தலைவரின் மரண வதந்தி தொடரும் சர்ச்சைகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்தது உண்மையே என அந்த அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கூட, அந்த மரணத்தின் சர்ச்சைகள் நீடிக்கின்றன. காரணம்..?

முதலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது முதல் இன்று வரையிலான முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்...

மே 18 :

"இலங்கை ராணுவ முற்றுகையில் இருந்து (வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி) பிரபாகரன் தனது தளபதிகளுடன் குண்டு துளைக்காத ஒரு கவச வேனில் வட பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, ராணுவத்தினர் வீசிய ராக்கெட்டில் பிரபாகரன் சென்ற வேன் சிதறடிக்கப்பட்டது. பின்னர், அந்த வேனுக்குள் இருந்து பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டது. ராக்கெட் வீச்சில் வேன் எரிந்து நாசமானதால் பிரபாகரனின் உடலில் தீக்காயங்கள் காணப்பட்டன.

ராணுவத்துடன் நடந்த இறுதிக்கட்ட சண்டையில் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், அமைதி செயலகத்தின் இயக்குனர் எஸ்.புலித்தேவன், தற்கொலைப்படை பிரிவின் தலைவர் ரமேஷ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போலீஸ் பிரிவு தலைவர் இளங்கோ மற்றும் முக்கிய தலைவர்கள் சுந்தரம், ரத்னம் மாஸ்டர், கபில் அம்மான் ஆகியோரும் கொல்லப்பட்டனர். 220-க்கும் அதிகமான விடுதலைப்புலிகளும் ராணுவத்துடன் போரிட்டு மாண்டார்கள்," என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்செகா தெரிவித்தார்.

இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கர கூறுகையில், " விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து விட்டது. நாடு முழுவதும் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. எங்களிடம் ஏற்கனவே உள்ள புலனாய்வு தகவல்களை வைத்து பிரபாகரனின் உடலையும், மற்ற விடுதலைப்புலிகளின் உடல்களையும் அடையாளம் கண்டு வருகிறோம்," என்றார்.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்ட தகவலை மறுத்த, புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன், 'சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், " இலங்கை ராணுவம் கூறி வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று ராணுவம் கூறி வருகிறது. இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது," என்றார்.

மே 19 :

விடுதலைப்புலிகளை போரில் ராணுவம் வீழ்த்திவிட்டது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே தெரிவித்தார். ஆனால், பிரபாகரன் மரணம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

ராஜபக்சே உரையைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில், போரில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் மதியம் அறிவித்தது. அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை இலங்கை அரசு வெளியிட்டது.

"பிரபாகரனின் உடல் நந்தி கடல் கழிமுக பகுதியில் கிடந்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர். மேஜர் ஜெனரல் கமல் கூனரத்னே தலைமையிலான 53-வது படைப்பிரிவினர் பிரபாகரனின் உடலை கண்டு எடுத்தது," என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கர தெரிவித்தார்.

பிரபாகரனின் உடலை விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), ராணுவத்தில் சரணடைந்த தயா மாஸ்டர் ஆகியோர் அடையாளம் காட்டியதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகள் பி.நடேசன், எஸ்.புலித்தேவன் ஆகியோர் போரை நிறுத்தும் நோக்கத்தில் ராணுவத்தின் 58-வது படைப்பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கைகளில் வெள்ளைக்கொடிகளை ஏந்தி சென்றனர். ஆனால் அவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்றுவிட்டது. இது மனிதாபிமானமற்ற செயல்," என்று புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாபன் விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும், பிரபாகரன் உடல் என இலங்கை அரசு வெளியிட்டுள்ள வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

"பிரபாகரன் உடல் என வெளியிடப்பட்ட வீடியோவில் நம்பகத்தனமை இல்லை. அந்த வீடியோவில் பிரபாகரன் இளமையுடன் தோற்றமளிக்கிறார்; முகம் சவரம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது என்பன உள்ளிட்ட வேறுபாடுகளை புலிகள் ஆதரவாளர்கள் முன்வைத்தனர். மரபணு சோதனை செய்யப்பட்டது குறித்த இலங்கை ராணுவத்தின் அறிவிப்பும் முன்னுக்குப் பின் முரணானது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சை தொடர்ந்தது.

பிரபாகரனின் மரணம் உறுதிசெய்யப்படவில்லை என்பதால், அதுபற்றி கருத்துகூற விரும்பவில்லை என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

மே 20:

பிரபாகரன் மரணமடையவில்லை என்று கூறி, புலிகள் தரப்பு பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வந்த நிலையில், அவரது மரணம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி வரும் இலங்கை அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இலங்கை அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான கேவியாரம் பக்வேலா கூறுகையில், "பிரபாகரன் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை பெறப்படும். அதைத்தொடர்ந்து சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகே பிரபாகரன் உடல் அடக்கம் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மே 21:

இலங்கை சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பிரபாகரன் மரணம் பற்றிய சான்றிதழை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்து இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வர இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. எனவே அவரது மரணத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை, " என்றார் எம்.கே.நாராயணன்.

மே 22 :

இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டி ஒன்றில், "விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாங்கள் போரில் உயிருடன் பிடிக்கவே விரும்பினோம். அப்படி பிடித்திருந்தால் அவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கிற்காக இந்தியாவின் வசம் ஒப்படைத்திருப்போம். அங்கு அவர் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டியது இருந்திருக்கும். அதன்பிறகு பிரபாகரன் இந்தியாவிற்கு தலைவலியாகி இருப்பார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றிருப்பது நிம்மதி அளிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிலிருந்து தீவிரவாதிகளை அடியோடு அகற்றி இருக்கிறோம். இப்போது நாங்கள் ஒருங்கிணைந்த, முழுமையான நாடாக திகழ்கிறோம்," என்றார் ராஜபக்சே.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும், தகுந்த நேரத்தில் அவர் மக்கள் முன் தோன்றுவார் என்றும் விடுதலைப்புலிகளின் வெளிவிவகார உளவுத்துறையின் தலைவர் அறிவழகன் அறிவித்தார்.

இதுபற்றி புலிகள் ஆதரவு இணையதளம் வெளியிட்ட செய்தியில், "தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும், அதன் ராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரசாரத்தை திட்டவட்டமாக மறுக்கிறோம்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவு குரல் எழுப்பி வரும் உலக சமுதாயத்தை குழப்புவதற்காக இலங்கை அரசாங்கம் தமிழ் ஈழ தேசிய தலைவர் தொடர்பான பொய்ப்பிரசாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது. எமது பாசத்துக்குரிய தேசிய தலைவர் உயிருடனும், நலமுடனும் இருக்கிறார். அவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்," என்று அறிவழகன் கூறியதாக அந்தச் செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மே 23:

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் உடலை எரித்து, சாம்பலை கடலில் வீசி விட்டதாக, இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "பிரபாகரனின் உடலை, நந்திக்கடல் கழிமுக பகுதியில் இருந்து ராணுவத்தினர் கைப்பற்றினார்கள். பின்னர் அவரது உடல் முல்லைத்தீவின் தென்கிழக்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் எரித்தனர். பின்னர் அதில் இருந்து சேகரிக்கப்பட்ட சாம்பலை இந்து மகா சமுத்திரத்தில் வீசிவிட்டார்கள். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை. அது உண்மை அல்ல," என்றார் பொன்செகா.

மே 24 :

பிரபாகரன் கொல்லப்பட்டதாக மே 18-ல் இலங்கை ராணுவம் அறிவித்தபோது, அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்த புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், மே 24-ம் தேதி ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பிரபாகரன் வீரமரணமடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

"...எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் (பிரபாகரன்) சுமந்தார். இறுதியில் விடுதலைக்கான இந்த நீண்ட பாதையில், எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தினாரோ, அந்த மக்களுக்காகவே கடைசி மணித்துளி வரை நின்று போராடி வீரச்சாவடைந்தார்," என்று பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லண்டன் பி.பி.சி. ரேடியோவுக்கு டெலிபோன் மூலம் அளித்த பேட்டியிலும், பிரபாகரன் மரணமடைந்ததை செல்வராசா பத்மநாதன் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக பத்மநாதன் வெளியிட்ட அறிக்கையை தமிழர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "மே 18-ந் தேதி, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று, 'சேனல் 4' என்ற லண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப்புலிகளின் அனைத்து உலகத் தொடர்பு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, "பிரபாகரன் இறந்து விட்டார்'' என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோக செயல் ஆகும்," என்றார். இதேபோல், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறனும் பத்மநாதனின் அறிக்கையை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

புலிகள் ஆதரவாளர்களின் சந்தேகங்கள்..!

பிரபாகரன் மரணமடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்த நாளனறு, பத்மநாதன் மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி, அவரது உடல் காட்டப்படாததால், சர்ச்சை தொடங்கியது.

மறுதினம்... பிரபாகரன் உடல் என சில வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. ஆனால், சர்ச்சை தொடரும் வகையில் புலிகள் ஆதரவாளர்களால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி?; முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்?; கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்?; ஆம்புலன்ஸ்சில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற்கு மாறாக, ஒரு நாளுக்கு முன்பு 12 மணி அளவில் முல்லைத்தீவு நந்திக்கடல் கழிமுக பகுதியில் இருந்து உடலை கண்டுபிடித்ததாக அறிவித்திருந்தது.

தலையின் மேற்பகுதி மறைத்து வைக்கப்பட்டு உள்ளது; பிரபாகரனின் நாடி நடுவில் ஒரு வெட்டு உள்ளது போன்ற இரட்டை நாடி ஆகும். வீடியோ படத்தில் அப்படி இல்லை; பிரபாகரனின் கை சற்று பருமனாக இருக்கும். இந்த படத்தில் அப்படி இல்லை;
இறந்து பல மணி நேரம் ஆகியும் தண்ணீருக்குள் கிடந்த அவருடைய உடல் உப்பவில்லை. படத்தில் காண்பிக்கப்படுவதுபோல், தலையை பொம்மையை போல் அசைக்கமுடியாது என்று தடய அறிவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்; தலைவரின் முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டு, அதை மறைக்க யூனிபார்மும், தலையில் துணியும், பாதி உடலும் என்று காட்டுகிறார்கள்...

இதுபோன்ற பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிய புலிகள் ஆதரவாளர்கள், சில விளக்கங்களையும் அளித்தனர். இதனால் பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சை நீடித்தது.

இலங்கையில் தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதை மறைக்கும் நோக்கத்துடனும், சர்வதேச சமுதாயத்தை திசைதிருப்பும் எண்ணத்துடனும் தான் புலிகள் தலைவர் மரணமடைந்ததாக, இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது என்பதே புலிகள் ஆதரவாளர்களின் பிரதான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

பத்மநாதன் அறிக்கையின் பின்னணி?!

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு, அந்தச் செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடம் ஊடகங்கள் மூலம் கொண்டு சேர்க்கும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதை உலகத் தமிழர்கள் பலரும் நம்ப மறுப்பதை உணர்ந்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிதான் பத்மாநாதனின் அறிக்கை விவகாரம் என்கின்றனர் புலிகள் ஆதரவு தரப்பினர்!

இலங்கை அரசின் ரகசிய திட்டம் பற்றி, கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) புலிகளின் ஆதரவாளர்களிடம் இருந்து தமிழகத்திலுள்ள சிலருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

"பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக, உலகத் தமிழர்களை நம்ப வைக்கும் வகையில், புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மூலமாகவே ஓர் அறிக்கையை வெளியிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பத்மநாதனை மிரட்டியும் பல்வேறு நெருக்கடி கொடுத்தும் அவ்வாறு அறிக்கை வெளியிடும் செயல்களில் இலங்கை அரசும், இந்தியாவின் உளவுப் பிரிவான 'ரா' அமைப்பும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. எனவே, பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று பத்மாநாதன் மூலமாகவே அறிக்கை விரைவில் வெளிவரும்," என்பதே அந்தத் தகவல்!

பத்மநாதன் மூலம் காய்நகர்த்தும் திட்டம் தெரிந்ததன் எதிரொலியாகவே, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்ற செய்தியை விடுதலைப்புலிகளின் வெளிவிவகார உளவுத்துறையின் தலைவர் அறிவழகன் முன்கூட்டியே அறிவித்தார் என புலிகள் ஆதரவாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், "இந்தச் சூழலின் பின்னணியில் தான் பத்மாதனின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெறும் அறிக்கை மட்டுமே வெளியானால், அதனை புலிகள் ஆதரவு தரப்பு மறுத்துவிடக் கூடும் என்பதால், பத்மநாதனையே நெருக்கடிக்கு ஆளாக்கி, பி.பி.சி. வானொலியுடன் பேசவைத்துள்ளனர்," என்கின்றனர்.

இலங்கை அரசின் இந்த உத்தியின் பின்னணிதான், பழ.நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோரின் அறிக்கையில் எதிரொலிக்கிறது.

மேலும், பத்நாதனின் அறிக்கைகளையும் பேட்டிகளையும் தவறாமல் வெளியிட்டு வரும் புலிகளின் தீவிர ஆதரவு இணையதளங்கள், பிரபாகரன் மரணம் பற்றிய பத்மநாதனின் அறிக்கையை கண்டுகொள்ளவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், பிரபாகரனின் மரணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல், மர்மங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.

இதனிடையே, "தமிழர் படுகொலையை மறைப்பதற்காக இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சையை சற்றே ஒதுக்கிவிட்டு, இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழர்கள் அனைவரும் ஈடுபட வேண்டியது அவசியம். குறிப்பாக, முகாம்களில் தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதையும், 18 வயதுகுட்டப்பட்ட சிறார்கள் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்க உத்தரவாதமும், அவர்களுக்கு வாழ்வாதாரமும் கிட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்," என்று உலக நாடுகளில் விரவிக் கிடக்கும் தமிழர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்!

Comments