பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர்
நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கள் அனைத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தால் செயலிழந்துள்ளன.
வன்னியில் இடம்பெறும் போர் தொடர்பாகவும், அங்கு உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கனடியப் பிரதமர் ஷ்ரீபன் ஹார்பருடன் பேச அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் கூட, அதற்கான அனுமதியை வழங்க காவல்துறையினர் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கார்டினர் நெடுஞ்சாலை இரவு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என காவல்துறையினர் 7:50 நிமிடமளவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பில் கனடிய அரசாங்கம் உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான கோர்மி தேவா தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரொறன்ரோ காவல்துறையைச் சேர்ந்த நூறுக்கும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
இருந்த போதிலும், நகரின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கார்டினர் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக செயலிழந்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாமையால் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான முறுகல்நிலை தீவிரமடைந்தது.
கண்ணீர்ப்புகைக் குண்டுகளைத் தயார் நிலையில் வைத்துள்ள காவல்துறையினர், ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்முடன் ஒத்துழைக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்கள்.
கார்டினர் விரைவுச் சாலையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ள காவல்துறையினர் மேலும் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துடன் வந்து இணைந்துகொள்வதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரொறன்ரோ மாகாண காவல்துறையினரின் உதவியும் கோரப்பட்டிருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குயின்ஸ் பார்க் பகுதியை நோக்கிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கார்டினர் விரைவு போக்குவரத்துப்பாதையை நோக்கி வந்து அந்த வீதியூடனான போக்குவரத்தைத் தடை செய்திருக்கின்றனர்.
Comments