாரணப் பொருட்களை அனுப்ப அவசரப்படும் இந்தியா, தனது 34 வர்த்தக நிறுவனங்களை உள்ளே அனுப்பும் முயற்சியிலும் ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கி
ன்றன. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதில் ஒன்றிணைந்து செயற்பட்ட பிராந்திய வல்லரசாளர்கள், தமக்குள் மோதிக் கொள்ள தயாராகின்றனர்.
அதற்கான அறிகுறிகள், பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள் ளன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யாவின் படைகள், அதியுயர் தொழில்நுட்ப பங்களிப்பாலேயே தாம் இந்த யுத்தத்தில் வெற்றி பெற முடிந்ததாக அரசாங்கம் தெரிவிப்பதை, இந்தியா உணர ஆரம்பித்துள்ளது.
ரஷ்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலங்களும் கொழும்பில் நடைபெற்று, கனடா தூதரகமும் தாக்கப்பட்டுள்ளது.
தம்மீது அழுத்தம் கொடுக்க முனைபவர்களை முழு மூச்சாக எதிர்ப்பதும், அந்த எதிர்ப்பினூடாக அவர்களை அடிபணிய வைத்து மௌனியாக்குவதுமே, இதுகால வரை சிங்கள தேசம் மேற்கொண்டு வரும் எதிர்வினைச் செயற்பாடுகள் ஆகும்.
ஆனாலும் பிராந்திய ஆதிக்க விரிவாக்கத்திலும், சந்தைப்பங்கிடுதலிலும், போட்டி போடும் ஏகாதிபத்தியங்களுக்கு, சூடு சொரணை இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது மிகத் தவறானது.
இவை எவ்வாறு இருப்பினும், இந்தியாவின் ஈழப்பிரச்சினை குறித்த நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.
ஆயுதப் போராட்டம், முடிவொன்றினை எட்டியவுடன், அதன் அடுத்த கட்டமாக, புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டத் தளத்தினை சிதைக்க வேண்டுமென்கிற திட்டத்தினை இந்தியா கொண்டிருக்கிறது.
மறுபடியும், விடுதலைப் புலிகளின் எழுச்சி, உருவாகி விடக் கூடாதென்பதில் தனது கவனத்தைச் செலுத்தும் இந்தியா, அதற்கான ஏது நிலைகள், புலம்பெயர் நாடுகளில் இருந்து வரக்கூடிய அபாயம் இருப்பதாக எடை போடுகின்றது.
இந்திய அமைதிப்படைத் தளபதி கல்கட் தனது இந்த வார கட்டுரையொன்றில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சகல வழிகளிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மீது உளவியல் சமரொன்று மிக வேகமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை உணரக்கூடியதாக விருக்கிறது.
அவர் இருக்கிறாரா. இல்லையா என்பதிலிருந்து இச்சமர் ஆரம்பமாகிறது. அந்த விவாதம், விரிவடைந்து நீண்டு செல்ல வேண்டுமென்பதே பிராந்திய வல்லரசின் விருப்பம்.
ஆயினும், புவிசார் அரசியலைப் புரிந்து, மீண்டும் மீண்டெழ வேண்டியதன் அவசியத்தை புலம்பெயர் மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். அதே÷வளை ஏதிலியாக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களுக்கு செய்ய வேண்டிய அவசர உதவிப் பணிகள் குறித்தும், இவர்கள் சிந்திக்க வேண்டும்.
இன்னமும் தமிழக அரசியல் கனவிலும், ஒபாமா உறவிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாமென்ற கற்பிதம் கொள்வது தவறானது என்பதை புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த பிராந்திய வல்லரசாளர்களுக்கு எதிரான போரில், தமிழினம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியுற்றதா என்பதை காலம் தீர்மானிக்கும்.
- சி.இதயச்சந்திரன்-
Comments