"அங்கு உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினையானது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று" என நேற்று திங்கட்கிழமை இரவு நியூயோர்க் ஐ.நா. சபையின் வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.
வன்னி நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற முறையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் பின்னர் ஊடவியலாளர்களைச் சந்தித்தபோதே டேவிட் மிலிபான்ட் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஞ்சர், ஒஸ்ரியாவின் வெளிவிவகார அமைச்சர் மிக்கேல் ஸ்பின்டிலிகர் ஆகியோருடன் இணைந்து இந்த ஊடகவியலாளர் மாநாட்டை அவர் நடத்தினார்.
"இலங்கையில் தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துலகின் கவனத்தை தம்வசம் ஈர்க்கும் அருகதை உடையவை எனவும், அந்த விடயங்கள் தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் டேவிட் மிலிபான்ட் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார்.
"வடபகுதியில் இடம்பெறும் மக்கள் அவலங்களுக்கு அவையே சாட்சிகளாக உள்ளன. அத்துடன், இவை தொடர்பான அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களில் கைச்சாத்திட்டிருக்கின்ற நாம் அனைவரும் அவற்றை உள்ளது உள்ளபடியும், ஆத்ம சுத்தியுடனும் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றது" என இங்கு கருத்து வெளியிட்ட ஒஸ்ரியாவின் வெளிவிவகார அமைச்சர் மிக்கேல் ஸ்பின்டிலிகர், "அவர்கள் அவர்களுடைய மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அந்த மக்களை போர்ப் பகுதியில் இருந்து வெளியே கொண்டுவருவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.
"இந்த நிலைமையில் அங்குள்ள முகாம்களின் நிலைமைகள் தொடர்பாக நாம் எமது கவனத்தைக் குவித்தாகவேண்டும். நாம் கேள்விப்பட்ட தகவல்களின்படி அங்குள்ள நிலைமைகள் மிகவும் அதிர்ச்சி தருவனவாக இருக்கின்றன. அத்துடன், அந்த முகாம்களுக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதைக் கண்காணிப்பதற்காக சுயாதீனக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்க வேண்டும்" என்றும் ஒஸ்ரிய அமைச்சர் தெரிவித்தார்.
"இலங்கையில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படும் நிலையில் அந்நாட்டுக்கு இன்னமும் எவ்வாறு அனைத்துலக நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) கடன்கள் கிடைக்கின்றன" எனக் கேள்வி எழுப்பினார் பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஞ்சர்.
"அங்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி விடுதலைப் புலிகளுடனான 25 வருடகாலப் போரில் அங்கு என்ன சோகங்கள் இடம்பெற்றன என எமக்கு முழுமையாகத் தெரியாது என யாரும் நம்பவேண்டாம். ஆனால் நாங்கள் அதிர்ச்சியடைந்து போயிருக்கின்றோம். இது அதிர்ச்சிக்கும் மேலான ஒரு நிலைமை. அந்தப் பகுதியில் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிலையை, மடிந்துகொண்டிருக்கும் ஒரு கோக்கை எம்மால் ஆதரிக்க முடியாது" எனவும் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.
Comments